யூபிஎஸ்சி தேர்வில் தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வியை தழுவினாலும், தங்களின் விடா முயற்சியாலும் தன்னம்பிக்கை மற்றும் குடும்பம் அளித்த ஊக்கத்தாலும், அனைத்துத் தடைகளையும் கடந்து, நான்காவது முறை வெற்றி கண்டுள்ள 3 இளம் பெண்கள், தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
"விளிம்பு நிலை மக்களுக்காக பணியாற்றுவேன்" - மல்லிகா
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் உள்ள ஓர் சிறிய பழங்குடி கிராமம் கக்குலா. படுகர் பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார், 25 வயதான மல்லிகா. 'கல்விதான் வளர்ச்சியைத் தரும்', என்ற பெற்றோரின் வார்த்தைகள் தான், படுகர் பழங்குடி இன மாணவியான மல்லிகாவை சாதனை படைக்க வைத்துள்ளது.
யூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர்ச்சியாக முதல்நிலை தேர்விலேயே தோல்வியை சந்தித்தாலும், விடா முயற்சியால் பயின்று தன் நான்காவது முயற்சியில் இந்திய அளவில் 621-வது ரேங்க் பெற்று யூபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளார். மல்லிகாவிடம் பேசினோம்.
"அப்பா சுந்தரன், சிறிய அளவில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். அம்மா சித்ரா தேவி, கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக இருக்க வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் கூறுவார்கள். படிப்பு ஒன்றுதான் வருங்காலத்தில் கைகொடுக்கும் என்பதுதான் அவர்கள் எனக்கு சொல்லி வந்தது.
அம்மா - அப்பாவின் ஊக்கத்தால் தான் படிக்க முடிந்தது. அவர்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும் என் படிப்புக்காகவும் யூபிஎஸ்சி பயிற்சிக்காகவும் செலவழித்தனர். வசதியான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு எனக்காக எல்லாமே செய்தனர். கல்வியில் எனக்கு எல்லாம் சிறப்பானதாக கிடைக்க வேண்டும் என நினைத்தனர்.
அவர்கள் எனக்கு உதவியாக இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. 'நீ பெண், இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று எனக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அப்பாவுக்கு 66 வயது, அம்மாவுக்கு 60 வயது. இந்த வயதில்தான் அவர்களுக்கு ஒரு ஓய்வான நேரத்தை என்னால் கொடுக்க முடிந்திருக்கிறது.
8-ம் வகுப்பு வரை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியிலும் அதற்கு பிறகு குன்னூரில் உள்ள கான்வென்ட் பள்ளியிலும் பயின்றேன். 10-ம் வகுப்பில் 473 மதிப்பெண்கள் பெற்றேன். 12-ம் வகுப்பில் 1140 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பிறகு, அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி படித்தேன்.
எங்கள் பல்கலைக்கழகத்தில் நிறைய பேர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்கள் பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். அவர்கள் கல்லூரிகளுக்கு வந்து ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவார்கள். அப்போதுதான் எனக்கு யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கல்லூரியிலேயே வகுப்புகள் முடிந்தவுடன் யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
நகரங்களில் உள்ள வசதிகள் எனக்குக் கிடைத்ததில்லை. கிராமங்களில் உள்ள வசதிகளை வைத்துத்தான் படித்தேன். 2016-ல் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு யூபிஎஸ்சி தேர்வுக்கு முழுமையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். சென்னையில் தான் நான்கு ஆண்டுகள் படித்தேன். மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி மற்றும் சந்தோஷ் சபரி இன்ஸ்டிட்யூட்டில் படித்தேன்.
மூன்று முறை என்னால் முதல்நிலை தேர்விலேயே வெற்றியடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். மிகவும் கஷ்டமானதாகத்தான் இருக்கும். ஆனால், அதனையும் மீறி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பெற்றோரும் இதனை தோல்வியாக எடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளித்தனர்" என்கிறார், மல்லிகா.
