இந்தியா உலக அளவில் அதிக தொற்று பரவும் மாநிலமாக மாறிவரும் நிலையில் தமிழகத்திலும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களிடையே அச்சத்தைப் போக்கும் வகையில் அதிக அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம், அதிக சோதனை நடத்தப்படவேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக 64,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 22 லட்சத்து 13 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,012 பேர் இறந்து மொத்த இறப்பு 44,475 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இருந்து வருகிறது. இதன்மூலம் உலகிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிற நாடுகளில் முதல் இடத்தை ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா பெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் நூற்றுக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரத்தில் இந்தியாவில் 10 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 1 லட்சமாக இருந்தது, ஜூனில் 5 லட்சமாகவும், ஜூலையில் 16 லட்சமாகவும், ஆகஸ்ட் 10இல் 22 லட்சமாகவும் உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுக்கு என்ன காரணம் என்பதை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல இறப்பு விகிதம் 2.07 ஆக இருக்கிறது.
அதேபோல, தமிழகத்தில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. சென்னையை விட கோவை, விருதுநகரில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று மட்டும் 5,994 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 119 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிற அதேநேரத்தில் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.
85 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 6,120. தமிழகம் முழுவதும் உள்ள 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 28,466 படுக்கைகள் உள்ளன. கரோனா சிகிச்சைக்கான வென்டிலேட்டர் வசதி 1,775 தான் உள்ளன. அதேபோல தனியார் மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 3,410. இந்த நிலையில் கரோனாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை தமிழக அரசுக்கு இருக்கிறது.
கரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை இந்தியாவில் 10 லட்சம் பேரில் 17,805 பேருக்குத்தான் சோதனை செய்யும் வசதி உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 1,80,218, ரஷ்யாவில் 2,05,833, தென் ஆப்ரிக்காவில் 52,109 என பரிசோதனை வசதி இருக்கிறது. அதிகமாக பரிசோதனை செய்தால்தான் விரைவாகக் கரோனாவை ஒழிக்க முடியும்.
பொதுவாக மக்களிடையே கரோனா தொற்று குறித்து மத்திய - மாநில அரசுகள் ஊடகங்களின் பிரச்சாரம் காரணமாக மக்களிடையே அச்சம், பீதி வாட்டி வதைத்து வருகிறது. கரோனா தொற்று குணப்படுத்தக் கூடியது, இறப்பு விகிதம் குறைவாகக் கொண்டது என்ற உண்மை நிலையை மக்கள் அறியவில்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் முழு தோல்வியடைந்து விட்டன.
தற்போது கரோனா ஒழிப்பு என்பது அரசு சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கிறது. அந்தப் போக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். கரோனாவை எதிர்கொள்ள மாற்று திட்டமும், அணுகுமுறையும் உடனடியாகத் தேவைப்படுகிறது.
கரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பொதுநல அமைப்புகளான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மத்திய - மாநில அரசுகள் முயல வேண்டும். மக்களிடமிருந்து அரசு அந்நியப்பட்டு இருப்பதால் அரசின் பிரச்சாரத்தில் மக்களிடையே விழிப்புணர்வும், நம்பிக்கையும் ஏற்படவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பொதுநல அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் சுனாமியினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அதை மீட்கும் பணியில் அரசினுடைய பங்களிப்பை விட தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புதான் அதிகமாக இருந்தது. அதேபோல, இளம்பிள்ளை நோய், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றிற்கு எதிராக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்த விழப்புணர்வு பிரச்சாரம்தான் அந்த நோய்கள் குறித்து மக்களிடையே இருந்த அச்சம், பீதி முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
எனவே, உலகத்திலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னணிப் பங்கு வகித்து வருகிற, இதை எதிர்கொள்வதற்கு மருத்துவ சிகிச்சைகளை செய்கிற மத்திய - மாநில அரசுகள், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதை அரசு செய்வதை விட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்வது அதிக பயனைத் தரக்கூடியதாகும்.
கரோனா தொற்று குறித்து பயந்து,சோதனைக்கு மக்கள் தயாராக இல்லாத போக்கிலிருந்து விடுவிப்பதற்கு, தீவிரமான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மத்திய - மாநில அரசுகள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தொடங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அணுகுமுறையின் மூலமே கரோனா நோயை ஒழிக்க முடியும்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago