ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்; இந்தியைத் திணிக்கும் போக்கைத் தொடர்ந்தால் போராட்டம்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இந்தியைத் திணிக்கும் போக்கைக் கையிலெடுப்பதும், சித்த மருத்துவத்தைப் புறக்கணிப்பதையும் கண்டித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதேபோக்கு தொடர்ந்தால் காங்கிரஸ் போராட்டத்தைக் கையிலெடுக்கும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

''மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு இந்தி பேசாத மக்கள் மீது திணிப்பதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு 3 நாள்களாக இணைய வழிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் இந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் அனைவரும் இந்தியிலேயே உரையாற்றியதால், 'எங்களுக்கு இந்தி புரியவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள்' என்று கூறிய தமிழக மருத்துவர்களை, 'இந்தி தெரியவில்லையென்றால் என்றால் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று கூறி அவமதித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு ஏற்பாடு செய்த இணைய வழிக் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து 38 பேருக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வகுப்புகளில் பேசிய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலத்தைப் புறக்கணித்துப் பிடிவாதமாக இந்தியில் மட்டுமே பேசினார்கள்.

ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இந்தியில் பேசியபோது தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒருவர், 'ஆங்கிலத்தில் பேசுங்கள்' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜேஷ் கொடேச்சா, 'இந்தியாவின் ஆட்சி மொழியான இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் பேசமாட்டேன். இந்தி தெரியாதவர்கள் இந்த பயிற்சி வகுப்பை விட்டு வெளியேறுங்கள்' என்று ஆணவமாக உரத்த குரலில் கூறினார்.

அதேபோல, அனைவரும் இயற்கை மருத்துவத்தைத் தவிர்த்து விட்டு யோகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒருவர், 'யோகாவும், இயற்கை மருத்துவமும் ஒரே பிரிவில்தானே வருகின்றன. நீங்கள் ஏன் பிரித்துச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு அந்த மருத்துவரை, 'பயிற்சியை விட்டு வெளியில் போ' என்று அந்த அதிகாரி மிரட்டல் விடுத்தார். இந்தி தெரியாத மருத்துவர்கள் இந்தப் பயிற்சி வகுப்புக்குத் தேவையில்லை என்ற அணுகுமுறையில்தான் ஆயுஷ் அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் அனைத்தும் இருந்தன.

ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேத மருத்துவத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை இயற்கை, சித்த மருத்துவத்திற்குத் தராமல் புறக்கணித்தன. ஆயுஷ் என்கிற ஆங்கில எழுத்து ஒவ்வொரு மருத்துவத்துறையையும் குறிக்கும். இதில் 'எஸ்' என்ற எழுத்து சித்த மருத்துவத்தைக் குறிப்பதாகும்.

மத்திய அரசு சித்த மருத்துவத்துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியதால் ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரிலிருந்து சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் 'எஸ்' என்ற எழுத்தை நீக்கிவிடலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அண்மையில் கண்டனம் தெரிவித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புதிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்போடு சமஸ்கிருத்தத்தையும் திணிக்கிற முயற்சி நடைபெற்று வருகிறது. அதேபோல, சூழலியல் மதிப்பீட்டு அறிக்கையை இந்தி, ஆங்கிலம் தவிர அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

எந்த வகையிலாவது ஆர்எஸ்எஸ் ஜனசங்கம், பாஜக கொள்கையாகவுள்ள இந்தி, சமஸ்கிருதம் மொழிகளைத் திணிப்பதில் தீவிரமாக மத்திய அரசு இருக்கிறது. இது இந்தி பேசாத மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆயுஷ் அமைச்சகத்தின் இணைய வழிக் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து 38 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி அறிந்திருந்தாலும் இந்தியில் மட்டும்தான் பேசுவோம் என்று பிடிவாதம் காட்டியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

இந்தி பேசாத மக்களுக்கு ஆங்கிலத்தின் மூலம்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆட்சி மொழி சட்டத் திருத்தம் கூறுகிறது. இதன் மூலம் பண்டித நேரு ஆகஸ்ட், 1959 மற்றும் ஆகஸ்ட், 1960 களில் நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியும் பிறகு பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி மொழி சட்டத்தில் 1967 இல் திருத்தம் கொண்டு வந்து சட்டப் பாதுகாப்பு வழங்கினார்.

அத்தகைய சட்டப் பாதுகாப்பை மீறுகிற வகையில் மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் இந்தி மொழியை இந்தி பேசாத மக்களிடம் திணித்திருக்கின்றனர். இத்தகைய போக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்குத் தீர்வு காணுகின்ற வகையில் இத்தகைய மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையைப் பிறப்பிப்பதற்கு பிரதமர் மோடி உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொள்ளவில்லையெனில், இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழியை பாதுகாக்கிற வகையில் தீவிரமான போராட்டத்தை மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகின்றேன்''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்