வெற்று அறிவிப்புகளை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தை படுபாதாளத்தில் வீழ்த்திய முதல்வர் பழனிசாமி; ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

வெற்று அறிவிப்புகள், வீண் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் படுபாதாளத்தில் முதல்வர் பழனிசாமி வீழ்த்தியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 49.8 சதவீதமாக அதிகரித்து, தேசிய சராசரியான 23.5 சதவீதத்தை விட இரட்டிப்பாகி வரலாறு காணாத வகையில் வானுயரப் பறந்து கொண்டிருக்கிறது என்பது பேரதிர்ச்சியளிக்கிறது. கடந்த டிசம்பர் 2019-லிருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 10 மடங்காக உயர்ந்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து, நம்பிக்கையை நாசம் செய்து விட்டது.

'வெற்று அறிவிப்புகள்', 'வீண் விளம்பரங்கள்', 'கமிஷனுக்கு விடப்பட்ட டெண்டர் பற்றி மாவட்ட அளவில் ஆய்வுகள்' போன்றவற்றை மட்டுமே முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் வளர்ச்சியையும் படுபாதாளத்தில் வீழ்த்தியிருக்கும் முதல்வர் பழனிசாமியின் தலைமையிலான அதிமுக ஆட்சி, ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் மாபெரும் துரோகத்தையும் செய்திருக்கிறது.

எவ்வித ஒழுங்குமுறையும் இல்லாமல், அறிவியல் ரீதியான காரணங்களும் புரியாமல், கரோனா பேரிடர் ஊரடங்கைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது அதிமுக அரசு. டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டு, பிழைப்பு தேடி வேலைக்குச் செல்வோரைத் தடுத்து, அவர்களைத் தடுமாறச் செய்து வருகிறது.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்ற மாதமே அறிவுறுத்தியும், இ-பாஸ் நடைமுறையை இன்றுவரை, பல வகையான முறைகேடுகளுடன் செயல்படுத்தி, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் தடை செய்து, மக்களை முடக்கிப் போட்டு விட்டது அதிமுக அரசு.

அடுத்தடுத்து அதிமுக அரசு குறுகிய மனப்பான்மையுடன் எடுத்த குதர்க்கமான நடவடிக்கைகளால், கரோனா பேரிடர் காலம் வேலை இழப்பின் உச்சக்கட்ட காலமாகவும், ஏழை - எளிய, நடுத்தரக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஆபத்து நிறைந்த நேரமாகவும் மாறி, 'இனி எங்கே போகும் இந்த வாழ்க்கை?' என்ற பதற்றத்தை ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படுத்தி விட்டது.

தமிழக அரசின், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை' மற்றும் 'மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதத்தில் மட்டும், தமிழ்நாட்டில் சராசரியாக 53 சதவீத வீடுகளில் தலா ஒருவர் வேலை இழந்திருக்கும் கொடுமை அம்பலமாகியிருக்கிறது.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசம் இன்றி, கிராமப்புறங்களில் 56 சதவீதம் குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 50 சதவீத குடும்பங்களிலும் இந்த வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவில் வெளிவந்திருக்கிறது.

கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் இன்றும் வறுமையில் மனம் வாடி வெதும்பித் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள 92 சதவீத வீடுகளில் ஒருவருக்கோ, இருவருக்கோ வருமான இழப்பு ஏற்பட்டு, அந்தக் குடும்பங்கள் எல்லாம் வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு நிற்கும் துயரமயமான சூழல் உருவாகியுள்ளது.

நகர்ப்புறங்களில் இந்த வாழ்வாதார இழப்பு சதவீதம் 95 ஆக அதிகரித்திருக்கிறது என்றால், கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் எந்த அளவுக்கு மிக மோசமாக வாழ்வாதார இழப்பும், பாதிப்பும் தாண்டவமாடியிருக்கிறது, மக்கள் எத்தகையை அபாயகரமான கட்டத்தில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களில் மட்டும் 83.4 சதவீதம் பேர் தங்களது தினசரி வேலையை இழந்து சோக வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் கூட அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் கண்ணுக்குத் தெரியாமல், கதி கலங்கி நிற்கிறார்கள். வாழ்க்கைப் பேரிடரை போக்கவே, குடும்பத்திற்கு 5,000 ரூபாய் நேரடியாகப் பண உதவி செய்யுங்கள் என்று திமுக சார்பில் தொடர்ந்து, இந்த கரோனா கட்டங்களில் பலமுறை ஆக்கபூர்வமான ஆலோசனைகளைச் சொல்லி, அனுதினமும் வலியுறுத்தி வந்தேன்.

திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இதையே வலியுறுத்தியிருக்கிறோம். 'கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதாளத்திற்குப் போய்விட்டதைக் கண் திறந்து பாருங்கள்; வேலை இழந்து தவிக்கும் குடும்பங்களை விரைந்து மீட்டிட உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என்று போராடி வந்திருக்கிறோம்.

ஆனால், முதல்வர் பழனிசாமி தலைமையிலான கல் நெஞ்சம் கொண்ட கஜானாவைக் கொள்ளையடிக்கும் அரசு, அப்பாவி இளைஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலை இழப்பையும் கண்டு கொள்ளவில்லை; கிராமப்புற, நகர்ப்புற மக்களை அவர்களின் மிக மோசமான வாழ்வாதார இழப்பிலிருந்து காப்பாற்றிக் கரை ஏற்ற உதவிக்கரம் நீட்டிடவும் முன்வரவில்லை. மாறாக, ஊரடங்கு பிறப்பித்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் உபத்திரவம் செய்து வருகிறது.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

'முதலீடுகளை ஈர்த்து விட்டோம்', 'புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு விட்டோம்' என்று புழுத்துப்போன பொய்களைத் தினமும் கட்டவிழ்த்து விட்டுக் காலத்தைக் கழித்து வருகிறார்கள், அதிமுக அமைச்சர்களும் முதல்வரும்!

கூவத்தூர் மூலம் முதல்வரான பழனிசாமி, தன் சகாக்களுடன் இணைந்து ஊழல் கூத்தும், கொண்டாட்டமும் நடத்தியே, தனது பதவிக்காலத்தைக் கழித்து விட்டார். அவர் தலைமையிலான ஆட்சி என்ற மோசமான கட்டம் தமிழக மக்களுக்கு அளித்துள்ள மிகத் துயரமான அனுபவங்கள் எண்ணிலடங்காதவை காது கொண்டு கேட்க முடியாதவையாக இருக்கின்றன.

திமுக சொன்ன போது கேட்காதவர்; அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய போது கேட்காதவர்; இப்போது அவர் தலைமையிலான அரசே நடத்தியுள்ள ஆய்வின்படி கரோனா பாதிப்பு குறித்துக் கிடைத்த தகவல்களையாவது நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்ட வேலைவாய்ப்பை மீட்டிடப் புதுச்சேரி அரசு போல் உடனடியாக இ-பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்திட வேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5,000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்றும், உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா மற்றும் கரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, தமிழக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்