கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள்: கல்விக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்: சமூக  சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு


அரசே ஏற்றுக்கொண்ட மருத்துவக்கல்லூரிகள் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிப்பதை தடுத்து அதிகப்படியான கட்டணத்தை திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை, 2013-ல் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து தமிழக அரசே ஏற்றுள்ளது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த ,ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ,கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என தமிழக அரசு, சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்தது. அது தற்பொழுது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

இன்னிலையில் , இக்கல்லூரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 2.5 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இது கண்டனத்திற்குரியது.

கடந்த 16 ஆண்டுகளில் ரூ 2600 கோடிக்கும் மேல் அப்பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அரசால் வழங்கப்பட்ட ஒட்டு மொத்த மானியத்தை விட இது அதிகம். ஒவ்வொரு ஆண்டும் ரூ 200 கோடிக்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வளவு அதிகமான தொகையை அப்பல்கலைக்கழகத்திற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கிய பிறகும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களிடமிருந்து தொடர்ந்து மிக அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில்,

• எம்.பி.பி எஸ் மாணவர்களுக்கு ரூ 5 லட்சத்து 54 ஆயிரமும்,

• பி.டிஎஸ் மாணவர்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரமும்

• முதுநிலை டிப்ளமா படிப்புக்கு ரூ 8 லட்சமும்,

• முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 9.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதே சமயம், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில்

• எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ 13,600 ம்

• பல் மருத்துவப் படிப்பிற்கு ரூ 11,600 ம்

• முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 32,500 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதிக அளவிலான கட்டணத்தால், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்குகிறது. இது சமூக நீதிக்கும்,ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது.

• இதர தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் என்ன கட்டணமோ, அதே கட்டணத்தை மட்டுமே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை மாணவர்களிடம் திருப்பி வழங்கிட வேண்டும்.

• அதே போன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சாலை போக்குவரத்துக் கழக மருத்துவக் கல்லூரியையும் , சென்ற ஆண்டே தமிழக அரசு நேரடியாக ஏற்றக் கொண்டுவிட்டது. அங்கும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய கட்டணமான ரூ 3.85 லட்சமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுவும் சரியான செயல் அல்ல. எனவே, இம் மருத்துவக் கல்லூரியிலும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் என்ன கட்டணமோ, அதை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி அளித்திட வேண்டும்.

• முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் முன்றாம் ஆண்டு பல் மருத்துவம் படிப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். பல் மருத்துவக் கழகம் அறிவித்துள்ள படி, அவர்களை அடுத்த மேல் வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும். கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சீரடைந்த பிறகு தேர்வுகளை நடத்திட வேண்டும் .

• கரோனா பணியில் கடுமையாக,அர்ப்பணிப்போடு பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே வசூல் செய்திருந்தால் அதை திருப்பி அளிக்க வேண்டும்.

• கரோனா தொற்றுக்கு உள்ளான பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

• கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறந்த பயிற்சி மருத்துவர் டாக்டர் ஆர்.பிரதீபா அவர்களின் மரணத்தை, கரோனா தொடர்பான பணியில் நடந்த இறப்பு எனக் கருதி ,கரோனா காலத்தில் நடந்த அகால மரணத்தினால் அவரது குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

• பல நியாயமான கோரிக்கைக்களுக்காக, 25.10.2019 முதல் 31.10.2019 வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, அரசுவேலையில் உள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு, போராடிய நாட்களுக்கான ஊதியத்தை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. போராட்ட நாட்களை ``சர்வீஸ் பிரேக்’’ என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இது அம்மருத்துவர்களை கடும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்