கரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்திற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் ஆகியவற்றை முதல்வர் உடனடியாக வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.
“கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று முதலில் அறிவித்த முதல்வர், பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, “மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்” என்று ஏப்ரல் 22 /2020 அன்று அறிவித்தார்.
» கலைஞரின் மகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்: திருக்குவளை சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு
» ஆகஸ்டு 10-ம் தேதி கடையடைப்பு ஒத்திவைப்பு: கோயம்பேடு வணிகர்கள் முடிவு
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முதல் நாளில் இருந்து இன்றுவரை குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டு - நிர்வாகத் தெளிவோ திட்பமோ இல்லாமல், குழப்பமான நிலையில், அதிமுக அரசு செயல்பட்டு வந்தாலும், தொடக்கத்திலிருந்து தங்களின் சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து – தன்னலமற்ற பொதுச் சேவையாற்றி - கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் மக்களின் உயிரை தினமும் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள் முன்களப் பணியாளர்கள்தான்.
இதனால், தமிழகத்தில் மருத்துவர், காவல்துறையினர், செவிலியர், தூய்மைப் பணியாளர் என்று ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் மீண்டுள்ளார்கள்; சிலர் மாண்டுள்ளார்கள்.
ஆனால், இதுவரை அரசுத் தரப்பிலோ அல்லது அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாகவோ வெளியிடப்படும் அறிக்கையிலோ (கரோனா புல்லட்டின்) முன்களப் பணியாளர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் - அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை. அவர்களின் தியாகத்தைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகிறது அதிமுக அரசு.
கரோனா நோய்ச் சிகிச்சைப் பணியில் தொற்றுக்குள்ளாகி - குணமடைந்து - இதுவரை வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதல்வர் உறுதியளித்த 2 லட்சம் ரூபாய் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது? என்று எந்தத் தகவலையும் வெளியிடாமல் - அந்தத் தகவல்களை எல்லாம் இரும்புத் திரை போட்டு பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.
முன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதல்வர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என்பதை முதல்வர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு.
அனாவசியமான - அவசர டெண்டர்களுக்கு நிதி ஒதுக்குவதைத் தள்ளிவைத்து விட்டு, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 25 லட்சமாகக் குறைத்து – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த முன்களப் பணியாளர்களின் போற்றி வணங்க வேண்டிய பணியை அரசே மனிதாபிமானமின்றி சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்றும் - நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விடக்கூடாது என்றும் முதல்வர் பழனிசாமியை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago