புதிய கல்விக் கொள்கையை இறுதிவரை எதிர்த்து தமிழகத்தின் கல்வி ஒளியை அணையாமல் காப்போம்: ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

ஜனநாயகத்தை மதிக்காமல் - அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - நாடாளுமன்றத்தை மதிக்காமல் - எதிர்க்கட்சிகளை மதிக்காமல் - யார் பேச்சையும் கேட்காமல் - ஊரடங்குக் காலத்தில் மறைமுகமாகப் புகுத்தப்படும் கல்விக் கொள்கையை இறுதிவரை எதிர்ப்போம் என புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்தரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இன்று (2-8-2020), திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 'புதிய கல்விக் கொள்கை' பற்றிய காணொலிக் கருத்து மேடை நிகழ்வு நடைபெற்றது. திமுக மக்களவை துணைத்தலைவர் கனிமொழி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பேசினர்.

இந்நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

''புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால், இருக்கும் கல்வியைப் பறிக்கக் கூடிய ஒரு கொள்கையை மத்திய பாஜக அரசாங்கம் கொண்டு வருவதைக் கண்டித்து நடைபெறக்கூடிய காணொலிக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு தங்களது அரிய கருத்துகளை வழங்கிய, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன், வரவேற்புரை ஆற்றிய கனிமொழி ஆகியோருக்கு நன்றி.

நீங்கள் வழங்கிய அரிய கருத்துகளுக்கு என்னுடைய பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் நானும் கனிமொழியும் மட்டும்தான் அரசியல் சார்பானவர்கள். நீங்கள் ஐந்து பேரும் கல்வியாளர்கள்; பொதுவானவர்கள்.

பொதுவான கல்வியாளர்களை அழைத்து, ஓர் அரசியல் கட்சி சார்பில் இப்படியொரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்கிறோம் என்றால், இதற்கு முக்கியமான காரணம் - இது அரசியல் பிரச்சினை அல்ல, பொதுமக்களின் பிரச்சினை. பொதுவாக மாணவர்களின் பிரச்சினை, மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால்தான் பொதுவான உங்களை அழைத்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம்.

ஓர் அரசியல் இயக்கம் சார்பில் அழைக்கும்போது பொதுவான கல்வியாளர்கள் வரத் தயங்குவார்கள். ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் நீங்கள் பங்கேற்றுள்ளீர்கள். திமுக என்பது ஓர் அரசியல் கட்சி மட்டும் அல்ல; ஒரு தத்துவத்துக்கான அமைப்புமாகும். தமிழ் மக்களுக்காகப் போராடும் அமைப்பு என்று நீங்கள் உணர்ந்து இதில் பங்கெடுத்துள்ளீர்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு முன்பு பேசிய கல்வியாளர்கள் அனைவரும், இந்தப் புதிய கல்விக் கொள்கை எவ்வளவு மோசமானது, எந்த அளவுக்கு மக்களுக்கு விரோதமானது என்பதைத் தெரிவித்தார்கள். இந்தக் கல்விக் கொள்கை இப்படித்தான் மிக மோசமானதாக இருக்கும் என்று இன்று நேற்றல்ல, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, தலைவர் கலைஞர் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாளன்று தலைவர் கலைஞர் ஓர் அறிக்கை வெளியிட்டார். 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்தது. வந்த உடனேயே கல்வியில் கை வைக்க ஆரம்பித்தார்கள். கல்வியில் கை வைத்தால்தான், மொத்தத்தையும் மாற்ற முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் கல்வியில் மாற்றம் செய்யத் தொடங்கினார்கள்.

இன்றைக்கு வந்திருப்பது கஸ்தூரிரங்கன் குழுவினுடைய அறிக்கை. ஆனால், இதற்கு முன்னால் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில்தான் குழு அமைத்தார்கள். அவர் 200 பக்கத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்தார். அந்த சுப்பிரமணியம் அறிக்கையைக் கண்டித்து தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார்.

அதில் தலைவர் கலைஞர சொல்லி இருந்த ஒரு சில கருத்துகளை மட்டும் அப்படியே சொல்கிறேன்.

1. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்வியாளர் தலைமையில் குழுவை உருவாக்காமல் அரசு அதிகாரி தலைமையில் குழு அமைத்தது ஏன்?
2. இக்குழுவின் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.
3. பொதுத்தேர்வுகளை வரிசையாக நடத்துவதால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது செயலற்றதாகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
4. ஒரு மாணவன் தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனை தொழிற்பயிற்சிக்கு அனுப்பலாம் என்பது நயவஞ்சகம் இல்லையா?
இது மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
5. அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்.


6. பிளஸ் 2 முடித்தவர்கள், பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும்.
7. கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும்.
8. பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.
9. இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை - மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
10. "புதிய கல்விக் கொள்கை" என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை.
- இப்படி 2016-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார் தலைவர் கலைஞர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எதையெல்லாம் சொல்லிப் பயந்தாரோ; அதுதான் இன்று புதிய கல்விக் கொள்கையாக வந்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மத யானை புகுந்து நாசம் செய்யத் திட்டமிட்டு இருப்பதைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்.


தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுக்கொடுத்த சமூக நீதி - சனநாயகம் - சமத்துவம் - எல்லோர்க்கும் எல்லாம் - ஒடுக்கப்பட்டோர் உரிமை - தமிழர் இன நலன் - தமிழ்மொழிக் காப்பு - தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் - தமிழக மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய கல்விக் கொள்கையை அலசி ஆராய்ந்ததில், இதில் சொல்லப்பட்ட எந்தத் தத்துவத்துக்கும் உடன்பாடானதாக இந்தக் கல்விக் கொள்கை இல்லை.

எனவேதான், இந்தக் கல்வி அறிக்கை குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம். அக்குழுவில் பத்து கல்வியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். புதிய கல்விக் கொள்கையில் 400-க்கும் மேற்பட்ட பக்கங்களை இவர்கள் அலசி ஆராய்ந்தார்கள்.
ஓர் அறிக்கையைக் கொடுத்தார்கள்.

1. இக்கல்விக் கொள்கை காவிமயமாக்கலாக உள்ளது.
2. வேதக் கலாச்சாரத்தைத் திணிப்பதாக உள்ளது.
3. சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
4. பெண் கல்வி குறித்துக் கவலைப்படவில்லை.
5. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
6. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது.
7. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது.
8. மதிய உணவுத்திட்டத்தைக் கைவிடுகிறார்கள்.
9. தொழிற்கல்வி என்ற பெயரால், குலக்கல்வி முறையை அமல்படுத்த நினைக்கிறார்கள்.
10. மாநில அளவில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
11. கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது.
- இப்படி பல்வேறு பரிந்துரைகளைச் சொல்லி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

28.7.2019 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று இந்த அறிக்கை தரப்பட்டது.

இந்தப் புதிய கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாம் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். ஆனால் அது எதையும் ஏற்காமல் மத்திய அரசு, அந்தக் கொள்கையை அமல்படுத்திவிட்டது.

“மத்திய கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம்” - என்று நேற்றைய தினம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். ‘மத்திய அரசுப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியைச் செயல்படுத்த இயலாது' என்று அதிகாரிகள் சொன்னதால் மத்திய அரசு பல்டி அடித்துள்ளது.

“ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். அதனை எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கவும் செய்யலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னதும் இதே மத்திய அரசுதான். இப்போது அதில் மட்டும் பின்வாங்குகிறார்கள் என்றால், இவர்களுக்கு நிரந்தரமான கொள்கை என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது.

இதனால்தான் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இக்கல்விக் கொள்கை பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசி இருக்கிறார். “மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

“இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள்” என்று பிரதமருக்குத் தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன்.

“அனைவருக்கும் கல்வி கிடைக்கும்” என்று நேற்றைய தினம் பிரதமர் சொல்லி இருக்கிறார். “இல்லை பிரதமரே! உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும்.” என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

“கல்வித் தரம் மேம்பாடு அடையும்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். “கல்வி உரிமையை மறுத்து அனைவரையும் தொழிற்சாலைகளை நோக்கி துரத்துகிறீர்கள்” என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

“தாய்மொழி மூலம் சிந்தித்து, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்துவார்கள்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். “இந்தி மூலமாகவும், சமஸ்கிருதம் மூலமாகவும் சிந்திக்க வழிகாட்டுகிறீர்கள்; தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டுகிறேன்.

“வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம்” என்கிறீர்கள். “இல்லை! இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கி இருக்கிறீர்கள்” என்று சொல்கிறேன். “வேலைவாய்ப்பைத் தேடாமல் வேலைவாய்ப்பை மாணவர்களே உருவாக்கிக் கொள்ள பாதை அமைத்துள்ளோம்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். “இல்லை! மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் கடமையில் இருந்து இந்த அரசு நழுவி விட்டது” என்று நான் சொல்கிறேன்.

பிரதமர் சொல்வது போல, அனைவருக்கும் கல்வி கிடைக்காது. பிரதமர் நாட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார். இந்தக் கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும். கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள்.

இந்தியாவின் பலமே இளைஞர் சக்தி என்பார்கள். அந்த இளைஞர் சக்தியை பெரும்பாலும் இழந்துவிடுவோம். இளைஞர் சக்தி இல்லாத இந்தியாவைத்தான் இந்தப் புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

இவற்றை திமுக எதிர்ப்பதைப் போல அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, ஆளும் கட்சி எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும்.

அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அதிமுக, மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் மௌனம் சாதிக்கக் கூடாது. அப்படி மௌனமாக இருந்தால், அது அண்ணாவின் பெயருக்கு அவமானம்.

அரசியல் ரீதியாக மத்திய அரசுக்குப் பயந்து தமிழ்நாட்டு மக்களின் - மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தை மதிக்காமல் - அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - நாடாளுமன்றத்தை மதிக்காமல் - எதிர்க்கட்சிகளை மதிக்காமல் - யார் பேச்சையும் கேட்காமல் - ஊரடங்குக் காலத்தில் மறைமுகமாகப் புகுத்தப்படும் இக்கல்விக் கொள்கையை இறுதிவரை எதிர்ப்போம்.

அனைவருக்குமான கல்வி என்பது நமது இலக்கு. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சியால் விதைக்கப்பட்ட விதை - இந்த சமூக நீதிக் கல்வி. நீதிக்கட்சியால் விதைக்கப்பட்டு காமராசரால் பள்ளிக் கல்வியாக பயிராகி, கலைஞரால் கல்லூரிக் கல்வியாக மரமாகி - இன்று தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் அறிவுச்சக்தியாகத் திகழ்கிறார்கள்.

அத்தகைய கல்வி ஒளியை அணைய விடமாட்டோம். அதனை அணைக்க நினைப்பவர்களிடமிருந்து, தமிழ்மக்கள் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் கல்வி ஒளியைக் காப்போம்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்