அதிமுகவில் முற்றிவரும் பதவிச் சண்டை; முடங்கிக் கிடக்கும் தமிழக அரசு; இரா.முத்தரசன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

முற்றிவரும் பதவிச் சண்டையில் தமிழக அரசு முடங்கிக் கிடப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.16) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டையில் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியை நோக்கி நடந்த 'இசை நாற்காலி'ப் போட்டியில் எடப்பாடி பழனிசாமி இடம் பிடித்தார். இந்த விளையாட்டில் சதி செய்து தோற்கடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 'சபதம்' ஏற்று தர்மயுத்தம் தொடங்கினார்.

இதில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு முன்வைத்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட கோஷ்டி சண்டையில் பாஜக, மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த சமரசத் திட்டத்தை நாடறியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் கால் பதிக்க பாஜக அரசியல் சதி விளையாட்டை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அடுத்து வரும் தேர்தலில் 'முதல்வர்' யார் என்பதில் போட்டியின் மறு சுற்று ஆரம்பம் ஆகியுள்ளது.

நேற்று நாடு சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஜெயக்குமார் அறையில், 12 அமைச்சர்கள் கூடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆளும் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் மாறி, மாறிச் சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி 'அதிமுகவினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்' என கூட்டறிக்கை வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தன்மைகள் குறித்த தெளிவோ, கொள்கையோ இல்லாத அதிமுக 'அரசின் ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் பதவி தேடி அலையும் சுயநலக் கும்பலாக சுருங்கிவிட்டது' என்ற விமர்சனத்தை நடைபெறும் நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன.

அரசு நிகழ்ச்சிகளை தனது கட்சி அரசியல் மேடையாக்கி பரப்புரை செய்து வரும் அதிமுக முதல்வர், அரசு ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் தனது கோஷ்டிக்கு ஆள் பிடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் எதிர் வினையாக மற்றொரு தரப்பினர் தற்போது அரசின் தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக்கி விட்டனர்.

இதன் காரணமாக கரோனா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு உட்பட அரசின் அனைத்துப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. மக்கள் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி வரும் அதிமுக அரசின் அதிகார அத்துமீறல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜக வகுப்புவாத, மதவெறி விஷப் பாம்பின் வாயில் சிக்கிய தவளையாகி விட்ட அதிமுக ஆட்சியில் தொடரும் தார்மீக தகுதியை முற்றிலுமாக இழந்து விட்டது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்