அகில இந்திய அளவில் 621-வது ரேங்க் பெற்றுள்ள மல்லிகா, மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் யூபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று ஐஏஎஸ் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என கூறுகிறார். தற்போது தனக்கு ஐ.ஆர்.எஸ். பணி கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கும் மல்லிகா, குடிமைப் பணி அதிகாரியாக தான் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
"யூபிஎஸ்சி பயிற்சியின் போதுதான் எனக்கு சமூகம் மீதான புரிதல் அதிகரித்தது. ஒரு அதிகாரியால் நாட்டுக்கு எவ்வளவு பங்கு செலுத்த முடியும் என்பது புரிந்தது. யூபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி தனிப்பட்ட முறையில் என்னை வளர்த்தெடுத்தது. நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தனித்துவமான அதிகாரியாக இருக்க வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறிப்பாக வளர்ச்சி சென்றடையாத மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக உழைப்பேன்.
இணைய வசதி, திறன் மேம்பாடு உள்ளிட்டவை பழங்குடி கிராமங்களில் அவ்வளவாக கிடைக்காது. அப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கான முன்மாதிரியாக நான் இருப்பேன்.
யூபிஎஸ்சி தேர்வெழுத விரும்புபவர்களுக்கு அரசு சார்பாக நிறைய உதவிகள் செய்யப்படுகின்றன. அரசின் பயிற்சி மையம் சென்னையில் உள்ளது. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் இலவச பயிற்சி மற்றும் இலவச தங்கும் வசதிகள் அங்கு கிடைக்கின்றன. தரமான உணவு வழங்கப்படுகின்றது. நல்ல நூலகம் இருக்கின்றது. இதனை மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன். நம் மாநிலத்தில் இந்த வசதிகள் கிடைக்கின்றன. நாம் வெற்றி பெற வேண்டும் என மாநில அரசு ஊக்கப்படுத்துகிறது.
நன்றாக படிப்பவர்கள் தான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. விடா முயற்சி வேண்டும். நமக்கு நாமே ஊக்கமளித்துக்கொள்ள வேண்டும்" என மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார், மல்லிகா.
"உங்களை தாங்கிப் பிடிக்கும் முதல் நபராக நீங்கள் தான் இருக்க வேண்டும்" - பூர்ண சுந்தரி
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பூர்ண சுந்தரியின் வெற்றி, உடல்ரீதியாக உள்ள குறைபாடுகள் தங்கள் இலக்கை அடைவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். பார்வைத்திறன் அற்ற பூர்ண சுந்தரி, 4-வது முயற்சியில் யூபிஎஸ்சி தேர்வில் அனைத்திந்திய அளவில் 286-வது ரேங்க் பெற்று வென்றுள்ளார். 25 வயதான பூர்ண சுந்தரிக்கு, யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராவதிலேயே பல சிரமங்கள் இருந்துள்ளன. அவரிடம் பேசினோம்.
"அம்மா - ஆவுடைதேவி, அப்பா-முருகேசன். அப்பா, விற்பனை நிர்வாகியாக உள்ளார். அம்மா வீட்டில் இருந்து எனக்கு படிப்பில் பக்கபலமாக இருந்தார். 2 ஆம் வகுப்பு வரை அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் படித்தேன். அதன்பிறகு எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பார்வைத்திறன் குறைய ஆரம்பித்தது. அதனால், சிறப்பு ஆசிரியர்கள் உள்ள ஒருங்கிணைந்த பள்ளியில் சேர்ந்து படித்தேன். 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தேன். பள்ளி முடிந்தாலும் சிறப்பு ஆசிரியர்கள் எனக்கு மாலையில் வகுப்புகள் நடத்துவார்கள். பள்ளிப்பாடங்களை 'பிரெய்லி' முறையில் எழுத எனக்குப் பயிற்சி அளிப்பார்கள். 'டேப் ரெக்கார்டரில்' பாடங்களை பதிவு செய்து வீட்டில் படிப்பேன்.
11-ம் வகுப்பு படிக்கும்போது, அறிவியலில் எனக்கு ஆர்வம் இருந்தும், செய்முறை பயிற்சிகளை என்னால் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது. அதனால், வணிகவியல் பிரிவில் படித்தேன். எனக்குப் பிறகு அந்த பிரிவு மிகவும் பிடித்துவிட்டது. சிறப்பாக படித்தேன்.
12-ம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முழுமையாக பார்வைத்திறன் போய்விட்டது. அதன்பிறகு, மதுரை பாத்திமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்தேன். முதல் தலைமுறை என்பதால் உதவித்தொகை மூலமே கல்லூரிப் படிப்பு வரை படித்தேன். அதனால் அப்பாவின் வருமானம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது.
2012-ல் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை பெற்ற முதல் 'பேட்ச்' நாங்கள் தான். இப்போது வரை நான் அந்த மடிக்கணினியில் தான் படிக்கிறேன். 8 ஆண்டுகளாக எனக்கு முழுதும் பலமாக இருந்தது அந்த மடிக்கணினிதான். மடிக்கணினியை 'ஆன்' செய்ததிலிருந்து 'ஷட் டவுன்' செய்வது வரை ஒலி வடிவில் அனைத்தையும் சொல்லும் வடிவிலான மென்பொருள் அதில் இருக்கிறது. அந்த மடிக்கணினி எனது மிகப்பெரும் பலம். நான் தமிழ்நாடு கிராம வங்கியில் கிளார்க்காக உள்ளேன். அதனால் பயிற்சிகளை மேற்கொள்வதில் பொருளாதார ரீதியில் பெரும் சிரமங்கள் ஏற்படவில்லை" என்கிறார், பூர்ண சுந்தரி.
குடிமைப் பணிகள் மீது தனக்கிருந்த ஆர்வம் குறித்தும் பார்வைத்திறன் இன்றி அதற்கான தேர்வுகளை எதிர்கொள்வதில் இயல்பாக எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பூர்ணசுந்தரி.
"11-12 ஆம் வகுப்பு படிக்கும்போது சமூகத்தில் மாவட்ட ஆட்சியரின் பங்கு குறித்து எனக்கு அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அதுகுறித்த தெளிவு இல்லை. கல்லூரியில் தான் யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என தோன்றியது. அப்போதுதான் சிவில் சர்வீஸ் என்பது மாவட்ட ஆட்சியர் பணி மட்டுமல்ல என்பது புரிந்தது. ஐஏஎஸ் என்றால் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, அதற்கடுத்த நிலைகளில் பல பணிகள் உள்ளன. அதன்மூலம் சமூகத்திற்கு பெரும் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் யூபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். பயிற்சிக்காக சென்னை செல்லும்போதுதான் பெற்றோர்கள் யோசித்தனர். நான் கஷ்டப்படக்கூடாது என நினைத்தனர். என்னை என்னால் கவனித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் சென்னை சென்றேன். நண்பர்கள் உதவுவார்கள். ஆனால் முழுதும் மற்றவர்களை சார்ந்திருக்க மாட்டேன்.
அம்மா, அப்பா காலையில் எனக்காக செய்தித்தாள் வாசித்துக்காட்டுவார்கள். 'இந்து தமிழின்' நடுப்பக்கங்களை தவறாமல் 'கட்' செய்து எடுத்துக்கொள்வேன். தமிழில் தான் முதன்மை தேர்வை எழுதினேன். தமிழ் இரண்டாம் தாளுக்கான புத்தகங்களை அம்மாவிடம் தான் கொடுத்து வைத்திருப்பேன். இலக்கியம், வரலாறு என எல்லாவற்றையும் அம்மா தான் வாசித்துக்காட்டுவார். தேர்வு நடக்கும்போது அம்மா என்னுடன் தான் தங்குவார்.
2016-ல் முதல்நிலை தேர்வில் தோல்வி. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை எழுதும்போது முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். 10-11 மதிப்பெண்களில் போய்விட்டது.
தோல்வியடையும்போது சோர்வாகி அழுதிருக்கிறேன். அன்றைய இரவே அடுத்தத் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்துவிடுவேன்.
என் நம்பிக்கையையும் உழைப்பையும் விட்டுக்கொடுத்ததில்லை. எந்த சூழ்நிலையிலும் நம்மை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் உங்களை தாங்கிப் பிடிக்கும் முதல் நபராக நீங்கள் தான் இருக்க வேண்டும். உங்களை முதலில் நீங்கள் தான் நம்ப வேண்டும்.
தேர்வுக்கான பயிற்சிகளின்போது நான் படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் ஆடியோ வடிவில் கிடைக்கவில்லை. அதனை சேகரிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியம் இருந்தது. அதற்கான புத்தகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆடியோ வடிவில் இருந்தன. ஆனால், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள், புவியியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல பாடங்களின் புத்தகங்கள் எனக்கு ஆடியோ வடிவில் கிடைக்கவில்லை.
அதன்பிறகுதான் என்னுடைய நண்பர்கள், தன்னார்வலர்கள் மூலமாக பாடக்குறிப்புகளை ஒலி வடிவில் பதிவு செய்து, அதனை என் செல்போனில் எழுத்து வடிவில் பதிவேற்றிக்கொள்வேன். செல்போனில் உள்ள என்விடிஏ (NVDA) செயலி, அதனை ஒலி வடிவில் எனக்கு சொல்லும்.
மனித நேயம் அறக்கட்டளை, சென்னை அடையாறில் உள்ள தமிழக அரசின் அனைத்து இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், ஃபோக்கஸ் பயிற்சி மையம், சங்கர் அகாடமி ஆகியவற்றில் பயிற்சிகள் மேற்கொண்டேன். அரசுப்பயிற்சி மையம் மிக அருமையான பயிற்சி மையம். நல்ல உணவு, நல்ல நூலகம் இருக்கும். சங்கர் அகாடமியில் நேர்காணலுக்கான பயிற்சிகளை எடுத்தேன்.
என்னுடைய ரேங்க்குக்கு ஐஏஎஸ் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. கிடைக்கவில்லையென்றால் மீண்டும் முயற்சிப்பேன். குடிமைப் பணியில், என்னுடைய முழு சக்தியையும் அதிகப்படுத்தி, கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தான் சமூகம் வளர்ச்சி பெறும். சமூக வளர்ச்சிக்கான இத்தகைய பணிகள் இன்னும் வீரியமாக வேண்டும்" எனக்கூறுகிறார் பூர்ண சுந்தரி.
பார்வைத்திறனற்ற பல மாணவர்கள், போதுமான வசதிகளின்றி உள்ளதால் அரசு அவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை மாவட்டம்தோறும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார், பூர்ண சுந்தரி.
"அனைத்துப் பாடங்களுக்கும் ஆடியோ வடிவில் புத்தகங்களை தயாரிக்க வேண்டும். பள்ளிகளிலும் இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சிறப்புப் பள்ளிகள் மட்டுமல்லாமல் எல்லா பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறு வயதில் படிக்கும்போது அப்பாதான் என்னை சைக்கிளில் அழைத்துச் செல்வார். பள்ளிகள் இல்லாததாலேயே வீடுகளில் நிறைய மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். நிறைய பள்ளிகள் இருந்தால் அவர்கள் படிப்பார்கள்.
மாவட்ட அளவில் இதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். திருமங்கலத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா என்னிடம் தெரிவித்துள்ளார். படிப்பைத்தாண்டி மாற்றுத்திறனாளிகளுக்குப் பலவித திறன்கள் உள்ளன. அதனை வளர்த்தெடுக்கும் விதத்தில் மாவட்டம்தோறும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்" என்கிறார், பூர்ண சுந்தரி.
"திருமணம் தடையல்ல" - தியா
சென்னையை சேர்ந்த 29 வயதான தியாவுக்கு, யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற திருமணம் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. முதல் மூன்று முறையும் முதல்நிலை தேர்விலேயே தோல்வியடைந்தாலும் தன் விடா முயற்சியால் இப்போது அகில இந்திய அளவில் 601-வது ரேங்க் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...
"அப்பா-ரமேஷ், அம்மா-ராதாமணி . அப்பா, சிறிய அளவில் தொழில் நடத்தி வருகிறார். அம்மா ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அம்மா அதில் ஈடுபடவில்லை. 12-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன். நன்றாக படிப்பேன். அதன்பிறகு வேலம்மாள் கல்லூரியில் பொறியியல் படித்தேன். கல்லூரி இறுதியாண்டில் இருந்தே சமூகத்திற்கு சேவையாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என நினைத்ததால் அதற்கு சிவில் சர்வீஸ் தான் சிறந்த வழி என கருதினேன்.
ஆனால், கல்லூரி படிப்புக்குப் பின்னர் வேலை செய்ய வேண்டிய சூழல் எழுந்ததால், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல வருமானத்தில் பணியில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்துவிட்டு முழுதாக யூபிஎஸ்சி தேர்வுக்குப் பயிற்சி எடுக்க வேலையை விட்டு விட்டேன். அதற்கு குடும்பம் தான் எனக்கு உறுதுணையாக இருந்தது.
முதல் முறை யூபிஎஸ்சி தேர்வு எழுதினேன். அதில் எனக்கே அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இரண்டாம் முறை தேர்வெழுதும்போது திருமணம் ஆகியிருந்தது. அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அதனால் என்னால் போதுமான அளவில் பயிற்சிகளை பெற முடியவில்லை. அப்போது 3 மதிப்பெண்களில் போய்விட்டது. மூன்றாம் முறை நன்றாக படித்தேன். வெற்றியடைவோம் என எதிர்பார்த்த நேரத்தில், கேள்வித்தாள் மிகக்கடினமாக இருந்தது. மோசமாக எழுதிவிட்டேன். முதல் இரண்டு முறை பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால் கஷ்டமாக இல்லை. மூன்றாம் முறைதான் மிகவும் சோர்வாகிவிட்டேன். குடும்பம் நம்பிக்கை அளித்தது. தன்னம்பிக்கை இருந்தது.
மனித நேயம், அறம், சபரி உள்ளிட்ட பயிற்சி அகாடமியில் சேர்ந்து படித்தேன். இப்போது வென்றுள்ளேன். எங்களுடையது காதல் திருமணம் என்பதால் பிரச்சினையில்லை. கணவர் ஜெகந்நாதன் மற்றும் அவருடைய வீட்டில் இருந்தவர்களும் துணையாக இருந்தனர். அதனால்தான் இதனை சாதிக்க முடிந்தது. இல்லையென்றால், திருமணத்திற்குப் பிறகெல்லாம் யூபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டிருக்க முடியாது.
என்னுடைய ரேங்க்குக்கு ஐ.ஆர்.எஸ் கிடைப்பது சந்தேகம் என்கின்றனர். பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வந்ததால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடங்கள் குறைந்திருக்கும். அதனால் ஐ.ஆர்.எஸ் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஓ.பி.சி. ரேங்க் பட்டியல் வந்தால் தான் தெரியும். ஐஏஎஸ் பணி பெறுவதற்காக மீண்டும் யூபிஎஸ்சி தேர்வெழுதுவேன்.
கீழே விழுந்தாலும் எழுந்துவிட வேண்டும். இது ஒன்றுதான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி.
குடிமைப் பணியாளராக பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் கல்வி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவேன்" என்கிறார், தியா.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago