இந்தியாவிலேயே கரோனா பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்: மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு 

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் இதுவரை 24.7 லட்சம் நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19க்கான பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என மாவட்ட ஆட்சியர்களுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய தொடக்க உரை:

“கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.

வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளிப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது மாநிலத்தில்தான் அரசின் சார்பாக 58, தனியார் சார்பாக 61 பரிசோதனை நிலையங்கள் என மிக அதிகமான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை 24.7 லட்சம் நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19-க்கான பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 63,000 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தனியார் மையங்களிலும் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்கான கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளது. தற்போது மாநில அளவில் கோவிட்-19 சிகிச்சைக்காக, தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து 54,091 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 25,538 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

ஐசியூ (ICU) வசதி கொண்ட (தனியார், அரசு இரண்டும் இணைந்து) 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் பிரத்யேகமாக கோவிட் தொற்று சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,751 மருத்துவர்களும், 6,893 செவிலியர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், N-95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் (PPE Kits) மும்மடி முகக்கவசம், CT Scan, X-ray இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக நாட்டிலேயே மிகக் குறைவான, அதாவது 1.6 சதவீதம் உயிரிழப்பு மற்றும் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 73 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். களப்பணியிலுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களுக்கும் Zinc மற்றும் Vitamin மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளுக்குச் சிறப்பாக அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக சித்த மருத்துவமான கபசுரக் குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் வேண்டுமெனில் தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய் சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்களையும் பொதுமக்கள் நலன் கருதி அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா (Plasma ) சிகிச்சை வழங்கப்பட்டதில் பலர் பூரண குணமடைந்ததைக் கருத்தில் கொண்டு, அதனை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது முடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்களின் தேவையை அறிந்து, ரொக்கமாகவும், உணவுத் தொகுப்புகளாகவும் அரசு வழங்கியுள்ளது. 4,18,903 வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்குப் பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும், 51,711 வெளிநாடு வாழ் தமிழர்களையும், வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாகக் கழுவுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக மறுமுறை உபயோகிக்கத் தகுந்த முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் நான் தொடங்கி வைத்துள்ளேன்.

இந்த முகக்கவசங்கள், ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். இதுவரை 46 லட்சம் முகக்கவசங்கள் மாநகராட்சி மூலமாக சென்னையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா காலங்களில் கூட இதுவரை 41 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 30,500 கோடி ரூபாய் முதலீடும், 67,200 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (Corpus Fund) செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழில் நிறுவனங்கள் அவர்களை பரிசோதனை செய்து அரசு வழிகாட்டுதல்களின்படி பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.

எனது தலைமையில், மாநிலம் மற்றும் மாவட்ட வங்கிகளுடனான கூட்டங்கள் நடத்தி, உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அறிவுறுத்தியதால் மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிகளவில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்புதலைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் முழு ஒத்துழைப்பு வழங்கி செம்மையான முறையில் பணியாற்றி வருகிற அனைத்து அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றையதினம் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,75,866, அதில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,27,688, இது 9 விழுக்காடு. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 96,438. தற்போது சிகிச்சையிலுள்ளவர்களின் எண்ணிக்கை 57,073.

சென்னை மாநகராட்சியில் சிகிச்சையிலுள்ளவர்களின் எண்ணிக்கை 12,852. இதுவரை, தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,66,956. சென்னையில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 81,530. தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் 73 விழுக்காடு. சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை 84.5 விழுக்காடு. கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3,659. சென்னையில் 2,056. நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையின் சதவிகிதம் ஒட்டுமொத்தமாக 1.6, சென்னையில் 2.1.

நேற்றைய தினம் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 61,153. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,972. பாதிக்கப்பட்டவர்கள் 11 விழுக்காடு. அரசு நோய்ப் பரவலைத் தடுக்க தொடர்ந்து கடும் முயற்சி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்