மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்!- எச்.ராஜா சிறப்புப் பேட்டி

By கே.கே.மகேஷ்

"மும்மொழிக் கொள்கையை எதிர்த்துக்கொண்டே, தன்னுடைய பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக" பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ் இணையத்திற்கு' அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

5-ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி என்கிறது புதிய கல்விக் கொள்கை. தமிழ் ஒரு பாடமாக அல்ல, பயிற்று மொழியாக (மீடியம்) இருக்கும். ஆறாவது வகுப்பில் இருந்துதான் இந்திய மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம் என்கிறது. அந்த மூன்றாவது மொழியாக, இந்தியோ சமஸ்கிருதமோ கட்டாயம் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. தமிழக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இனி அவர்களது பிள்ளைகள், 5-வது வரையில் தமிழ் மீடியம் படித்தாலும், ஆறாவது முதல் தெலுங்கையும் ஒரு மொழியாகப் படிக்கலாம்.

அதேபோல குமரி, கோவையில் வாழ்கிற மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், மூன்றாவது மொழியாக மலையாளம் படிக்கட்டுமே? கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், கன்னடம் படிக்கலாம். ராஜஸ்தான், குஜராத்தியர்களும் இங்கிருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் மூன்றாவது மொழியாக இந்தி படிக்கட்டும். இதைத்தான் படிக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை. வைகோவின் பேரப்பிள்ளைகள் விரும்பினால் தெலுங்கு படிக்கட்டும். இதில் இந்தித் திணிப்பு எங்கே வந்தது? இதை எதிர்க்கிறவர்கள் எவருமே தமிழ் அபிமானிகள் அல்ல, தமிழ் விரோதிகள் என்பது என்னுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டபோது, தனியார் பள்ளிகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. நீதிமன்றத்தை நாடின. இதேபோல தமிழ் வழிக்கல்விக்கு எதிராக தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தை நாடினால், மத்திய அரசு அதில் உறுதியாக இருக்குமா... தனியார் பக்கம் சாயுமா?

அது மாநில அரசு போட்ட திட்டம் என்பதால் எதிர்த்து வழக்குப் போட்டார்கள். நாடு முழுவதும் ஒரே கொள்கை நடைமுறைக்கு வரும்போது அப்படி யாரும் வழக்குப் போட முடியாது. தடை உத்தரவும் பெற முடியாது.

3, 5, 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது, 'நீ படிக்க லாயக்கில்லை' என்று முத்திரை குத்தத்தான் பயன்படும் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லையா?

இதில் ஆட்சேபனைக்கு என்ன இருக்கிறது? திடீரென்னு ஒரு பையன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறபோது, முன்னனுபவம் இல்லாததால் அவனுக்குப் பயம் வரும். அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களே அவனது விடைத்தாளைத் திருத்துவதற்குப் பதிலாக, 3, 5, 8-ம் வகுப்புகளிலேயே பொதுத்தேர்வு முறை நடத்துவது அவர்களுக்கு துணிச்சலையும், நம்பிக்கையையும் தரும்.

நான் படிக்கிற காலத்தில், என் அக்காவுடன் மூன்றாம் வகுப்பு படித்தவன், என்னுடன் நான்காம் வகுப்பு படித்து, என் தம்பியுடன் ஐந்தாம் வகுப்பு படித்ததைப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் அப்போது ஒண்ணாம் வகுப்பு, ரெண்டாம் வகுப்பில் கூட ஃபெயிலாக்குவது உண்டு. இப்போது 8-ம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி வந்துவிட்டது.

இப்போது 3, 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இருந்தாலும், பழையபடி கட்டாயத் தேர்ச்சித் திட்டம் தொடர்கிறது. எனவே, யாரும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதிருக்காது. உண்மையைச் சொன்னால், கற்றல், கற்பித்தல் முறை பற்றிய அசஸ்மென்டுக்காகத்தான் இந்தத் தேர்வே. ஆசிரியர்கள் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறார்களா? என்று சோதிக்க ஒரு வாய்ப்பு. அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு இடைக்காலப் பயிற்சி வழங்கப்படும். இதெல்லாம் நல்லதுதானே?

மருத்துவத்துக்கு 'நீட்' கொண்டு வந்ததைப் போல இனி கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது கிராமப்புற, ஏழை மாணவர்களின் உயர் கல்வியை அடியோடு தடுத்துவிடாதா?

கல்விக்கொள்கையை முழுமையாகப் படிக்காதவர்களின் குற்றச்சாட்டு இது. இதுவரையில் மூன்றாண்டாக இருந்த பட்டப்படிப்பு இனி நான்காண்டாக மாறும். இதுவரையில் ஏழ்மை, குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு மாணவர், 2-ம் ஆண்டோடு கல்லூரிப் படிப்பில் இருந்து விலகிவிட்டால், அவரது கல்வித்தகுதி 12-ம் வகுப்பு என்றே கருதப்படும். இனி அப்படியல்ல. பட்டப்படிப்பு 4 ஆண்டு படிப்பாக மாறுகிறது.

ஒருவர் முதல் ஆண்டு முடித்ததும் படிப்பில் இருந்து விலகினால், ஒன்றும் பிரச்சினையில்லை. அந்தப் பாடத்தில் அவர் சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் முடித்துள்ளதாக சான்றிதழ் வழங்கப்படும். 2 ஆண்டுகள் முடித்தால் டிப்ளமோ, மூன்று ஆண்டு முடித்தால் அதே பாடத்தில் போஸ்ட் டிப்ளமோ, 4 வருடத்தையும் நிறைவு செய்தால் டிகிரி. ஏதோ ஒரு காரணத்தால், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், காலம், வசதி வாய்ப்பு வந்த பிறகு திரும்பவும் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்து அந்த பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியும். இப்படிப் பல விஷயங்களில் ரொம்ப முற்போக்கான திட்டம் இது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன. என்ன செய்யப் போகிறீர்கள்?

அந்தக் கட்சிகளுக்கு எதிராக நானே முன்னின்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்று எச்சரிக்கிறேன். எந்தெந்த கட்சிகள் மும்மொழிக் கொள்கைகளை எதிர்க்கின்றனவோ அந்தக் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர், வார்டு மெம்பர் வரைக்குமான பதவியில் இருப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று பட்டியல் எடுப்பேன். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பது உறுதியானால், அவர்களது வீட்டுக்கு முன்னால் அவர்களது கட்சித் தொண்டர்களையும் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துவேன்.

உதாரணமாக, தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழியின் மகன் எங்கே படிக்கிறார் என்று நான் லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறேன். "வசதியான உங்கள் பிள்ளைக்கு ஒரு படிப்பு, எங்கள் பிள்ளைக்குக் கிடையாதா?" என்று அவர் வீட்டு முன்னால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து டிசி வாங்கி, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற பள்ளியில் அவரது பிள்ளையைச் சேர்க்கிற வரையில் இந்தப் போராட்டம் தொடரும். அல்லது "நான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க மாட்டேன்" என்று எழுதிக் கொடுக்கிற வரையில் இந்தப் போராட்டம் நடக்கும்.

இப்படிச் செய்தால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும். ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்துகிற வேளச்சேரி சன் ஸைன் ஸ்கூலில் இந்தி நடத்துறீங்களே? ஒரு கொள்கையைப் பேசினால், அதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள். ஊரை ஏமாற்றாதீர்கள்.

'தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்' என்று முதல்வரே அறிவித்துவிட்டார். உங்கள் கூட்டணியில் இருக்கிற பாமகவும்கூட அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறது. அவர்கள் வீட்டின் முன்பும் போராடுவீர்களா?

யார் சொன்னாலும் இதுதான் என் நிலைப்பாடு. கூட்டணியில் இருந்தாலும், அவர்களது கருத்து தவறு. ஏற்புடையது இல்லை. அவர்களது குடும்பத்தில் யார் படித்தாலும், அதே போராட்டத்தை நடத்துவோம். உங்கள் வீட்டு குழந்தை மும்மொழிக் கொள்கையில் படிக்கலாம். ஏழை வீட்டுக் குழந்தை படிக்கக் கூடாதா? என்று மக்கள் கேட்கும் காலம் வந்துவிட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு போனதுதானே ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் காரணம்? மறுபடியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்து, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சமமான, ஒரே மாதிரியான கல்வியைக் கிடைக்க வழி செய்தால் என்ன?

நான் தெளிவாச் சொல்றேன், இந்தியாவில் மும்மொழிக் கொள்கை கொண்டுவரப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படவில்லை. ஏற்கெனவே இருக்கிற மும்மொழிக் கொள்கை தொடரும் என்றுதான் சொல்லியிருக்கிறோம். மும்மொழிக் கொள்கைதான் சிறந்தது என்பது காங்கிரஸ் தொடங்கி தெலுங்கு தேசம் வரையில் நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட விஷயம். கேரள கம்யூனிஸ்ட்டுகளும், மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகளும் கூட அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிடம் மாறி மாறிப் பணம் பெற்று வருகிற ஊழல் கம்யூனிஸ்ட்டுகள்தான் எதிர்க்கிறார்கள்.

எதற்குக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்? அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொதுப் பட்டியலில் இருக்கிற விஷயங்கள் குறித்து மாநில அரசும், மத்திய அரசும் சட்டம் இயற்றலாம். மத்திய - மாநில சட்டங்களுக்கு இடையில் முரண்பாடு இருக்குமானால், மத்திய சட்டமே செல்லுபடியாகும் என்று இருக்கிறது. ஆக சட்டம் தெளிவாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் அமைதியாக இருக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை நடைமுறைக்கு வந்தே தீரும்.

சமீபத்தில் ஆ.ராசா கொடுத்த பேட்டி ஒன்றில்...(கேள்வியை முடிக்கும் முன்பே)

ஆ.ராசா கிறிஸ்தவ, இஸ்லாமிய, மதமாற்ற சக்திகளின் கைக்கூலி. இந்து மதத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிற பிரிவினை சக்தி.

நான் கேள்வியை முழுதாகக் கேட்டுவிடுகிறேன். 'திமுகவில் இருப்பவர்களும் இந்துக்கள்தான். நானும் ஒரு இந்துதான். ஆனால், எங்களைப் படிக்கவிடாமல் செய்தது யார்? எங்களைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது யார்?' என்று ஆ.ராசா கேட்டிருக்கிறாரே... அதற்கு உங்கள் பதில் என்ன?

வெள்ளைக்கார மதமாற்ற கும்பலின் கைக்கூலிகள் அப்படித்தான் பேசுவார்கள். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சிதான். நான் ஈ.வெ.ரா.வைப் பற்றி ஏதாவது சொன்னால் பாய்ந்து வருகிறார்களே, இந்து மதத்தைப் பற்றி எஸ்ரா சற்குணம், மோகன் சி.லாசரஸ் போன்ற பாதிரியார்கள் இழிவாகப் பேசியபோது இவர்கள் ஏதாவது கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? இந்து கோயில்கள் அனைத்தும் சாத்தான்களின் கூடாரம் என்று சொன்ன மோகன் சி.லாசரஸைக் கைது செய்யச் சொல்லி இவர்கள் போராடினார்களா? எத்தனை முறை என்னைக் கைது செய்யச் சொல்லிப் போராடினார்கள்?

ஆ.ராசாவின் அந்தப் பேட்டியை ரெக்கார்ட் பண்ணி வைத்திருக்கிறோம். அதில், கந்த சஷ்டி கவசம் பற்றி அவர் பேசியதுதான் திமுகவின் கருத்து என்று பிரச்சாரம் செய்வோம். வீட்டுக்கு வீடு அதைப் போட்டுக்காட்டி இந்தத் தேர்தலில், திமுக இந்து விரோத சக்தி, அந்தக் கட்சிக்கோ, அதன் கூட்டணிக்கோ வாக்களிக்காதீர்கள் என்று கேட்போம். ஆயிரம் விளக்கு எம்எல்ஏவைப் போல, திமுகவில் இருக்கும் இந்துக்கள் உண்மையைப் புரிந்து அங்கிருந்து வெளியேறுவார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகிறார்கள். உங்கள் உணர்வுகள் எப்படியிருக்கின்றன?

மிக்க மகிழ்ச்சி. 500 ஆண்டுகள் அவமதிக்கப்பட்டிருந்த புண்ணிய பூமி, மீண்டும் புனிதமடையப் போகிறது. ஒவ்வொரு இந்துவும் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது. அங்கே கூட்டம் கூடக்கூடாது என்பதால், என்னால் கலந்துகொள்ள முடியாது. ஆனால், வீட்டில் இருந்தபடியே விளக்கேற்றிக் கொண்டாடுவோம்.

7 ஆண்டுகள் மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள். உங்கள் கொள்கையில் எத்தனை சதவீதம் நிறைவேறியிருக்கிறது... இன்னும் நிறைவேற வேண்டியது என்ன?

பரம உன்னதமான நிலைக்கு இந்த நாடு முன்னேற வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பயிற்சியில் நாங்கள் படித்த பாடம். அந்த லட்சியத்தை நோக்கி நாட்டை வழிநடத்துகிறோம். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை, அயோத்தியில் ராமருக்குக் கோயில் என்று எங்களது நீண்டகால திட்டங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டன. அடுத்து, பொது சிவில் சட்டமும், மதமாற்றத் தடைச் சட்டமும் வரும்.

திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் நாங்கள் இதைச் செய்தோம் வாக்களியுங்கள் என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தன. ஆனால், அப்படி எதையுமே சொல்லாமல் மத உணர்வுகளைத் தூண்டியே ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆட்சிக்கு வந்த பிறகும் அதே மத உணர்வைத்தான் தூண்டுகிறீர்கள் என்று பாஜக மீது குற்றச்சாட்டு இருக்கிறதே?

வளர்ச்சியை முன்வைத்தும் பிரச்சாரம் செய்தோம். அதைச் சாதித்தும் காட்டியிருக்கிறோம். இந்தியாவில் கரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் பிபிஇ ஆடைகளோ, என் 95 மாஸ்க்கோ, வென்டிலேட்டரோ எதுவுமே இந்தியாவில் உற்பத்தியாகவில்லை. இன்று ஒரு நாளைக்கு 3 லட்சம் பிபிஇ ஆடைகள், 3 லட்சம் என் 95 முகக்கவசங்கள் உற்பத்தி செய்கிற நிலைக்கு இந்தியா வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் சீனாவில் இருந்து ரேபிட் கிட்களை வாங்கும் நிலை இருந்தது. மே மாதத்தில் இருந்து மாதத்துக்கு 10 லட்சம் பிசிஆர், 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களைத் தயாரித்து வருகிறோம். தமிழகத்திலேயே வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்கிறோம். அனைத்துத் துறைகளிலும் பரம உன்னதமான நிலைக்கு இந்தியாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு நனவாகி வருகிறது.

உலகம் முழுக்கப் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. அமெரிக்கவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 5 ஆக வீழ்ந்துவிட்டது. ஆனால், இந்தியாவின் ஜிடிபி 4 ஆக இருக்கிறது. முன்பைவிட வளர்ச்சி விகிதம் குறைவுதான் என்றாலும், கரோனா காலத்தில் இந்தியா பெரிய நெருக்கடிக்கு ஆளாகவில்லை என்பது நாங்கள் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்பதற்குச் சாட்சி.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்