புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை அறிவிப்பு; முதல்வர் நாராயணசாமி தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 30) கூறியதாவது;

"புதுச்சேரி மாநிலத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக இருக்கிறது. அகில இந்திய அளவில் இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது. அப்படி இருந்தாலும் கூட நம்முடைய மாநிலத்தில் இறப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், கரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாகக் கூறியுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கவும், திரையரங்குகள், கலையரங்குகள், உணவகங்களில் உள்ள பார்களை மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோயில் திருவிழாக்களை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் கரோனா பாதிப்பு 6,000 வரை உயரும் என்றும், மிகப்பெரிய அளவில் பாதிப்பவர்கள் 2,600 பேர் வரை இருக்கும் என்றும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆகவே, அதற்கு சுகாதாரத்துறை ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையான உபகரணங்கள், மருந்துகள் வாங்கவும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், ஏ.எம்.என்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை நியமிக்கவும் தேவையான ஏற்பாடுகளை மருத்துவத்துறை செய்ய வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். வெகுவிரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.

நம்முடைய மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவினால் அதனைத் தடுத்து நிறுத்த மருத்துவத்துறை மட்டுமின்றி மற்ற துறைகளும் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசின் சார்பில் செய்து கொண்டிருக்கிறோம்.

தேவையான உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, இப்போது அவை வாங்கப்பட்டு வருகின்றன. வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகளை வாங்க தேவையான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பில் நாம் இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. நமக்கு மத்திய அரசில் இருந்து வென்டிலேட்டர்கள், முழு கவச உடைகள் வந்துள்ளன. ஆனால், மற்ற உபகரணங்கள் கொடுக்க காலதாமதமாகிறது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு நமக்கு நிதியுதவி வழங்க வேண்டும். அந்த நிதியுதவி நமக்குக் கிடைக்கவில்லை. குறித்த காலத்தில் கிடைத்தால்தான் தேவையான உபகரணங்களை வாங்கவும், மருத்துவர்களை நியமிப்பதற்கான வேலையையும் நாம் செய்ய முடியும். இப்போது, மாநில அரசின் நிதியில் இருந்து அனைத்துப் பணிகளையும் நாம் செய்து வருகிறோம். முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் இருந்து ஆர்டிபிசிஆர் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கி அந்தக் கருவிகள் வாங்கப்படுகின்றன.

இப்படி மாநில அரசின் நிதி, முதல்வர் கரோனா நிவாரண நிதியில் இருந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

முதல் கட்டமாக ரூ.225 கோடியையும், மொத்தமாக புதுச்சேரி மாநிலத்தைக் கரோனா இல்லாத மாநிலமாக மாற்றத் தேவைப்படும் நிதி ரூ.975 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு அது சம்பந்தமான எந்தவிதமான பதிலையும் மாநில அரசுக்கு இதுவரை கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஒருபுறம் மத்திய அரசின் விதிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொருபுறம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தச் சோதனையான காலகட்டத்தில் புதுச்சேரி மாநில மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற முறையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு, பக்கத்து மாநிலமான தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதையும் கருத்தில் கொண்டு, நம்முடைய மாநில அரசின் சார்பில் நாம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நாளை அறிவிப்பை வெளியிடுவோம்.

புதுச்சேரி மாநில மக்களின் உயிர் முக்கியம். அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. நிதி ஆதாரத்தை ஒருபுறம் பெருக்க வேண்டும். மற்றொரு புறம் மக்களுக்கு மாநில அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நாளை அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிப்போம்.

கரோனாவுக்கு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. பக்கத்து மாநிலமான தமிழகத்தில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. நம்முடைய மாநிலத்தில் அதனைக் கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கரோனா பாதித்தவர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற முடிவை இப்போது எடுத்துள்ளோம். யார் வீட்டில் கரோனா உள்ளதோ அவர்களின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்.

இதனால் மக்களின் சகஜ வாழ்கை பாதிக்காது. இதையெல்லாம் புதுச்சேரி மாநில மக்கள் உணர்ந்துகொண்டு முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதியோடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கரோனாவை புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாகக் குறைக்க முடியும்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்