விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

By செ.ஞானபிரகாஷ்

விதியை மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகைக்கு விட்டது உட்பட பல்வேறு காரணங்களால் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தக் கோரி புதுச்சேரி அரசை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டது. இடம் தமிழ்ச் சங்கத்துக்குச் சொந்தமாக இருந்தாலும், கட்டிடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் (DRDA) சொந்தமானது.

இக்கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளைத் தணிக்கைச் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை உட்பட பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி, கட்டிடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தவும், சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இன்று அண்ணா நகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் அழகர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ரகுபதி உட்பட 12 அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "புதுவைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சங்கக் கட்டிடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஒப்பந்தத்தை மீறி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வாடகை விட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை அறிந்தும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் இழைத்துள்ளனர். இதனால் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்