தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 3 நிதியாண்டுகளாக தேசிய சராசரியைவிட அதிகரித்துவருகிறது. இது கடந்த ஆண்டில் 2 மடங்கு அதிகரித்துள்ளதோடு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திமதிப்பில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியானது, அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை, அதன் உபதொழில்கள், கனிமம்,சுரங்கத் தொழில்களை உள்ளடக்கிய முதன்மை உற்பத்திப் பிரிவு, தொழிற்சாலை உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்டவை அடங்கிய 2-ம் நிலை உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியே மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2019-20 நிதியாண்டில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேற்கில் உள்ள மாநிலங்களின் தகவல் தொகுப்புகள் இல்லாத நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கணக்கெடுப்பை மத்திய அரசு இறுதி செய்து வெளியிட்டது. இதில், கடந்த 2011-12-ம் ஆண்டின்நிலையான விலை மதிப்புகளின் அடிப்படையில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. இந்த கணக்கீட்டின்படி, தற்போது தமிழகம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 2-ம்நிலை உற்பத்திப் பிரிவில் அதிகவளர்ச்சியை அதாவது 10.02 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டில் 6.49 சதவீதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக தொழிற்சாலை உற்பத்தி, கட்டுமானப் பிரிவு என இரு முக்கிய தொழில் பிரிவுகள் முறையே 10.27 மற்றும் 10.49 சதவீதம் எனஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
கடந்த 2019-20 நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் உள்நாட்டு உற்பத்தி மதிப்புதொடர்பான முன்மதிப்பீடுகளின்படி, வேளாண்மை மற்றும் அதன் உபதொழில்கள், கனிமம், சுரங்கத் தொழிலின் வளர்ச்சி 6.08 சதவீதமாக இருந்தது. அதேநேரம், ரியல் எஸ்டேட் பிரிவை உள்ளடக்கிய சேவை பிரிவின் வளர்ச்சி 6.63 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் முதன்மை பிரிவின் வளர்ச்சியானது 8.49 சதவீதமாகவும், சேவைப் பிரிவு வளர்ச்சி7.83 சதவீதமாகவும் இருந்தது.
அதேநேரம், முதன்மை பிரிவில் உள்ள வேளாண்மை உற்பத்தி வளர்ச்சி 2018-19-ல் 5.8 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில்7.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், கால்நடைகள் சார்ந்தஉற்பத்தி பிரிவின் வளர்ச்சி, முந்தைய ஆண்டில் 11.13 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 6.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனாலேயே முதன்மை பிரிவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாக தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அதேநேரம், சேவைப் பிரிவில் உள்ள நிதிச்சேவை பிரிவானது குறிப்பிடத்தக்க வகையில் 11.71%வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது 2018-19 நிதி ஆண்டில் மிகவும்குறைவாக 2.21% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. சேவை பிரிவில் அடுத்த முக்கியமான ரியல்எஸ்டேட் தொழிலின் வளர்ச்சி முந்தைய ஆண்டில் 6.69% இருந்த நிலையில் கடந்த ஆண்டில் 7.29% வளர்ச்சி அடைந்துள்ளது.
பொருளாதாரத்தை சீரமைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், 2019-20நிதி ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தின் பயணத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரி வித்தன.
அதேபோல், மாநிலத்தின் நிகர உற்பத்தி மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படும் தனிநபர் வருவாய் கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 853 என, தேசிய அளவில் தமிழகம் 6-வது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2018-19) தமிழகம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 941 என்ற தனிநபர் வருவாயுடன் 12-ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழில் வளர்ச்சியின் நிலை
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தொழில் துறை உற்பத்தியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். மாநிலத்தின் உற்பத்தி மதிப்பை உயர்த்துவதற்காகவே தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.18,236 கோடிக்கான முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது. ஜூலை மாத இறுதியில் பெறப்பட்ட முதலீடுகளின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.பல்வேறு புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதன் மூலம் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும் வழி ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்களும் தொழில் தொடங்க உள்ளன. இதுதவிர 2015, 2019-ம் ஆண்டுகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதல்வரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்களில் மேலும் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கும்பட்சத்தில் உற்பத்தி மதிப்பும் உயர்ந்து அதன்மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என்பது தொழில்துறையின் நம்பிக்கையாக உள்ளது.
உற்பத்தியில் முன்னேற்றம்
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொழில்துறையின் தற்போதைய முன்னேற்றப் பாதை குறித்து அத்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த நிதியாண்டின் முதல் 2 மாதங்கள் முழு ஊரடங்கு என்பதால் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது. அதன்பின் தற்போது தொழிற்சாலைகள் பணிகளை தொடங்கியுள்ளன. ஆட்டோ மொபைல் ஏற்றுமதி, ஜவுளித் துறை ஏற்றுமதி ஆகியவை சிறப்பாக நடந்து வருகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் 6 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளன.
இரண்டாம் நிலை உற்பத்தி பிரிவை பொறுத்தவரை 2018-19 நிதி ஆண்டில் 7.4% இருந்த உற்பத்தி மதிப்பு, 2019-20-ல் 10.3% உயர்ந்துள்ளது. மேலும், சில குறிப்பிட்ட உற்பத்தி பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஒட்டுமொத்த வளர்ச்சியை தற்போது கணிப்பது சிரமம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago