சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கரோனா சூழல் சீரடையும் வரை அனைத்து வகையான வாடகை வாகனங்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில், கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை வாகன ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். பல வழிகளில் வருவாய் இழப்பையும், வாழ்வாதாரப் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வரும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாகவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை கார், மினி வேன், உள்ளூர் போக்குவரத்துக்கான சரக்கு வாகனம் ஆகியவற்றின் உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் தான்.

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு இத்தகைய வாகனங்களை இயக்க முடியவில்லை. ஊரடங்கு ஆணையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, இந்த வாகனங்கள் சார்ந்த தொழில்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், வாகனங்களை வாடகைக்கு எடுக்க எவரும் முன்வருவதில்லை. அதனால் அவர்கள் வருவாய் இல்லாமல் வாடுகின்றனர். குடும்பம் நடத்துவதற்கும், அடிப்படைச் செலவுகளுக்கும் கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக வாகனங்கள் இயங்காததால், வாடகை வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களால் ஒரு ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியவில்லை.

வாகனங்களுக்காக வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையையே கட்ட முடியாததால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தும், கடன் தவணை ஒத்திவைப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வாடும் அவர்களை சாலைவரி கட்டும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல் ஆகும்.

இத்தகைய வாகனங்களை இயக்குபவர்கள் பெரு முதலாளிகளும் இல்லை. பெரும்பாலும் வாடகை வாகனங்களை அவற்றின் ஓட்டுநர்கள்தான் வங்கிக் கடன் பெற்று இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரமே வாகனங்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை வருவாய்தான். அந்த வருவாய் கிடைக்காமல் வறுமையில் வாடும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் சிறப்பு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு எந்த உதவியும் வழங்காமல், பல்லாயிரக் கணக்கில் சாலை வரியை செலுத்த வேண்டும் என்று கூறுவது நிராயுதபாணியாக இருப்பவர் மீது இரு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதாக இருக்கும்; அது நியாயமல்ல.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும். இவர்களில் பலர் வறுமையையும், வாழ்க்கை சிரமங்களையும் சமாளிக்க முடியாமல் கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் அவர்களை மேலும் மேலும் பண அழுத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக்கக் கூடாது.

எனவே, கரோனா சூழல் சீரடையும் வரை அனைத்து வகையான வாடகை வாகனங்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்