சிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: வெளிப்படையான ஆய்வு நடத்திட ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிவில் சர்வீஸ் தேர்வில் ஓபிசி, பட்டியலின மாணவர்கள் மதிப்பெண்ணுக்கும் குறைவாக, முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு கட் ஆப் மார்க் வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வு நடத்தி, நேர்ந்திருக்கும் தவறுகளைக் களைந்து, நீதி வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் சமூக நீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ள செயல் பேரதிர்ச்சியளிக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் கடந்த 4.8.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கான 'கட்-ஆப்' மதிப்பெண்கள் பட்டியலில், மத்திய பாஜக அரசு அவசர அவசரமாகச் சென்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கொண்டு வந்த “முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு” இந்த குடிமைப் பணிகள் தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும், சமூக நீதிக்குப் பெரும் பாதகம் விளைவித்துள்ளதைக் காண முடிகிறது.

மத்திய அரசு தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வில் (Preliminary Exam) வெற்றி பெற்றவர்களுக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண்கள் பின் வருமாறு:

- இதர பிற்படுத்தப்பட்டோர் மதிப்பெண் 95.34

- 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்குரியோருக்கு 90 மதிப்பெண்கள்.

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விட, 5.34 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தாலும், இந்தியக் குடிமைப் பணிகளுக்கான 'முதன்மைத் தேர்வு' (Main Exam) எழுதப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய உயர் வகுப்பினர் தேர்வாகியுள்ளனர்.

அடுத்ததாக, முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதியவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் பட்டியலின் படி:

- இதர பிற்படுத்தப்பட்டோர் மதிப்பெண்: 718

- பட்டியலினத்தவர் மதிப்பெண்: 706

- பழங்குடியினத்தவர் மதிப்பெண்: 699.

- 10 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ளோரின் மதிப்பெண்: 696

சமூக நீதியின் கீழ் இட ஒதுக்கீடு உரிமை பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பிற்கும் பின்னால் கீழே நிற்கும் நிலை இந்த 'பொருளாதார இட ஒதுக்கீட்டால்' உருவாக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 'நேர்காணல்' கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 909 மதிப்பெண்கள் பெற்று - அவர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரியாகத் தேர்வாகியுள்ளார். ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோர் 925 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்வாக முடியும் என்ற அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 'நேர்காணல்' கட் ஆப் மதிப்பெண்களிலும் வெளிப்படைத்தன்மை இல்லையோ என்ற சந்தேகம், இறுதியாக மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுப் பட்டியலைப் பார்த்தால் தெரிகிறது.

இத்தகைய அநீதிகளின் தொகுப்பு ஒருபுறமிருக்க, மொத்தம் அறிவிக்கப்பட்ட 927 பணியிடங்களுக்கு, 829 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு - அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மீதியுள்ள 98 பணியிடங்களுக்கானவர்கள் 'ரிசர்வ் லிஸ்ட்டில்' இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ரிசர்வ் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்போரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஏன் இந்த இருட்டடிப்பு? இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க - அதற்கான நிர்வாகக் கட்டமைப்பில் உரிமை பெற இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது?

நேர்மையாகத் தேர்வுகளை நடத்தும் என்ற நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மத்திய அரசு தேர்வாணையத்திற்கு, இந்தக் கெடு நிலை உருவாக - மத்திய பாஜக அரசு, சமூக நீதியைச் சீரழிக்கும் உள்நோக்கத்தோடு திட்டமிட்டுக் கொண்டு வந்த 'பொருளாதார இட ஒதுக்கீடு' வித்திட்டுள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது.

சமூக நீதிக்குத் திரைமறைவில் இப்படி சாவுமணி அடிக்கும் மத்திய பாஜக அரசின் உயர் வகுப்பு ஆதிக்க மனப்பான்மை கொண்ட செயலை, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வங்கித் தேர்வுகள், மத்திய அரசு துறைகளுக்கான தேர்வுகள் என்று தொடங்கி - இப்போது அகில இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வுகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பான, 10 சதவீத இட ஒதுக்கீடு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற சந்தேகம் மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள 'கட் ஆப்' மதிப்பெண்கள் அடிப்படையில் உறுதியாகி உள்ளது. அதனால்தான் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வந்த நேரத்திலேயே “இதைத் தேர்வுக்குழுவிற்கு அனுப்புங்கள்” என்று திமுக சார்பில், மிகுந்த ஆதங்கத்தோடு வலியுறுத்தினேன்.

ஆனால், அது பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் - அரசியல் சட்டத்திலேயே இல்லாத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அளிக்க முன்வந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனை செய்து - இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டி நியாயம் வழங்கிட வேண்டும்.

சமூக நீதி உரிமையை வழங்கியுள்ளது இந்திய அரசியல் சட்டம் என்பதை நினைவில் கொண்டு, 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையானதொரு ஆய்வினை நடத்தி, நேர்ந்திருக்கும் தவறுகளைக் களைந்து, நீதி வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்