இடுக்கி நிலச்சரிவில் சிக்கி கயத்தாற்றைச் சேர்ந்த 17 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்

By எஸ்.கோமதி விநாயகம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கயத்தாற்றைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனால் இங்குள்ள உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 6-ம் தேதி பெய்த கனமழையில் பெட்டிமூடி தேயிலை தோட்டத்தில் இரவு சுமார் 10.45 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டது.

இதில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதைந்தனர். தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய கயத்தாறை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையறிந்த கயத்தாறை சேர்ந்த அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வரை கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(46), அவரது மனைவி தவசியம்மாள்(45), மகள் மௌனிகா(18), முருகன்(48), அவரது மனைவி ராமலட்சுமி(39), மயில்சாமி(45), அவரது மனைவி ராஜேஸ்வரி(43), இவர்களது மகள் சிவரஞ்சனி (24), சண்முகநாதன் மகன் தினேஷ்குமார்(25), அனந்தசிவன் மகன் பாரதிராஜா(35) ஆகிய 10 பேர் உயிரிழந்த தகவல் கிடைத்தது. நேற்று காலை சண்முகையா(58), விஜிலா(45), குட்டிராஜ்(47), பவுன்தாய்(52), மணிகண்டன்(20), தீபக்(18), பழனியம்மாள்(50) என இதுவரை 17 பேர் உயிரிழந்ததை கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் உறுதி செய்தார்.

பெட்டிமூடி தேயிலை தோட்ட பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. இதனால் கயத்தாறில் உள்ள உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தகவல் அறிந்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் இன்று கயத்தாறு பாரதி நகருக்கு வந்து உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர் கூறுகையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக கேரள அரசு கூறியுள்ளது. ஆனால் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் தங்கை ரேகா கூறும்போது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனது குழந்தைக்கு பெட்டிமூடியில் உள்ள எங்களது குலதெய்வமான முனீஸ்வரன் கோயிலில் மொட்டை போட சென்றோம். அதன் பின்னர் அங்கு செல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த வாரம் கூட அவர்களிடம் பேசினோம். நிலச்சரிவில் சிக்கி எனது சகோதரர் குடும்பத்துடன் இறந்துவிட்டார் என தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எனது சித்தி, சித்தப்பா மிகவும் வயதானவர்கள். அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை, என்றார் அவர்.

ஊரடங்கால் தப்பிய இளைஞர்

மண் சரிவில் உயிரிழந்த சண்முகையாவின் மகன் விஜய். இவர் புனேவில் உள்ள மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர் கயத்தாறுக்கு திரும்பினார். பெற்றோரை சந்திக்க இடுக்கி மாவட்டத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர் உயர் தப்பியுள்ளார்.

சண்முகையா குடும்பத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கி உயிரிந்துள்ளனர். தந்தை, சித்தப்பா உள்ளிட்டோர் உயிரிழந்ததை அறிந்த அவர் ராஜமலை பெட்டிமூடிக்கு உறவினர்களுடன் வேனில் புறப்பட்டு சென்றார். இதில், அவரது தாய் கருப்பாயி, மூத்த சகோதரி சீதாலெட்சுமி ஆகியோர் தப்பியுள்ளனர். அவரது சித்தி சரஸ்வதி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெட்டிமூடி தேயிலை தோட்டத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற முத்துச்சாமி(76) என்பவர் கூறுகையில், நான் பெட்டிமூடி தேயிலை தோட்டத்தில் 47 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். அங்கு ஏ.ஐ.டி.யு.சி. தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். நான் பணியாற்றியபோது இதுபோன்ற பெரிய விபத்து ஏற்பட்டதில்லை. அங்கு தண்ணீர் செல்வதற்கு ஓடைகள் உள்ளன. பெரிய மழை பெய்தால், மழையில் இருந்து வரும் தண்ணீர் அந்த ஓடைகள் வழியாக ஆற்றுக்கு சென்றுவிடும். ஆனால், தற்போது மண் சரிவு ஏற்பட்டு எங்களது உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது, என்றார்.

சகோதரர்கள் உயிரிழப்பு

உயிரிழந்த தினேஷ்குமாரின் தந்தை சண்முகநாதன் மூணாறில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். பெட்டிமூடியில் வசிக்கும் தனது அண்ணன் அனந்தசிவனின் பேரனின் பிறந்த நாள் விழாவுக்கு சண்முகநாதன், தனது தினேஷ்குமார், நிதிஷ்குமார் ஆகியோர் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள்து மண் சரிவில் சிக்கினர். இதில் தினேஷ்குமார் உடல் மீட்கப்பட்டது. நிதிஷ்குமார் உடலை தேடி வருகின்றனர்.

அமைச்சர் இரங்கல்:

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விடுத்துள்ள செய்திகுறிப்பு: கேரளா மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் கோவில்பட்டி தொகுதி கயத்தாறு பேரூராட்சியை சேர்ந்தவர்கள் குறித்து கேரளாவில் பணியாற்றி வரும் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குநர் உன்னிகிருஷ்ணன் முழு விவரங்களையும் சேகரித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதற்கு ஆவண செய்து வருகிறார்.

தமிழக முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததோடு, கேரள முதல்வரோடு தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக மீட்பதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையான தரமான சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்