கரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின் வாழ்த்து  

By செய்திப்பிரிவு

திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் இளைஞர் பட்டாளமும் பல முறை ஒன்றிணைந்து போராடி, அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் பாடுபட்டுள்ளது என 'சர்வதேச இளைஞர் தினத்தை' ஒட்டி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'சர்வதேச இளைஞர் தினத்தை' முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

இளைஞர் தினத்தன்று ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் நான் விடுக்கும் அன்பு வேண்டுகோள்.
அன்பார்ந்த இளைஞர் பட்டாளமே,

இன்று, சர்வதேச இளைஞர்கள் தினம். ஆனால், இந்த ஆண்டே 'இளைஞர்களின் ஆண்டு' என்று சொன்னால் மிகையாகாது.
இன்றுள்ள சூழ்நிலை குறித்து இந்தாண்டு தொடக்கத்தில் நாம் எவருமே நினைத்திருக்க மாட்டோம். ஒரு கொடிய நோய்த் தொற்று, ஏறத்தாழ அரையாண்டுகாலம் நம் அனைவரையும் தனித்து இருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டது. என்னவொரு கடினமான காலம் இது.

கணக்கிட்டுச் சொல்ல இயலாத அளவுக்கு, நம் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனினும், நம் எதிர்காலம், மிகுந்த வல்லமை உடையவர்களிடம்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறது. இளைஞர்கள் திறம்பட நிலையாக நின்று வழிவகுத்துள்ளனர்.

கரோனா தொற்றினால் பொதுமுடக்கம் தொடங்கியபோது, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை விரைவாகக் கொண்டு சேர்க்க இளைஞர்கள், இணையதளத்தைப் பாலமாய் அமைத்து சூழ்நிலையைச் சீர்செய்ய பக்கபலமாய் செயல்பட்டனர்.

பலரும் முடங்கிய வேளையில், இளைஞர்கள் தான் களமிறங்கி, அத்தியாவசியப் பொருட்களான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகித்து, தேவைகளைப் பூர்த்தி செய்தனர். மருத்துவமனைகள் நிரம்பினாலும், இளம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அயராது, இரவு பகல் பாராது, பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களை அர்ப்பணித்தனர்.

தற்போதைய கரோனா காலகட்டத்தில் மட்டுமல்ல; நம் தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பலமுறை இளைஞர்களின் இன்றியமையாப் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது. இளைஞர்களின் பங்களிப்பின் பின்னணியில்தான் சமநிலையான வளமிகுந்த தமிழகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அன்று தலைவர் கலைஞரோடு லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு, இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பி, திராவிடக் கொள்கையை நிலைநாட்டியதின் விளைவே; இன்று, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகும்.

என் இளமைக் காலத்திலும், தமிழ்நாடு பல இன்னல்களைச் சந்தித்துள்ளது. இந்தித் திணிப்பு, அவசர நிலை, மிசா போன்ற அனைத்தையும் இளைஞர் பட்டாளமாய் ஒன்றிணைந்து வென்றோம். இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் களத்தில் போராடியதை என்னால் இன்றளவிலும் நினைவுகூர முடிகிறது.

திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் இளைஞர் பட்டாளமும் பல முறை ஒன்றிணைந்து போராடி, அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் பாடுபட்டுள்ளது. இளைஞர்கள் பேரறிஞர்களாகவும், புகழ்பெற்ற மேதைகளாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற பெருமைகளைச் சேர்த்துள்ளனர்.

வேலைவாய்ப்புகளும் தொழில் வளர்ச்சியும் உள்ள மாநிலமாக மட்டுமல்லாமல்; சமூக ஒற்றுமையும் நீதியும் மிகுந்த சமூகத்தைக் கட்டமைப்பதில் நுண்ணியமாகச் செயல்படுவீர்கள் என்று முழு மனதோடு நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நேரம் காலம் பார்க்காமல் எவ்வேளையிலும் அயராது களத்தில் இறங்கி பாடுபடும் சக்தியும் பொறுப்புணர்ச்சியும் கொண்டவர்களாகத் திகழ்கிறீர்கள். பல இடையூறுகள் வரும்போதிலும், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் என்று போராடி வெல்லும் மனப்பான்மை, என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது; எனக்கு ஊக்கம் ஊட்டுகிறது.

சமநிலையான சமத்துவச் சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளையும் அயராது உழைக்கும் வலிமையையும் மனமார வாழ்த்துகிறேன். இளைஞர்களின் தீவிரமான பங்களிப்பிற்கும், அயராது உழைக்கும் வலிமைக்கும், என்றும் தளராத உற்சாகத்திற்கும், இந்தச் சர்வதேச இளைஞர் தினத்தன்று எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரியான சிந்தனையும், என்றும் தளராத அர்ப்பணிப்பும் இருந்தால்; எப்பெரும் தடைகளையும் இளைஞர் பட்டாளத்தால் தகர்த்திட இயலும், வென்றிட முடியும் என்பதை ஒருபோதும் மறவாதீர்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்