ஆன்லைன் வகுப்புகள்; அனைத்துப் பள்ளிகளும் ஒரே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்: அரசு உத்தரவை மதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார் பள்ளிகள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கும் விதமாக நாளிதழ்களில் அரசு விளம்பரம் வெளியிட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனக் கோரி பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வுமுன் விசாரணையில் உள்ளன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் ஆன்லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இன்று, இந்த வழக்குகள் மீண்டும் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, “மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்கள் என 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு, “இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருக்கிறது. இதை அமல்படுத்த முடியாது” எனத் தெரிவித்தது.

அரசாணையை முழுமையாகப் படிக்காமல், எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகள் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

அதனால், இந்த வழக்கில், அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ்ப் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது எனத் தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்