தொடரும் இ -பாஸ் இம்சைகள்: விமோசனம் எப்போது?

By கே.கே.மகேஷ்

தற்போது 7-வது கட்டப் பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. அன்லாக் 3.0 செயல்முறையின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்கள், இ -பாஸ் நடைமுறையை நீக்கிவிட்டன. அங்கெல்லாம் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ -பாஸ் தேவையில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இன்னமும் அது தொடர்வதுடன், சாதாரணப் பொது மக்களுக்குப் பெரும் துன்பம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.

அதிகாரம் படைத்தவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் எளிதில் கிடைத்துவிடும் இ -பாஸ், சாமானியர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இன்னொருபுறம், இ - பாஸ் வாங்கிக் கொடுப்பதையே தொழில்முறையாகச் செய்யும் புரோக்கர்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஊடகங்களும், எதிர்க் கட்சிகளும் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து, இனி உடனுக்குடன் இ - பாஸ் வழங்கப்படும் என்றும், இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 6-ம் தேதி அறிவித்தார். அவர் அறிவித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், பிரச்சினைகள் தொடர்கின்றன.

"மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ - பாஸ் தேவையில்லை என்று அறிவித்து, பழையபடி மண்டலங்களுக்கு இடையில் மட்டுமே இ - பாஸ் கேட்கலாம்" என்ற பொதுமக்களின் கோரிக்கை இதுவரையில் நிறைவேறவில்லை. அதேபோல, "இறப்பு, திருமணம், அவசர சிகிச்சை, சொந்த ஊர் திரும்புதல் போன்றவற்றுடன் நியாயமான எந்தக் காரணமாக இருந்தாலும் விண்ணப்பிக்கிற வகையில் இணையத்தில் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இன்னமும் இறப்புக்கு விஏஓ சான்று கேட்கிறது இ - பாஸ் இணையதளம். பள்ளி, கல்லூரிக்குக் கல்விக் கட்டணம் செலுத்தச் செல்வதற்கும் வசதியில்லை. ஆனால், ஒருவர் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான டிக்கெட் எடுத்துவிட்டு அதனை இணைத்து இ - பாஸ் கேட்டால், அடுத்த வினாடியே இ - பாஸ் கிடைத்துவிடுகிறது.

பல மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் மட்டுமே இ - பாஸைப் பரிசோதிக்கிறபோது, சில மாவட்ட எல்லைகளில் மட்டும் வருவாய், சுகாதாரம், காவல் என்று மூன்று துறையைச் சேர்ந்தவர்களும் பரிசோதிக்கிறார்கள். அத்தகைய செக் போஸ்ட்களில், தேச எல்லையைச் சட்டவிரோதமாகக் கடந்ததைப் போல மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக, மதுரையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரி செக்போஸ்ட்டிலும், மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் கங்கைகொண்டானிலும் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தங்கை, குடும்பப் பிரச்சினையால் நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது என்பதுகூட முழுமையாகத் தெரியாத நிலையில், திண்டுக்கல்லில் இருந்து அந்த இளைஞர் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்காமல் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு விரைந்தார். அவரை நிறுத்திய கங்கைகொண்டான் காவலர்கள், "ஏன் இ - பாஸ் எடுக்கவில்லை?” என்று அவரைக் கடிந்து கொண்டார்கள். "சார், சத்தியமாக அதெற்கெல்லாம் நேரம் இல்லை சார். என் நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்" என்று அவர் கெஞ்சியிருக்கிறார். அவரது தொடர்பு எண்ணையும், வாகனப் பதிவு எண்ணையும் பெற்றுக்கொண்டு, "நீ சொல்வது பொய் என்றால் வழக்குத் தொடருவோம்" என்று அனுப்பி வைத்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் 10 நிமிடம் விசாரணை நடத்திவிட்டு, வருவாய்த் துறையிடம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களிடமும் கண்ணீருடன் முறையிட்டிருக்கிறார் அந்த இளைஞர். "இருங்க, உங்க ஊர் வருவாய் ஆய்வாளரிடம் விசாரித்து உறுதி செய்து கொள்கிறோம்" என்று மேற்கொண்டு 1 மணி நேரம் காக்க வைத்திருக்கிறார்கள். இடையில் சுகாதாரத்துறையினரும், "உங்களை 14 நாட்கள் குவாரண்டைன் பண்ணுவோம் பரவாயில்லையா?" என்று கேட்க, "இன்று மட்டும் போக விடுங்கள். தங்கை குழந்தைகள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு 3 மாதம் கூட என்னைப் பிடித்து அடைத்து வையுங்கள்" என்று கெஞ்சியிருக்கிறார் அவர். "என்ன திமிராகப் பேசுற?" என்று அதற்கும் திட்டியிருக்கிறார்கள். ஒரு வழியாகத் தகவல் உண்மை என்று உறுதி செய்த பின்னர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள் சோதனைச் சாவடியில் இருந்த மூன்று துறையினரும்.

இப்படியான அவலங்கள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் காலையில் ஒவ்வொரு செக்போஸ்ட்டிலும் சுமார் 50 வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் வழக்கமாக வேலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர காரியங்களுக்குச் செல்வோரும் காத்திருக்கிறார்கள்.

இந்த நடைமுறையில் காவல்துறையினருக்கே பெரிதாக விருப்பமில்லை. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "மக்கள் சொல்கிற காரணங்களை வைத்தே அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா? என்று எங்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது சார். ஆனால், இ -பாஸ் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கிறவர்கள் இணைய வழியில் அதனைக் கையாள்வதால், எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் விண்ணப்பங்களை நிராகரித்துவிடுகிறார்கள்.

அவர்கள் சொல்வது உண்மையான காரணம் என்றாலும், இ- பாஸ் இல்லாமல் அனுமதித்தால் எங்களுக்குச் சிக்கல் வரும். இதனால் செக்போஸ்ட் பணியில் ஈடுபடுகிற காவலர்களுடன், பயணிகள் அதிகமாக வாக்குவாதம் செய்கிறார்கள். இதனால் தனிமனித இடைவெளி குறைகிறது. எங்களில் பலருக்குத் தொற்று ஏற்படுகிறது. எனவேதான், தேனி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில், தொலைவில் இருந்தே பேசுவதற்காக மைக் செட் வைத்திருக்கிறோம்" என்றார்.

இந்த மாவட்டங்கள் எல்லாம் உதாரணங்கள்தான். இதேநிலைதான் தமிழகம் முழுவதும். நாட்டின் 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இ - பாஸ் நடைமுறை மக்களை அழுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அவர்கள் விரும்புவது இந்தத் தொல்லையில் இருந்து உடனடி விடுதலை.

"இ - பாஸை ரத்து செய்தால், பணக்காரர்களும், கார் வைத்திருப்பவர்களும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்களே?" என்று கேட்கலாம். அவர்களில் பலர் இப்போதும் ஊர் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இ - பாஸை ரத்து செய்துவிட்டு, காரணமின்றி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதற்கு அதுவே வழி.

செய்யுமா அரசு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்