திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கு.க.செல்வம் நேற்று முன்தினம் (ஆக.3) இரவு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லி சென்றார். அங்கு பாஜக தேசியப் பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ் வீட்டில் நேற்று (ஆக.4) காலை சிற்றுண்டி அருந்திய அவர், மாலை 6 மணி அளவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது முரளிதர ராவ், எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் கூறியதாவது:
"அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். எனது ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைப்பதற்காக டெல்லி வந்தேன். அப்போது, பாஜக தலைவர் நட்டாவையும் சந்தித்தேன்.
» வட மாநிலத் தொழிலாளர்கள் திரும்பி வராததால் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஸ்தம்பிப்பு
» கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு: நாமக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு
ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்துக் கோயில் பகுதிகளையும் அயோத்தி போல மாற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழ்க் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். திமுக உள்கட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த வேண்டும்.
இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடிக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன். நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உடனான உறவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். நான் பாஜகவில் இணையவில்லை. தொகுதி சம்பந்தமான கோரிக்கையை வலியுறுத்தவே பாஜக தலைவரைச் சந்தித்தேன். என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்".
இவ்வாறு கு.க.செல்வம் கூறினார்.
இந்நிலையில், கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.5) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், திமுக கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதையொட்டி, அவரைத் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைப்பதுடன், 'திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது' என அவருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்புப் பின்னணி என்ன?
அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். பிறகு ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார்.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கு.க.செல்வம் எதிர்பார்த்தார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் கடந்த 2 வாரங்களாக திமுக நிகழ்வுகள் அனைத்தையும் புறக்கணித்து வந்தார். திமுக அலுவலகத்துக்கும் அவர் வரவில்லை.
ஆனாலும், மூத்த நிர்வாகிகள் உட்பட திமுகவினர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அவர் திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்திருப்பது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்படுவதாக கு.க.செல்வம் தற்காலிகமாக அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago