சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக ரூ.72 கோடியில் 748 ஏக்கரை கையகப்படுத்தி 13 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் அரசு தவிக்கும் சூழலில் இவ்விடத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரியில் தொழில்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்க கடந்த 2005-ல் மாநில அரசு திட்டமிட்டது.
இதற்காக சேதாரப்பட்டில் 2007-ல் 748 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு நிறுவனமான 'பிப்டிக்' மூலம் கையகப்படுத்திய நிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து 18 மாதங்களில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான முதலீட்டில் புதுவை அரசு 26 சதவீதமும், மீதித் தொகையை தனியாரும் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை உள்பட 20-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க திட்டமிட்டன. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. தொழில் தொடங்க முன்வருவோருக்கு புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலத்தை மேம்படுத்த டெல்லி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்களுக்கு புதுவை மாநில அரசு ஒப்பந்தம் வழங்கியது. ஆனால், அந்நிறுவனங்களை தேர்வு செய்ததில் வெளிப்படைத்தன்மையும், விதிகளும் பின்பற்றப்படவில்லை. எனவே, சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஒப்பந்தத்தை புதுவை மாநில அரசு ரத்து செய்தது. இப்பிரச்சினை தொடர்பாக தனியார் நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தை அணுகின. முறையான விதிகளை மாநில அரசு பின்பற்றவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றமும் சிறப்பு பொருளாதார மண்டலத்தைத் தொடங்க அனுமதி தரமுடியாது எனக்கூறி விட்டது.
சேதராப்பட்டில் அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "தொழிற்சாலைகள் வருவதால் வேலை கிடைக்கும் என்று நிலத்தை பலரும் தந்தோம். 13 ஆண்டுகளாகிவிட்டது. இந்த இடம் பெரும்பாலும் விவசாய இடங்கள்தான். அரசு எதையாவது செய்யாமல் வீணாக இவ்விடத்தை வைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையம் கட்ட உள்ளதாக தெரிவித்தனர். ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. பலரும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டனர்" என்று குறிப்பிட்டனர்.
தற்போதைய நிலை தொடர்பாக பிப்டிக் நிறுவனத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்கள் பெற்றுள்ளார்.
அதுதொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த 2007-ல் ரூ.72.04 கோடி செலவு செய்து 748 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலங்கள் தற்போது அரசு வசம் உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை பெற தனியார் நிறுவனத்துக்கு ரூ.4.67 லட்சம் அளிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு ரூ.72 கோடியில் நிலம் கையகப்படுத்தியும் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. 13 ஆண்டுகள் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் அரசு நிதி ரூ.72 கோடிக்கு மேல் வீணாகியுள்ளது. இடத்தையும் பலர் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்காமல் இளையோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்யும் வகையில் ஏதாவது நடவடிக்கையை ஆளுநரோ, முதல்வரோ எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago