காங்கிரஸ் இந்தியைத் திணித்ததாகக் கூறுவதா?- முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் இந்தியைத் திணித்ததாகக் குற்றச்சாட்டு கூறுவதா? காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தால்தான் மாநிலத்தில் இந்தி மொழியை பாஜக அரசால் திணிக்க முடியவில்லை என்பதை முதல்வர் பழனிசாமி உணரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

“மத்திய பாஜக அரசு மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒரே எதிர்ப்புக் குரலை ஒலித்த காரணத்தால் மூன்றாவது மொழியை மாநில அரசே தீர்மானிக்கலாம் என்று விதிவிலக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழக முதல்வர் தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை என்பதை வலியுறுத்தியதோடு நிற்காமல் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியைத் திணிக்க முயற்சி நடைபெற்றதாகக் கூறியிருக்கிறார். இதன் உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

அரசியல் நிர்ணய சபையில் ஆட்சி மொழி குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்ட நிலையில் எவ்வளவு காலம் ஆங்கில மொழி ஆட்சி மொழிக்குரிய அந்தஸ்துடன் நீடிப்பது என்பது குறித்தே கருத்து வேறுபாடுகள் இருந்தன . நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 14 டிசம்பர் 1949இல் தமிழகத்தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார், மும்பையைச் சேர்ந்த கே.எம்.முன்ஷி ஆகிய இருவரும் சமர்ப்பித்த சமரசத் திட்டத்தின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 17 இல் உறுப்பு 343 (1) இன்படி மத்திய அரசின் ஆட்சி மொழியாக தேவநாகரீக எழுத்துகளைக் கொண்ட இந்தி மொழி இருக்கும். 343 (2) இன்படி (1) வது உட்பிரிவில் யாது கூறப்பட்டிருப்பினும், இவ்வரசியல் அமைப்புச் சட்டம் தொடங்கியதற்கு முன்பு, ஆட்சி முறைகளில் ஆங்கிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ, அதேபோல இவ்வரசியல் அமைப்புச் சட்டம் தொடங்கி 15 ஆண்டுகாலம் வரை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தி பேசாத மக்களிடையே பல்வேறு காலகட்டங்களில் இந்தி திணிக்கப்படும் என்கிற அச்சம் ஏற்பட்டது. தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பப்படுவதைப் போல தேசிய அளவில் பி.ஜி.கேர் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் ஆட்சி மொழிக் குழுவின் 1956இல் வெளிவந்த அறிக்கையும், ஜி.பி. பந்த் தலைமையில் 1959இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் இந்தி பேசாத மக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியது.

அதேபோல ஜனசங்கத்தைச் சேர்ந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டுமென்று உறுதியான குரலில் தெரிவித்தார். இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கின.

இந்நிலையில் இந்தி பேசாத மக்களிடையே நிகழ்கிற அச்சத்தைப் போக்குகிற வகையில் ஆங்கிலத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது பட்டியலில் இணைக்க வேண்டுமென்று பிராங்க் ஆண்டனி கொண்டு வந்த மசோதா மீது 7 ஆகஸ்ட் 1959-ல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நேரு, 'எந்தக் காலத்திலும் மொழி திணிப்பு கிடையாது. எவ்வளவு காலத்திற்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்பதை இந்தி பேசாத மக்கள்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர வேறு எவரும் செய்வதற்கு உரிமை இல்லை.

எனவே இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியும், ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும்' என்று கூறியது நாடாளுமன்றப் பதிவேடுகளில் இன்றும் இருப்பதைக் காணலாம். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஜி.பி. பந்த், '2 ஆண்டுகளில் நான் சாதித்ததை 2 நிமிடங்களில் பிரதமர் நேரு அழித்துவிட்டார்' என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்தச் சூழலில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஈ.வெ.கி. சம்பத்துக்கு 3.8.1960 அன்று பிரதமர் நேரு எழுதிய கடிதத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட உறுதிமொழியை மீண்டும் உறுதிபடக் கூறியிருந்தார்.

இந்தி பேசாத மக்களுக்கு ஜவஹர்லால் நேரு வழங்கிய உறுதிமொழிக்கு, சட்டம் பாதுகாப்புக் கொடுக்கிற வகையில் ஆட்சி மொழிகள் சட்டத்தில் 1967 இல் பிரதமர் இந்திரா காந்தியால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இத்திருத்தச் சட்டத்தின் படி மாநிலத்திற்கிடையே செய்தித் தொடர்பு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும். மேலும் இந்தி மொழியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக எக்காலத்திலும் நீடிக்கும் வகையில் இச்சட்டத்திருத்தம் நிரந்தரப் பாதுகாப்பு வழங்கியது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர்களாக இருந்த நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் எந்த காலத்திலும் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கிற முயற்சியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்களே தவிர, இந்தித் திணிப்பை ஆதரித்தது கிடையாது. இன்றைக்கும் இந்தி பேசாத மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பது பிரதமர் நேரு 1959, 1961களில் வழங்கிய உறுதிமொழிதான்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜக ஆட்சியில் தமிழகத்தின் மீது இந்தித் திணிப்பை செய்ய முடியாத நிலை ஏற்படுவதற்கு நேரு உறுதிமொழிதான் இன்று வரை தடையாக இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணரவேண்டும்.

எனவே, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை என்றைக்குமே இந்தித் திணிப்பை ஆதரித்தது கிடையாது. ஆனால், காங்கிரஸ் மீது எழுப்பப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கிற வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே பண்டித நேரு தொலைநோக்குப் பார்வையோடு தமிழக மக்களின் மொழியுணர்வுக்கு மதிப்பளித்து எந்தக் காலத்திலும் இந்தி மொழி திணிக்கப்படாத வகையில் உறுதிமொழி வழங்கியதோடு மட்டுமல்லாமல் சட்டத்தின் மூலமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்