இலங்கைத் தமிழர்களுக்கு ராஜீவ் காந்தி பெற்றுத் தந்த உரிமைகளை 13-வது திருத்தத்தின்படி பாதுகாத்திட வேண்டும் என, மத்திய அரசை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக.21) வெளியிட்ட அறிக்கை:
"சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ச தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக செல்வாக்குடன் இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அந்த எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது தமிழ் கட்சிகளின் பலத்தை பலகீனமடையச் செய்துள்ளது.
இதற்கு காரணம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கிற தமிழர் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான். முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாகவும், அதேபோல, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திர குமார் பொன்னம்பலமும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
145 இடங்களில் வெற்றி பெற்ற ராஜபக்ச தலைமையிலான பொது ஜன பெரமுனாவுக்கு எதிர்க்கட்சியாக சஜீத் பிரேமதாசா கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இவருடைய தந்தை பிரேமதாசாவை விடுதலைப் புலிகள் கொன்ற காரணத்தால் தமிழர்கள் உரிமைகளுக்காக பிரதான எதிர்க்கட்சி குரல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
அதேபோல, மைத்ரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே போன்றவர்கள் தோல்வியை தழுவியிருக்கிறார்கள்.
பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிற ராஜபக்ச நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டி 19-வது திருத்தத்தை ரத்து செய்ய இருக்கிறார். இதன் மூலம் அதிபரின் அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறார். ராஜபக்சஷேவிடம் அதிகாரம் குவியக், குவிய தமிழர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்படுகிற நிலை ஏற்படுகிறது.
ஜுன், 1987 இல் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அதிபர் ஜெயவர்த்தனாவுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தத்தின் மூலம் கணிசமான உரிமைகள் பெறப்பட்டன. ராஜீவ் காந்தியின் உடன்படிக்கையின்படி தமிழ் தாயகம் என்ற நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பரவியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள மாகாணங்களைப் போல் ஒரு மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாக வழி ஏற்பட்டது.
1956 முதல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நியாயமற்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்ற சமவுரிமை பெறப்பட்டது. இத்தகைய உரிமைகள் பெறப்பட்டதன் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் வரதராஜ பெருமாள் தலைமையில் அமைக்கப்பட்டதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது ஆகும். ஆனாலும், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு சி.வி. விக்னேஸ்வரன் முதல்வராக செயல்பட்டதை எவரும் மறந்திட முடியாது.
ராஜீவ் காந்தி 1987 இல் ஏற்படுத்திய இந்திய - இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அதிக அதிகாரங்கள் தமிழர்களுக்கு அந்த மாகாணங்களில் வழங்கப்பட்டது. இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம் 13-வது திருத்தம் தான்.
ஆனால், தமிழர்களுக்கு எதிரான கடுமையான போக்குக் கொண்ட ராஜபக்ச சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை அணி திரட்டுகிற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம், அரசியல் லாபத்தை பெற்றிருக்கிறார். இந்த வெற்றியை குறித்து ராஜபக்ச குறிப்பிடுகிற போது, இந்தியாவில் நரேந்திர மோடி எத்தகைய உத்தியை கையாண்டாரோ அதே உத்தியை இலங்கையில் கையாண்டு வெற்றி பெற்றதாகக் கூறியிருக்கிறார்.
நரேந்திர மோடி பாதையில் ராஜபக்ச சென்று கொண்டிருக்கிறார். இந்தியாவில் எப்படி சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்களோ, அதைப்போலவே இலங்கையில் வாழ்கிற தமிழர்கள், முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற தன்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். தங்களது எதிர்காலம் கேள்விக்குறியானது குறித்து மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், புவிசார் அரசியலைப் பொறுத்தவரை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அம்பன்தோட்டா துறைமுக திட்டதில் சீனா அதிக நிதியை ஒதுக்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரே நேரத்தில் சீனாவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும் நிதியை கேட்டு பெறுகிற முயற்சியில் ராஜபக்ச ஈடுபடுகிறார்.
அண்டை நாடாக இருக்கிற இந்தியாவை விட சீனாவோடு அதிக நெருக்கம் காட்டுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இலங்கை நாட்டை பொறுத்தவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.
ஏற்கெனவே, தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் ஏறத்தாழ 1 லட்சம் அகதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் குறித்து ஒரு செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை தேர்தலுக்குப் பிறகு ராஜபக்ச தலைமையில் அமைந்திருக்கிற அரசால் இலங்கை தமிழர்கள் ராஜீவ் காந்தியின் முயற்சியால் 13-வது திருத்தத்தின் மூலம் பெற்ற உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பறிப்பதற்கு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அண்டை நாடான இந்தியாவுக்கு இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago