கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதற்கு மருத்துவக் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று கூறியிருக்கும் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்தப் பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆக.13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கோவை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் சுமார் 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும், 150-க்கும் மேற்பட்டோர் இத்தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவக் குறைபாடு காரணமாகவே இம்மரணங்கள் நிகழ்கின்றனவோ என்ற அச்சம் எழுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையின் காரணமாக உரிய கண்காணிப்பு இல்லாதது இவ்வகையான மரணங்களுக்குக் காரணமாக இருப்பது தெரியவருகிறது.
இதேபோன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போதிய சிகிச்சை இல்லாத நிலையில் கடைசி கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் நிலை குறித்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை தரப்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுகிறது.
ஒவ்வொருவரின் நலனும் அரசுக்கு மிக முக்கியமானது. ஆகவே, மருத்துவக் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்வதும், மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையைப் போக்குவதும் தற்போது மிக அவசியமான ஒன்று என கருதுகிறேன்.
அதேபோல், பொதுமக்களும் நோய்த்தொற்று முற்றினால் மருத்துவமனைக்குச் செல்லலாம் என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது. தொற்றுக்கான அறிகுறி இருந்தாலே உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
சமூகப் பரவல் இல்லை என அரசு திரும்பத் திரும்ப சொன்னாலும் அதை நம்பிக்கைக்கான வார்த்தையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். நிதர்சனத்தில் சமூகப் பரவல் ஏற்பட்டு விட்டதோ என்கிற ஐயம் எழுகிறது. சமீபத்தில் விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதே இதை மெய்ப்பிக்கிறது. ஆகவே, பரிசோதனைகளை அதிகரிப்பதில் சுகாதாரத் துறை கவனம் செலுத்த வேண்டும்.
நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, நாள்தோறும் செய்யப்படும் பரிசோதனை எண்ணிக்கை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு நடராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago