புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 41.78 சதவீத கரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஆக.12) இதுவரை இல்லாத புதிய உச்சமாக 481 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,381 ஆகவும், உயிரிழப்பு 96 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறும்போது, ‘‘புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாகக் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று அதிகபட்சமாக 1,123 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 413 பேர், ஏனாமில் 67 பேர், மாஹேவில் ஒருவர் என 481 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 141 நாட்களில் இதுதான் அதிகபட்ச பாதிப்பாகும். மேலும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 3 பேர், ஜிப்மரில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். வேல்ராம்பேட் திருமகள் நகரைச் சேர்ந்த 90 வயது முதியவர், வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்த 41 வயது பெண், லாஸ்பேட்டை கென்னடி கார்டன் அர்ஜூனன் வீதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், சேதராப்பட்டு மெயின் ரோட்டைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஜிப்மரிலும், ஏனாம் பிராந்தியம் யூகேவி நகரைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,381 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் புதுச்சேரியில் 956 பேரும், காரைக்காலில் 71 பேரும், ஏனாமில் 66 பேரும் என 1,093 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்று புதுச்சேரியில் 123 பேர், ஏனாமில் 13 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
» சுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதனால் குணமந்தோர் எண்ணிக்கை 3,669 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 49 ஆயிரத்து 715 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 42 ஆயிரத்து 371 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. 621 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது’’எனத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சருக்குத் தொற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago