புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களைத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; தினகரன்

By செய்திப்பிரிவு

புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களைத் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில் அவசரமாக புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதே சரியாக இருக்கும். அப்படி வரும்போது குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்பதை 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விதான் என்று அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும், உலக அளவிலான பயன்பாட்டுக்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும். மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே (Optional) என்றிருக்க வேண்டும். அப்படி மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விரும்பும் மொழியாகவே இருக்க வேண்டும். ஆனால் 'அந்த மூன்றாவது மொழி என்பது எந்தக்காலத்திலும் இந்தி அல்லது சமஸ்கிருதம் ஆக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்' எனும் உறுதிமொழியைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

எந்த ஒரு மொழியும் நமக்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில், நம்முடைய தாய்மொழியை அழித்துவிட்டு எந்த மொழியை உயர்த்திப் பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது; கண்டிப்பாக எதிர்ப்போம். எனவே, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழிகளை வலிந்து நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சிக்குப் பதிலாக, தாய்மொழியை உயர்த்திப் பிடிப்பதே வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும்.

பாடச்சுமை குறைக்கப்பட்டு மாணவர்கள் சுயமாக சிந்தித்துக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்குவது பாராட்டத்தக்கது. ஆனால், போதுமான கழிப்பறைகளோ, வகுப்பறைகளோ இல்லாத பள்ளிக்கூடங்கள் அதிகமிருக்கும் நாட்டில் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே முதல் பணியாக இருக்க வேண்டும்.

கல்விக்கொள்கை தொடர்பான அமமுகவின் பரிந்துரையில் கூறியதைப்போல 3, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை நிச்சயமாக வதைப்பதாகவே அமையும். 'பள்ளியில் கற்றல் இடைநிற்றலில் இருந்து வெளியே சென்ற 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது 2020 தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு' என்று கூறப்பட்டிருப்பது உண்மையாக இருந்தால், அதனைச் சிதைக்கும் இந்தப் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

இதைப்போன்றே, பொதுவான படிப்போடு கூடுதல் அறிவாக தொழில் படிப்பும் சேர வேண்டுமே தவிர, பட்டப்படிப்பை முடிக்காமல் மாணவர்களை ஏதாவது ஒரு தொழிலை நோக்கித் தள்ளி விடுவதாக இருந்தால், அண்ணா அச்சப்பட்டதைப்போல எதிர்காலத்தில் அது குலக்கல்வியாக மாறுவதற்கான ஆபத்து இருக்கிறது. எனவே, இதனைச் செயல்படுத்துவதில் தமிழகம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

நாடு முழுமைக்கும் என்.சி.இ.ஆர்.டி. மட்டுமே பாடத்திட்டங்களை உருவாக்கும் என்று கூறப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். இதேபோன்று உயர் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். நீட் தேர்வுக்குப் பிறகு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தத் தேர்வும் வைக்கப்பட்டால், பட்டப்படிப்பு என்பது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வு முறையும் எதிர்பார்க்கிற நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்பதையும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இதையெல்லாம் விட, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மறைமுகமாக மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு செல்லும் ஏற்பாடுகளாக தேசிய கல்வி ஆணையம், தேசிய ஆய்வு அமைப்பு (MERU) போன்ற அமைப்புகளை புதிய கல்விக் கொள்கை முன்மொழிந்து இருக்கிறது.

பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் போன்றவற்றை எல்லாம் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, இவற்றுக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கும் வேலைகளை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்? இது, 'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி எடுத்து வா. இருவரும் ஊதி சாப்பிடலாம்' என்ற பழமொழியைப் போல இருக்கிறது.

இந்த ஏற்பாடு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. பல்வேறு வகையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, உட்கட்டமைப்பு வசதி கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில சூழலுக்கும், கல்வி வளர்ச்சியில் அந்தந்த மாநிலங்கள் பெற்றிருக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் தேவைக்கு ஏற்பவும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்களைச் செய்து கொள்வதற்கான உரிமை மாநில அரசுகளுக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்திற்குத் தேவையான மாற்றங்களுடன் கூடிய தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

திமுகவைப் போல வறட்டு வாதத்திற்காகவோ, அரசியலுக்காவோ நாங்கள் கண்களை மூடிக்கொண்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை; அதைப் போல ஒரேயடியாக ஆதரிக்கவும் இல்லை.

கல்வி என்பது மாணவர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் சார்ந்தது; இதில் அரசியலுக்காக நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் கல்விக் கொள்கையிலுள்ள குறைகளையும், அதற்காக செய்ய வேண்டிய திருத்தங்களையும், தமிழக அரசு இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டியவற்றையும் ஏற்கெனவே தெளிவாக முன் வைத்திருக்கிறோம்.

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை வரைவின் மீது நாட்டிலேயே முதலாவதாக குழு அமைத்து, அது தொடர்பான பரிந்துரைகளை மிகத் தெளிவாக வெளியிட்ட முதல் அரசியல் கட்சியான அமமுக, கல்விக் கொள்கையில் ஜெயலலிதாவின் பாதையில் மக்களின் நலன் சார்ந்தும், தமிழகத்தின் நலன் சார்ந்தும் தொடர்ந்து பயணிக்கும்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்