வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பையும் பறித்த கரோனா: நீதித்துறை இயல்புக்குத் திரும்புவது எப்போது? 

By என்.சுவாமிநாதன்

கரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையிலும் அரசு பலதுறைகள் இயங்குவதற்குத் தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனால், இன்னும்கூட நீதிமன்றங்களுக்குள் அனைத்து வழக்கறிஞர்களையும் அனுமதிக்காமல் இருப்பதும், குறுக்கு விசாரணை உள்ளிட்ட வழக்கின் முக்கிய நடவடிக்கைகளுக்கு வாதி, பிரதிவாதிகளை அனுமதிக்காமல் இருப்பதும் வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பைப் பறித்திருக்கிறது.

இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் பாவெல்சக்தி ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், ''ஐனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறையைச் சார்ந்தே மக்களின் நலனும் இருக்கிறது. நீதித்துறையைப் பொறுத்தவரை நீதிபதிகள் ஒருகண் என்றால், மற்றொரு கண்ணாக வழக்காடும் வழக்கறிஞர்களைச் சொல்லலாம். கரோனாவால் நீதிமன்றங்களில் இருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அரசு ஊரடங்கின் தளர்வுகளில் இன்னும்கூட அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்குள் சென்று திரும்ப அனுமதிக்கவில்லை. இதனால் இந்தக் கரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக வழக்கறிஞர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர் வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது. இப்படி விதிமுறைகளைக் கொண்டிருக்கும் பார் கவுன்சிலே மாற்றுத்தொழில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்காத அளவுக்கு வழக்கறிஞர் தொழிலைக் கரோனா புரட்டிப் போட்டிருக்கிறது.

நீதிமன்றங்களில் நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் வழக்கம்போல் பணியில் இருக்கிறார்கள். ஆனால், வழக்கறிஞர்கள் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் இறுதி நிலையை எட்டியிருக்கும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வாதி, பிரதிவாதி எனச் சொல்லப்படும் கட்சியினர் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவே இல்லை. வாதியும், பிரதிவாதியும் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாதபோது வழக்கறிஞர்கள் தங்களின் கட்டணத்தை வாங்குவது சாத்தியமா? குறுக்கு விசாரணை, முதல் விசாரணை உள்படக் கண்டிப்பாக ஆஜர் ஆகவேண்டிய எதற்குமே கட்சிக்காரர்கள் வராததால் வழக்கறிஞர்கள் முற்றாகத் தொழிலையும், கட்டணத்தையும் இழந்திருக்கின்றனர்.

குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும். அதற்குப் பயந்து கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்கு வருவார்கள். ஆனால் இப்போது கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதியே இல்லாததால் பிடிவாரண்ட் தொடர்பான நடவடிக்கைகளும் இல்லை. இதனால் அன்றாட வழக்கு நடவடிக்கைகளுக்காக வழக்கறிஞர்களோடு தொடர்பில் இருந்த, கட்சிக்காரர்களும் இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.

காவல் நிலையங்களுக்கு நியாயமாகத் தேவைப்படும்பட்சத்தில் புகார்தாரரோடு வழக்கறிஞர்களும் செல்வது வழக்கம். காவலர்கள் சட்டம், ஒழுங்கு பணிகளைவிடக் கரோனா பணியிலேயே கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். காவலர்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று உறுதியாவதால் காவல் நிலையங்களும் திடீர், திடீரென மூடுவதும் திறப்பதுமாக இருக்கின்றன. இதனால் காவல் நிலையங்களுக்கு வழக்கமாக வரும் அடிதடி வழக்குகள் முதல் வாய்த் தகராறுவரை அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் குற்றவியல் பிரிவில் பயிற்சி செய்யும் வழக்கறிஞர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதேபோல் கரோனா பணியில் காவலர்கள் கூடுதல் கவனம் செலுத்திவருவதால் குற்றங்கள் ஒருபக்கம் தொடர்ந்தாலும், குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்படுவோரை ஜாமீன் எடுக்கும் வாய்ப்பும் இல்லை. நீதிமன்றங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்பும், வழக்கறிஞர்களை முழுமையான அளவில் அனுமதிக்காமலும், அனைத்து வழக்குகளின் மீதான இயல்பான நடவடிக்கை தொடங்காததாலும் வழக்கறிஞர் தொழில் மிகவும் சவாலான சூழலை எதிர்கொள்கிறது.

கரோனாவின் தொடக்கத்தில் சொந்தமாக வீடு, கார் இல்லாத வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு பார் கவுன்சில் 4 ஆயிரம் ரூபாய் நல உதவியை ஒருமுறை வழங்கியது. இதேபோல் ஒருசில மாவட்ட நீதிமன்றங்களில் இயங்கிவரும் வழக்கறிஞர்கள் சங்கங்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒருமுறை மட்டும் 3000 ரூபாய் வரை நிதி உதவி கொடுத்து நேசக்கரம் நீட்டியதும் ஆறுதலான விஷயம்.

சட்டம் படித்து, சமூக சிந்தனையும் கொண்டவர்களே வழக்கறிஞர் பணிக்கு வருகிறார்கள். சமூகம் குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்ட வழக்கறிஞர்களை, கரோனா தொற்றாமல் இருக்கும் உரிய வழிகாட்டி நெறிமுறைகளோடு நீதிமன்றத்துக்குள் அனுமதிப்பதில் இன்னும் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்? 60 வயதுக்கு மேலான வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதைத் தாங்களே தவிர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை எப்படி சமநிலை கொள்ளச் செய்வது?

வழக்கறிஞர்கள் இறப்புக்குப் பின்பு வழக்கறிஞர் சேமநல நிதியாக அவரது குடும்பத்திற்கு 7.25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பி.எஃப். கணக்கில் இருந்து கரோனா காலத்தில் தொழிலாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதித்ததுபோல் சேமநல நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாயைக் கரோனா காலநிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அண்மையில் இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் அனைத்து வழக்கறிஞர்களின் சூழலையும் புரிந்துகொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்