வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் உடல் சொந்த ஊரில் அடக்கம்: இறுதிச் சடங்கில் டிஜிபி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் உடல் அவரது சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்தில் 30 குண்டுகள் முழங்க இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள மங்கலக்குறிச்சியை சேர்ந்த பிச்சையா பாண்டியன் மகன் துரைமுத்து (30). இவர் மீது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் கடந்த 24.11.2018-ல் வினோத், ராமச்சந்திரன் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த துரைமுத்து தலைமறைவாகிவிட்டார்.

அவரைப் பிடிக்க ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படையை எஸ்பி ஜெயக்குமார் அண்மையில் அமைத்தார். இந்த தனிப்படையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த, ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுப்பிரமணியனும் (28) இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் துரைமுத்து வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் மலையடிவாரத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் முருகபெருமாள் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர்.

மணக்கரை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் துரைமுத்து மற்றும் 3 பேர் பதுங்கி இருந்ததை கண்ட போலீஸார், அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து துரைமுத்து அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீஸார் துரத்திச் சென்றனர். அவரை பிடிக்கும் தூரத்தில் போலீஸார் நெருங்கிய போது துரைமுத்து தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தூக்கி போலீஸார் மீது வீசினார். இந்த வெடிகுண்டு காவலர் சுப்பிரமணியன் மீது விழுந்து வெடித்து சிதறியது. மேலும், வெடிகுண்டு வெடித்ததில் அவருக்கு மிக அருகிலேயே இருந்த ரவுடி துரைமுத்துவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த துரைமுத்துவை போலீலார் தங்கள் வாகனத்தில் ஏற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். துரைமுத்துவுடன் பதுங்கியிருந்த அவரது சகோதரர் சாமிநாதன், வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணு மற்றும் சிவராமலிங்கம் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் சுப்பிரமணியனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை 4 மணியளவில் அவரது சொந்த ஊரான ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி தனது 10 மாத கைக்குழந்தையுடன் கதறி அழுதது நெஞ்சை நெகிழ வைத்தது.

பின்னர் அவரது உடல் அடக்கம் செய்வதற்காக, ஊருக்கு அருகேயுள்ள அவர்களுக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட போலீஸார் அவரை உடலை சுமந்து வந்தனர்.

தொடர்ந்து தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் தனப்பிரியா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பலர் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரை டிஜிபி, ஆட்சியர், எம்எல்ஏ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் 10 காவலர்கள் மூன்று முறை (30 குண்டுகள்) வானத்தை நோக்கி சுட்டு மறைந்த காவலர் சுப்பிரமணியனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து குடும்ப முறைப்படி சுப்பிரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் உறவினர்கள், நண்பர்கள், காவல் துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்