கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் உயிர் இழந்தவர்களை அவர்களது மதச்சடங்கின்படியே இலவசமாக அடக்கம் செய்து கொடுக்கின்றனர் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொண்டர்கள்.
கரோனாவால் உயிர் இழந்தோர் மாநகர எல்லைப் பகுதிக்குள் இருந்தால் அவர்களது உடல் மாநகராட்சி ஊழியர்களால் மின் தகன மேடையில் எரியூட்டப்பட்டு வருகிறது. இதேபோல் கரோனாவால் உயிர் இழந்தோரின் உடலைச் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதில் உறவினர்களே தயக்கம் காட்டும் நிலையில் பலரது உடலும் மின்தகன மேடையிலேயே எரியூட்டப்பட்டு வருகின்றன.
அதேநேரம் உயிரிழந்தோர் உடலை தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய விரும்பும் உறவினர்களுக்கு உதவும் வகையில் சேவை மனப்பான்மையோடு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அடக்கம் செய்து கொடுக்கின்றனர். இதில் மாற்று மதத்தினரையும் அவர்கள் மத சம்பிரதாயப்படியே அடக்கம் செய்கின்றனர்.
இதுகுறித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சப்தார் அலி 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், ''இந்தியா முழுவதும் எங்கள் அமைப்பினர் இந்த சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கரோனா நோயாளிகளை அடக்கம் செய்வது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் அடக்கம் செய்கிறோம். குமரி மாவட்டத்தில் இரண்டு கிறிஸ்தவர்களின் உடலைஅடக்கம் செய்யக் கேட்டு அழைப்பு வந்தது. அவர்களது உடலை அவர்கள் மத சம்பிரதாயப்படியே அடக்கம் செய்து கொடுத்தோம்.
எங்கள் அமைப்பின் சார்பில் நூறுபேர் இதில் தன்னார்வலர்களாக இணைந்திருக்கிறார்கள். பத்துக் குழுக்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறோம். கரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய சில விதிமுறைகள் உள்ளன. முதலில் 12 அடி ஆழத்துக்குக் குழி தோண்ட வேண்டும். அதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து பிளீச்சிங் பவுடர் போடுவார்கள். அடக்கம் செய்யச் செல்லும் நாங்கள் முழு உடல் கவசம், கையுறை, கால் உறை, முகத்துக்கு வெளியே கண்ணாடி மாஸ்க் என முழுக்க மூடிய நிலையிலேயே இருப்போம். 12 அடி ஆழக் குழிக்குள் துணியைக் கொண்டுதான் உடலை உள்ளே இறக்குவோம்.
அடக்கம் செய்து முடித்ததும் நாங்கள் அணிந்திருக்கும் உடைகளை அங்கேயே போட்டு எரித்துவிடுவோம். தொடர்ந்து மஞ்சளும், உப்பும் சேர்ந்த தண்ணீரில் நன்றாகக் குளித்துவிட்டு கொண்டு வந்திருக்கும் மாற்று உடைக்கு மாறுவோம். இதேபோல் அடக்கம் செய்யும் குழுவில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போனதும் முதல் மூன்று நாள்களுக்கு அவர்களே, அவர்களை தனிமைப்படுத்திக் கொள்வர். அதற்குள் ஏதாவது அறிகுறி தென்பட்டால் கரோனா சோதனை செய்து கொள்ளவேண்டும். குழுவில் நாங்கள் தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல்படுவதால் எங்களில் யாரையும் இதுவரை கரோனா தொற்றவில்லை.
குமரி மாவட்டத்தில் சுனாமி தாக்கியபோதும், ஒக்கி புயல் வந்தபோதும் இப்படியான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். ஆனால் அதில் இருந்து இது முற்றாக மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது. எங்கள் இல்லங்களில்கூட முதலில் பயந்தார்கள். அதன்பின்பு, இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு இதைவிடப் பெரிதாக நம்மால் எதைச் செய்துவிட முடியும்? எனக்கேட்டு எங்களின் சேவையில் அவர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago