திமுக எம்.பி. கனிமொழியிடம் மொழி குறித்து சிஐஎஸ்எப் அதிகாரி கேட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஆக.10) வெளியிட்ட அறிக்கை:
"நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை முடித்துச் செல்லும்போது, அங்கு பணியில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கரோனா நடவடிக்கைகள் குறித்து, கனிமொழியிடம் இந்தி மொழியில் உரையாடி இருக்கிறார்.
அதற்குக் கனிமொழி எம்.பி., 'எனக்கு இந்தி புரியவில்லை. எனவே, தமிழ் அல்லது ஆங்கில மொழியில் பேசுங்கள்' என்று கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் அதிகாரி கனிமொழியைப் பார்த்து, 'நீங்கள் இந்தியரா?' என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
» டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரீமியத் தொகை செலுத்த கால அவகாசம் தருக; வாசன்
» சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கரோனா தொற்றுக்கு பலி
இந்த நிகழ்வை கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியதால், சமூக வலைதளங்களில் சி.ஐ.எஸ்.எப். பெண் அதிகாரி மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன.
'இந்தி புரியவில்லை' என்று கனிமொழி கூறியதால் 'நீங்கள் இந்தியரா?' என்று பாதுகாப்புப் படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டார் என்றோ கடந்து போய்விட முடியாது.
இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் டெல்லி ஏகாதிபத்திய அரசாங்கத்தின் எதேச்சதிகார தன்மைதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது. அந்த அதிகரி மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவது இல்லை. ஒட்டுமொத்த மத்திய அரசும் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி நாள், அதாவது 'இந்தி திவாஸ் நாள்' கடைபிடிக்கப்படுவதை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், "இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பது அவசியமாகும். அப்போதுதான் உலகளவில் இந்தியாவின் அடையாளம் இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும் என்றால், அதிகமாகப் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.'
அமித்ஷாவின் இக்கருத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், ட்விட்டர் பதிவு குறித்து மழுப்பலான விளக்கம் அளித்தார்.
பாஜக அரசு இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே, மத்திய அரசு அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் கோப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவுகள் போடப்பட்டன.
அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு பல்வேறு வகைகளில் இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதற்கும் பாஜக அரசு ஆணைகள் பிறப்பித்தது.
இந்தி மொழிப் பாடத்திட்டங்களைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் 10 ஆம் வகுப்பு முடிய இந்தி மொழி பயிலுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடம் ஆக்குவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயலாற்ற வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்தி மொழி அறிந்திருந்தால், அவர்கள் இந்தி மொழியில் மட்டுமே பேசவும், அறிக்கைகள் வெளியிடவும் வேண்டும்.
மத்திய அரசின் ரயில்வே தேர்வுகளை இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுத வேண்டும்.
ரயில்வே அலுவலர்கள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும். தமிழ் மொழியில் பேசக் கூடாது.
ரயில்வே துறை, விமான போக்குவரத்துத் துறை, வெளிவிவகார மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்ட பாஜக அரசு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதன் உச்சமாக தற்போது இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையைப் புதிதாக அறிவித்து இருக்கின்றது.
பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதையும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்ப்பது பன்முகத்தன்மைதான் என்பதையும் உணராமல், பாஜக அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முயன்றால், அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கு தமிழகம் சர்வபரி தியாகத்திற்கும் தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago