ஆயுஷ் துறை செயலரின் அநாகரிகம்; இனி இதுபோன்று நடக்காமல் இருக்க முதல்வர் அழுத்தம் தரவேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கொடேச்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பது, 'மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் எங்களின் திட்டம்' என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சியில் பங்கேற்ற 37 மருத்துவர்களிடம் “இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்” என்று மத்திய பாஜக அரசின் 'ஆயுஷ்' செயலாளர் ராஜேஷ் கொடேச்சா என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத்திருக்கும் அட்டூழியத்திற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர் அரசு அதிகாரி - அதுவும் மத்திய அரசின் செயலாளராக உள்ள ஓர் உயரதிகாரி, இப்படி அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் 'மொழிவெறி' தலைக்கேறி, பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது.

இவருக்கு ஆயுஷ் துறை செயலாளராக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்புக் கொடுத்திருப்பது, ஆவேசத்துடன் இந்திப் பிரச்சாரம் செய்வதற்கும் - நம் அன்னைத் தமிழ் மொழியை அவமதிப்பதற்குமா என்ற கோபம் கலந்த கேள்வி தமிழக மக்கள் மனதில் இயல்பாகவே எழுந்துள்ளது.

இயற்கை மருத்துவம் குறித்தும் ஆன்லைன் பயிற்சி என்று அறிவித்துவிட்டு யோகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்துள்ளார் அந்த அரசு செயலாளர். அதைச் சுட்டிக்காட்டி - ஆங்கிலத்தில் பயிற்சி கொடுங்கள் என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர்கள் மீது எரிந்து விழுந்துள்ள ஆயுஷ் செயலாளர், தன்னை எதிர்த்துப் பேசிய தமிழக இயற்கை மருத்துவர்களின் பெயர்களைக் கேட்டு அச்சுறுத்தியிருப்பது - அவர் வகிக்கும் உயர்ந்த பதவிக்கும், முதுநிலைக்கும் சிறிதும் பொருத்தமானதல்ல!

ஓர் உயரதிகாரிக்கு இலக்கணமான கண்ணியத்திற்கும், நியாய உணர்வுக்கும், சமநிலை மனப்பான்மைக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என்றெண்ணி அவர் எல்லை மீறி நடந்து கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.

“2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு விதி” தொடர்பான வழக்கில், “மத்திய அரசின் அறிவிப்புகளை அரசியல் சட்டத்தில் உள்ள 22 மொழிகளிலும் ஏன் வெளியிடக் கூடாது? நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் அதில் உங்களுக்கு என்ன சிரமம்? அலுவல் மொழிச் சட்டத்தை அதற்கு ஏற்றாற்போல் திருத்துங்கள்” என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமே சமீபத்தில் அறிவுரை வழங்கியிருக்கிறது .

மாநில மொழிகளில் - குறிப்பாக அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள அலுவல் மொழிகளில், உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அக்கறை - மத்திய பாஜக அரசுக்கு இல்லாமல் போனது மிகுந்த வருத்தத்திற்குரியது.

மத்தியில் உள்ள பாஜக அரசு இந்தித் திணிப்பு ஒன்றே தங்களின் ‘முதல் அஜெண்டா’ என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு, அனைத்து மாநில மொழிகளுக்கும் - குறிப்பாகத் தமிழ்ச் செம்மொழிக்குக் கிடைக்க வேண்டிய பெருமையைத் திட்டமிட்டுச் சீர்குலைத்து வருகிறது.

ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் “இந்தி தெரிந்தால்தான் இந்தியர்” என்பது போல் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழியிடம் வீண் வம்பு செய்த அதிகாரி மீது அப்போதே மத்திய பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் - நேற்றைக்கு ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இப்படி மொழி வெறி பிடித்துப் பேசியிருக்க மாட்டார்.

ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பது - ‘மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் எங்களின் திட்டம்’ என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ‘இந்தியை யார் மீதும் திணிக்கமாட்டோம்’ என்ற தேசிய கல்விக் கொள்கை அறிவிப்பில் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஆகவே, தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கொடேச்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் கூட்டங்கள், இதுபோன்ற ‘ஆன்லைன்’ பயிற்சிகள் போன்றவற்றில் தமிழகத்திலிருந்து பங்கேற்போரை அவமதிக்கும் இத்தகைய தரக்குறைவான போக்கு கைவிடப்படவேண்டும் என்றும் - அதுபோன்ற பயிற்சிகள், கூட்டங்கள் அனைத்தும் இந்தி பேசாத மாநில மக்களின் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்