அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஆக.8) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே இருமுறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அரசு வழங்கிய ஆலோசனைகளை ஏற்று, சிறப்பான முறையில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் நடைபெற்ற காரணத்தால், சேலம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கிற காலகட்டத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பருவமழை ஓரளவு நன்றாகப் பெய்துள்ள காரணத்தினால், மாநகராட்சி உட்பட, மாவட்டம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சினை இல்லாமல் முறையாக மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொய்வில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. தொழிற்சாலைகள் 100 சதவிகிதம் இயங்கி வருகின்றன. வேளாண் பணிகள் 100 சதவிகிதம் நடைபெற்று வருகின்றன. 100 நாள் வேலை திட்டம் எவ்விதத் தடையுமில்லாமல் அரசு அனுமதியளித்த காலத்திலிருந்து தற்போது வரை 100 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ், முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.
முதற்கட்டமாக, அத்திட்டத்தினை சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தொடங்கி, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நானே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களைச் சந்தித்து, மனுக்களைப் பெற்றேன். அதில் தகுதியான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த மனுக்களில் பெரும்பாலானோர் கோரியிருந்த முதியோர் உதவித்தொகை தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்தோடு, புதிய பட்டாக்கள், பட்டா மாறுதல்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், தங்கள் பகுதியிலுள்ள பிரச்சினைகள் குறித்துக் கொடுத்த மனுக்களுக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில், அரசு அறிவித்தத் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்த நேரத்திலும்கூட பணிகள் தொய்வில்லாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல, நோய்த் தொற்று குறையக் குறைய, தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது. இன்றையதினம்கூட, மாநகரப் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களைத் திறக்கலாம் என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளோம். அதேபோல, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றபோது நோய்ப் பரவல் படிப்படியாகக் குறையும். இதுகுறித்து ஏற்கெனவே அரசு, பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பொதுமக்கள் முழுமையாகப் பின்பற்றினால் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலை எளிதாகத் தடுக்கலாம். இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக, மிக அவசியம். மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இதைத் தடுக்க இயலாது. எனவே, பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர். மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில், அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவதன் காரணமாக நோய்ப் பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது. இதற்கு சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago