குற்றக் குறிப்பாணையைக் காரணம் காட்டி அரசு ஊழியர்களை முறையாக ஓய்வுபெற அனுமதிக்காதது கரோனா பாதிப்பைவிடக் கொடியது; ஜாக்டோ-ஜியோ வேதனை

By ஜெ.ஞானசேகர்

கடந்த 2019-ம் ஆண்டு, ஜனவரியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குற்றக் குறிப்பாணை பெற்ற அரசு ஊழியர்களை முறையாக பணி ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது கரோனா பாதிப்பைவிடக் கொடியது என்று ஜாக்டோ- ஜியோ வேதனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் ஆகியோர் வழியாக தமிழ்நாடு முதல்வருக்குத் தங்களது கோரிக்கை மனுவை வழங்குவது என்று ஜாக்டோ- ஜியோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உதுமான் அலி, சந்திரசேகரன், பழனிசாமி உள்ளிட்டோர் இன்று (ஜூலை 29) 3 அலுவலகங்களிலும் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்தக் கோரிக்கை மனுவில், "கரோனா பரவலைத் தடுத்து, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஜாக்டோ- ஜியோ வரவேற்கிறது. இதன் ஒரு நடவடிக்கையாக பள்ளி இறுதித் தேர்வுகள், கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்ததற்கு நன்றி.

கரோனாவை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் போதிய நிதி ஆதாரங்களை தமிழ்நாடு அரசு திரட்ட வேண்டியதைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஜாக்டோ- ஜியோ தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ.150 கோடியை வழங்கியுள்ளது.

9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17பி குற்றக் குறிப்பாணை இன்றும் நிலுவையில் உள்ளது. போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போதும் தொடர்கின்றன.

குற்றக் குறிப்பாணையைக் காரணம் காட்டி பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை முறையாக பணி ஓய்வு ஆணை வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17பி குற்றக் குறிப்பாணை உள்ள காரணத்துக்காக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது என்பது கரோனா பாதிப்பைவிட மிகக் கொடியது.

ஊதிய உயர்வுக்காகப் போராடியதற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட மருத்துவர்கள், அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் முன்னர் பணியாற்றிய இடத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளதை ஜாக்டோ- ஜியோ வரவேற்கிறது. இதே அணுகுமுறையை தமிழ்நாடு முதல்வர் ஜாக்டோ- ஜியோவுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.

போராட்டம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, சுமுக சூழலை உருவாக்காமல் இருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பதற்கு முதல்வர் நேரம் ஒதுக்கித் தர வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து, ஜாக்டோ- ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்