புதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எப்போதும் அனுமதிக்கமாட்டோம்; முதல்வர் பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

1963 ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்தவரையில். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், 1965 ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும் மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களைத் தீவிரமாக நடத்தினர்

மக்களிடையே மும்மொழிக் கொள்கையைப் பற்றி கவலைகள் நீங்காததால், அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று 'தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது' என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.

அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்ஜிஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, அதாவது 13.11.1986 அன்று, இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா, 'இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும், உறுதியாக உள்ளோம்' என்று சூளுரைத்தார். மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்தித் திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர்.

இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழிவந்த தமிழக அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டபோதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதைச் சுட்டிக் காட்டி , அதனைத் தீவிரமாக எதிர்த்தும் மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைப்பிடிப்போம் என உறுதிபடத் தெரிவித்து 26.6.2019 அன்றே பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதைக் கடந்த ஆண்டு எனது சுந்தந்திர தின உரையிலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது அந்தப் பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு அதிமுக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்