திருப்பத்தூர் அருகே கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பன்றிக்குத்திப்பட்டான் சதிக்கல்‘ அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் மற்றும் ஆய்வு மாணவர்கள் விக்னேஷ், தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் அடுத்த மரிமாணிக்குப்பம் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டபோது, அங்குள்ள ஒரு தென்னந்தோப்பில் ‘காட்டுப்பன்றி குத்திப்பட்டான் சதிக்கல்’ இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
''திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிட்டூர், ஏலகிரி மலையின் பின்பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே குண்டு ரெட்டியூர் என்ற கிராமத்தில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அரிய தடயங்களைக் கண்டறிந்து அவற்றை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி வருகிறோம். இந்நிலையில், மிட்டூர் அடுத்த குண்டுரெட்டியூர் பகுதியையொட்டியுள்ள மரிமாணிக்குப்பம் பகுதியில் கள ஆய்வு நடத்தியபோது அங்கு மலையடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு நடுவே பொதுமக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு சதிக்கல்லை கண்டோம். அந்த கல்லானது 4 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது.
இந்தக் கல்லில் வீரன் ஒருவர் காட்டுப்பன்றியை தன் இடது கையில் உள்ள கட்டரி என்ற ஆயுதத்தால் குத்திய நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் குத்திய கத்தியானது பன்றியின் தலையில் இறங்கி மறுபுறம் வெளி வந்த நிலையில் இருக்கிறது. வீரன் தன் வலது கையில் உள்ள வாளினால் பன்றியினைத் தாக்க முற்படுவதும் சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
வீரன் மேல் நோக்கிய கொண்டையும், நீண்ட காதுகளில் குண்டலும், கால்களில் வீரக்கழலும் கையில் காப்பும் அணிந்துள்ளார். அவரது இடுப்பில் சிறிய கத்தியும் உள்ளது. வீரனுக்கு அருகில் ஒரு பெண் தன் கையில் மதுக்குடுவையுடன் இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டுப் பன்றியை வேட்டையாடுகையில் அதனுடன் சண்டையிட்டுப் பன்றியினைக் கொன்று, அதனால் ஏற்பட்ட காயத்தால் மடிந்த வீரனின் மனைவியே அந்தப் பெண்ணாக இருப்பாள். பண்டைய காலங்களில் வேளாண்மை நிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதப்படுத்திப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். காட்டுப்பன்றிகள் உருவத்தில் பெரிதும் வலிமையும் நிறைந்த விலங்கு ஆகும். அதன் 2 பற்கள் நீண்டு யானையின் தந்தத்தைப் போலக் காட்சியளிக்கும். மனிதர்களையே கொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவையாக இந்த காட்டுப்பன்றிகள் இருக்கும்.
இத்தகைய காட்டுப்பன்றிகளை வீரர்கள் எதிர்த்து வேட்டையாடிக் கொன்ற வரலாறு உண்டு. அதனால், பலத்த காயமுற்று தம் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுத்துப் போற்றும் வழக்கம் நம் தமிழகத்தில் அப்போது இருந்தது. மரிமாணிக்குப்பம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பன்றிக்குத்திப்பட்டான் கல்லும் பழைய வீரர்களின் வரலாற்றை எடுத்துக் காட்டுகிறது. வீரனின் மனைவி அவரோடு மடிந்த காரணத்தினால் தியாகத்தினை போற்றும் விதமாக வீரனுக்கு அருகில் காட்டப்பட்டுள்ளார். இதன் காரணமாக இக்கல்லானது ‘பன்றிக்குத்திப்பட்டான் சதிக்கல்‘ என அழைக்கப்படுகிறது.
இப்பகுதியில் வாழும் மக்கள் இந்தக் கல்லினை முனீஸ்வரன் எனப் பெயரிட்டு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு இங்கு முடி காணிக்கை செலுத்தி ‘முப்பூசை’ படைப்பது வழக்கமாக உள்ளது. அதாவது ஆடு, கோழி, பன்றி ஆகிய 3 விலங்குகளை வெட்டிப்பலி கொடுப்பதே முப்பூசை என்று அழைக்கப்படுகிறது.
இக்கல்லின் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில் இக்கல்லானது விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்காலமான கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என தெரிகிறது. எனவே, மாவட்டத் தொல்லியல் துறையினர் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சதிக்கல்லை ஆவணப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago