தங்கம், வெள்ளி விலை உயர்வால் நெசவாளர் வாழ்க்கை கேள்விக்குறி

By இரா.ஜெயப்பிரகாஷ்

தங்கம், வெள்ளி விலை உயர்வால் சாதாரண மக்கள்நகை வாங்க முடியாமல் தவிப்பது ஒரு பக்கம் இருக்க, காஞ்சிபுரத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையே இது கேள்விக்குறியாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் பட்டுத்துணி ரகங்கள் உலகப் புகழ் பெற்றவை. குறிப்பாக கூட்டுறவுச் சங்கங்களிலும், சில தனியார் கடைகளிலும் பொதுமக்கள் பட்டுச் சேலைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு காரணம் இந்தப் பட்டுச் சேலையில் உள்ள சரிகையின் தரம். இந்த சரிகையில் 38 சதவீதம் வெள்ளி, தங்கம் சேர்க்கப்படுகிறது.

பட்டு நூல் பெரும்பாலும் ஒரு கிராம் ரூ.5-க்கு கிடைக்கிறது. இந்த விலையில் பெரிய அளவில் மாறுதல் வராது. ஆனால், சரிகையின் விலை வெள்ளி,தங்கத்தின் விலைக்கு தகுந்தாற்போல் உயர்ந்து வருகிறது. தற்போது 250 கிராம் எடையுள்ள அசல் சரிகை ரூ.13 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

சரிகை விலை உயரும்போது பட்டுச் சேலை விலையும் உயர்கிறது. விலை உயர்வை தவிர்க்க ஏற்கெனவே சரிகையில் 52 சதவீதமாக இருந்த வெள்ளி, தங்கம் 10 ஆண்டுக்கு முன் 38 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் குறைக்கப்பட்டால் காஞ்சிபுரம் பட்டுச் சேலையின் தரமே கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாக நெசவாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் 47,650-ஆக இருந்த 10 கிராம் ஆபரணத் தங்கம் அந்த மாத இறுதியில் 51,900 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் இது மேலும் ரூ.2 ஆயிரம் அளவுக்குஉயர்ந்துள்ளது. வெள்ளி விலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிராம் ரூ.57 ஆக இருந்தது. தற்போது ரூ.80-ஐ நெருங்கி வருகிறது. வரலாறு காணாத வகையில் வெள்ளி, தங்கம் விலை உயர்ந்து வருவதால் சரிகையின் விலையும் கணிசமாக கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சரிகைக்கு மானியம் தேவை

இதுகுறித்து ஏஐடியூசி கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கர் கூறும்போது, “ஏற்கெனவே கரோனா பரவலால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறவில்லை. காஞ்சிபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லை. இதனால் பட்டு கூட்டுறவுச் சங்கங்களில் நெய்த பட்டுச் சேலைகள் தேங்கியுள்ளன. இப்போது தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டுச் சேலை விலை மேலும் உயரும். இதனால் தேக்கம் அதிகமாகும். காஞ்சிபுரம் பட்டு நெசவுத் தொழிலை காப்பற்ற வேண்டுமானால் பட்டு நூலுக்கு 10 சதவீதம் மானியம் வழங்குவதுபோல் சரிகைக்கும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கைத்தறி நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கூட்டுறவுச் சங்கங்களில் தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை கொள்முதல் செய்து வெளி மாநிலங்களில் விற்பனையை விரிவுபடுத்தவும், ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் விலை உயர்வால் ஏற்படும் தேக்கத்தை தடுக்கலாம்” என்றார்.

இதுகுறித்து கைத்தறி துறை துணை இயக்குநர் கணேசன் பேசும்போது, “பட்டுச்சேலை விலை உயர்வை கட்டுப்படுத்த சரிகையில் சேர்க்கும் தங்கம்,வெள்ளி அளவை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு குறைந்தால் காஞ்சிபுரம்பட்டுச் சேலைக்கென்று உள்ள தனிப்பெயர் கெட்டுவிடும். தரத்தை குறைக்காமல், குறைந்த அளவு சரிகைகளை பயன்படுத்தி மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றார்போல் நவீன வடிவமைப்புகளுடன் சேலைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE