நெல்லையில் கரோனாவால் இறந்த 38 சடலங்களை தகனம், நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்: உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி தொடரும் அளப்பரிய சேவை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலியில் கரோனாவால் உயிரிழந்த 38 பேரின் சடலங்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்து அளப்பரிய சேவையை எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் கரோனா நோய்த் தொற்று காரணமாக நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்ய உறவினர்களே தயங்கும் நிலையில் எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளின் தன்னார்வலர்கள், கடந்த 4 மாதங்களாக கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பெற்று பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நல்லடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்வதற்கு மின்மயானத்துக்கு கொண்டு செல்லும் பணியை தளராமல் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் எஸ்டிபிஐ கட்சியின் தன்னார்வ தொண்டர்களால் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 30 பேரின் சடலங்கள் தகனம் செய்தல் அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

இதுபோல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தன்னார்வ தொண்டர்களால் 8 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொள்வதற்கு இணங்க உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, கண்ணியத்துடன் இந்த அளப்பரிய சேவையை தன்னார்வலர்கள் இடைவிடாது செய்து வருகிறார்கள். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ஆம்புலன்ஸ் எரிபொருள் செலவையும் பெற்றுக்கொண்டு இப்பணியை செய்வதாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் எஸ். கனி கூறியதாவது:

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சடலங்களை கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு செலவு தொகையை கேட்பதில்லை. அதேநேரத்தில் ராஜபாளையம், தென்காசி போன்ற பிறமாவட்டங்களுக்கு அதிக தூரத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல எரிபொருள் செலவை பெறுகிறோம்.

அதுவும் ஏழைகளிடம் பெறுவதில்லை. இப்பணியை எங்கள் கட்சி தன்னார்வலர்கள் மேற்கொள்ள 500 கவச உடைகளை தன்னார்வலர் ஒருவர் எங்களுக்கு வழங்கியிருக்கிறார். ஒரு சடலத்தை நல்லடக்கம் செய்யும் பகுதிக்கு கொண்டு செல்ல இரு ஆம்புலன்ஸுகள் தேவைப்படுகிறது. ஒரு ஆம்புலன்ஸில் சடலத்தை கொண்டு செல்கிறார்கள். மற்றொரு ஆம்புலன்ஸில் பாதுகாப்பு கவச உடை அணிந்த தன்னார்வலர்களும் செல்கிறார்கள்.

சடலத்தை கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் குழிக்குள் இறக்க 40 மீட்டர் வெள்ளைத்துணி தேவைப்படுகிறது. குழிக்குள் 3 மூட்டை குளோரின் பவுடரை தூவுகிறோம். ஒவ்வொரு சடலத்தைக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்து திரும்பியபின் ஆம்புலன்ஸுகளை சுத்தம் செய்வதற்கு மட்டும் ரூ.1500 வரை ஆகிறது.

இதுபோல் பல்வேறு செலவுகளும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் நாங்களே ஏற்கிறோம். மின்மயானத்துக்கு செல்வதற்கு குறைந்த அளவுக்கு கவச உடை அணிந்த தன்னார்வலர்கள் போதும்.

அதேநேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அதிகளவில் கவச உடை அணிந்த தன்னார்வலர்கள் செல்ல வேண்டும். கரோனா அச்சத்திலும் எங்களது தன்னார்வலர்கள் தொடர்ந்து எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் களப்பணியாற்றுகிறார்கள்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாங்கள் கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்யும் பணியை செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்