கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் இன்று (ஆக.18) நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், ஆலையைத் திறப்பதற்கான தடை நீடிக்கும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர்
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.
ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர்
இந்த தீர்ப்பு வரவேற்கத்தகுந்த சிறந்த தீர்ப்பு. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அரசு எடுத்த முடிவை உயர் நீதிமன்ற தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது. தமிழக அரசின் சார்பில் நல்ல வாதங்களை எடுத்துவைத்துள்ளோம். அதில் வெற்றி கண்டுள்ளோம்.
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
இந்த தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. 13 உயிர்கள் சிந்திய ரத்தத்திற்குக் கிடைத்த நீதி. கடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலவித போராட்டங்களை நடத்தி வந்த மதிமுகவுக்கு இது மகிழ்ச்சியான செய்தி.
ராமதாஸ், நிறுவனர், பாமக
மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான மைல்கல் ஆகும். இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்துள்ள வெற்றி ஆகும். இந்த வெற்றி வீழ்த்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த ஆணை மிகவும் நியாயமானது. அந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. காரணம்... ஸ்டெர்லைட் ஆலை நிகழ்த்திய சுற்றுச்சூழல் சீரழிப்புகள் ஏராளமானவை.
ஸ்டெர்லைட் ஆலை 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே விதிமீறல்கள் தொடர்ந்தன. ஆலை தொடங்கப்பட்டதற்கு பிந்தைய கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் கொல்லப்பட்டாலும் இருவர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்குக்காட்டப்பட்டது. 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல் 2013-ம் ஆண்டு வரை 82 முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இன்று வரை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். 1994 முதல் 2004-க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சூழல் ஆர்வலர்கள் குற்றம்ஞ்சாட்டுகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையின் தீய விளைவுகளை உணர்ந்ததால் தான் அந்த ஆலையை மூடும்படி 2010-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. எனினும், 2013-ம் ஆண்டில் ரூ.100 கோடி அபராதம் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தான் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடைபிடிக்கவே இல்லை. ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியில் நிலப்பகுதியிலும், கடல் பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை இப்போது மட்டுமின்றி, எப்போதுமே திறக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டது என்பதாலேயே, அந்த ஆலைக்கு எதிரான மக்களின் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தமல்ல. கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் தடை விதித்த போதெல்லாம், உச்ச நீதிமன்றத்தை அணுகி அந்த தடையை ஸ்டெர்லைட் தகர்த்தது மறக்கக்கூடாத வரலாறு ஆகும்.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப் படுவதையும், ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும், என கூறி வேதாந்த நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது உயிர் ஈகை செய்து நடத்திய மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இதன் மீது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை நிலை நிறுத்தப்பட்ட சட்ட நிலையை உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, வழக்கை எச்சரிக்கையாகவும், வாதங்களை உறுதியாகவும் முன் வைத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும். சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
பல்லாண்டுகளாக போராடி வந்த தூத்துக்குடி பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இத்தீர்ப்பு காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியான 15 தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிற தீர்ப்பு என்பதையும், அவர்களது தியாகம் வீண் போகவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை எதிர்த்து எண்ணற்ற வலி, வேதனைகளோடு போராட்டங்கள் நடத்திய அனைத்துப்பகுதி மக்களுக்கும், நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
வேதாந்தா நிறுவனம் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் உரிய நியாயத்தைப் பெற அழுத்தமான வாதங்களை எடுத்து வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, இந்த ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் வரை ஒன்றுபட்ட போராட்டத்தை அனைவரும் முன்னெடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.
தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.
வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் அங்கேயும் தமிழக அரசின் சார்பில் பொருத்தமான வழக்கறிஞர்களை நியமித்து இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனாலும் அங்கும் நீதி நிலைநாட்டப்படுவதற்கு இந்தத் தீர்ப்பு உதவும் என்று நம்புகிறோம்.
துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளாகியும் எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. அதுபோலவே இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 4 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் சிபிஐ அதில் குற்றப்பத்திரிகையைக்கூட தாக்கல் செய்யவில்லை. இப்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் நீதி வழங்கி இருப்பது போலவே துப்பாக்கிச் சூடு வழக்கிலும் நீதி வழங்கப்படவேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை மக்கள் எதிர்நோக்குகின்றனர். இதை உயர் நீதிமன்றம் கவனத்தில்கொண்டு விரைந்து அந்த வழக்கிலும் நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும். இதில், தமிழக அரசு விழிப்புணர்வோடு இருந்து உச்ச நீதிமன்றத்திலும் நீதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்திருப்பது அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை நிரந்தரமாக்குகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.
சட்டத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2020
கனிமொழி, திமுக எம்.பி.
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சூழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.#Sterlite— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 18, 2020
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்லும். அங்கும் இதைப்போன்ற முடிவே வர வேண்டும். அதற்கான சட்டப் போராட்டங்களை மக்களுடன் இணைந்து நாங்கள் மேற்கொள்வோம். இந்த தீர்ப்பை முழு மனதாக வரவேற்கிறேன். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி.
சரத்குமார், தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருப்பது நீதியை நிலைநாட்டி கிடைக்கப்பெற்ற நியாயமான சிறப்புமிக்க தீர்ப்பாகும்.
பல லட்ச மக்கள் போராட்டத்தின் வெற்றியாக, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்று அறிவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்ற தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டத்திற்கும் அவர்களின் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். தொழிற்சாலைகள் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக அமைய வேண்டுமே ஒழிய அழிப்பதாக அமைய கூடாது. இந்த தீர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசு அவற்றை எதிர்கொண்டு வெற்றிகொள்ளும், மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago