பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு தயங்குவதற்கு காரணம் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றிவிடக் கூடும் என்பது தான். நீட் தேர்வுக்காகவும், கல்லூரி இறுதிப்பருவத் தேர்வுகளுக்காகவும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் தேர்வு மையங்களில் குவியும் போது, அவர்களிடையே கரோனா தொற்று ஏற்படாதா? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
“இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்தவுடன் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
தில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்கும் போது, மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே இந்தத் தகவல்களை தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது தான்.
கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தொடங்கினால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில், கல்வி நிறுவனங்களைத் திறப்பதை ஒத்தி வைத்துள்ள மத்திய அரசு, இறுதிப் பருவத் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவதில் மாணவர்களின் உயிர் மீது அக்கறை காட்ட மறுப்பது ஏன்?
கரோனா வைரஸ் பரவல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் படிப்புக்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் நடப்பாண்டில் ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு தயங்குவதற்கு காரணம் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றிவிடக் கூடும் என்பது தான். நீட் தேர்வுக்காகவும், கல்லூரி இறுதிப்பருவத் தேர்வுகளுக்காகவும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் தேர்வு மையங்களில் குவியும் போது, அவர்களிடையே கரோனா தொற்று ஏற்படாதா?
கரோனாவால் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழலில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு, இறுதிப் பருவத் தேர்வை நடத்துவோம் என்பது எந்த வகையில் நியாயம்? இந்த விஷயத்தில் அரசின் பிடிவாதம் தேவையற்றது; கைவிடப்பட வேண்டியதாகும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஐ.ஐ.டி முதன்மை நுழைவுத் தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6-ஆம் தேதி வரையும், ஐஐடி அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வுகள் செப்டம்பர் 27-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஐஐடி முதன்மைத் தேர்வுகள் தொடங்க இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு நம்புகிறது?
இன்றைய நிலையில் உலக அளவில் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான கரோனா தொற்று இந்தியாவில் தான் ஏற்படுகிறது. தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 62,000 என்ற அளவில் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கும் போது இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு சுமார் 35 லட்சம் என்ற அளவில் இருக்கும்.
அப்போது கரோனா அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அத்தகைய சூழலில் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகளையும், இறுதிப்பருவத் தேர்வுகளையும் நடத்துவது மிகவும் ஆபத்தானது. மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடக்கூடாது.
கரோனா வைரஸ் அச்சம் மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது; அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் கடைசி பாடத் தேர்வை 34,000 பேர் எழுதவில்லை.
அவர்களுக்கு கடந்த ஜூலை 27-ஆம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மறு தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், 300-க்கும் குறைவானோர் மட்டும் தான், அதாவது ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே எழுதினர். காரணம்.... கரோனா வைரஸ் குறித்த அச்சம் தான். கரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் எந்தத் தேர்வு நடத்தினாலும் அது வெற்றி பெறாது.
அதுமட்டுமின்றி, மாணவர்களிடையேயும், அவர்கள் மூலமாக சமூகத்திலும் நோய் பரவுவதற்கே தேர்வு வழிவகுக்கும். எனவே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்’.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago