ஓர் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர், தனது ஆசிரியரின் பெயரையே, மகனுக்கும் வைத்திருந்தது மாணவர் சேர்க்கையின்போது தெரியவந்தது.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி. வனப் பகுதியையொட்டியுள்ள இப்பள்ளியில் 850 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பழங்குடியின மாணவர்கள் அதிகம் பயிலும் இப்பள்ளி, 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று, கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஆண்டுதோறும் சேர்க்கைக்காக இப்பள்ளிக்கு மாணவர்கள் திரண்டு வருவார்கள். கடந்த 17-ம் தேதி முதல் 2020-2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளி ஆசிரியர் அருள்சிவா, மாணவர் சேர்க்கைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, 6-ம் வகுப்பில் சேர வந்த மாணவர் ஒருவரின் பெயரும் அருள்சிவா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வியப்படைந்த ஆசிரியர், இதுகுறித்து மாணவரிடம் கேட்டபோது, "எனது தந்தைதான் இப்பெயரை வைத்தார்" என்றார். இதையடுத்து, மாணவரின் தந்தை நாகராஜை சந்தித்த ஆசிரியரிடம், "நான் உங்களிடம் படித்த மாணவன். உங்களுடைய பெயரைத்தான் எனது மகனுக்கு சூட்டியுள்ளேன்" என்று கூறவே, நெகிழ்ந்து போனார் ஆசிரியர் அருள்சிவா.
இதுகுறித்து நாகராஜ்(42) கூறும்போது, "நான் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில்தான் படித்தேன். அப்போது எங்களுக்கு ஆசிரியராக இருந்த அருள்சிவா, நன்றாகப் பாடம் நடத்துவார். எந்த நேரத்திலும் பாட சந்தேகங்களை தயக்கமின்றி தீர்த்து வைப்பார். மாணவர்களுக்கு உதவுவதிலும், நல்வழிப்படுத்துவதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதேநேரம், தவறு செய்தால் தண்டிக்கத் தவறமாட்டார். இதனால், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவேதான், எனது மகனுக்கு ஆசிரியரின் பெயரையே சூட்டினேன். நான் படித்த ஆசிரியரிடமே, எனது மகனும் படிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரைப்போலவே உயர்ந்த உள்ளம் கொண்டவனாக எனது மகன் திகழ வேண்டுமென்பதே எனது விருப்பம்" என்றார்.
ஆசிரியர் அருள்சிவா கூறும்போது, "எனது முன்னாள் மாணவர், தனது மகனுக்கு என்னுடைய பெயரை வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர் அருள்சிவாவின் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக வாக்களித்துஉள்ளேன். அனைத்து மாணவர்களையும் நல்வழிப்படுத்தி, நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago