புதுச்சேரியில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 166 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,171 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,112 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 1,869 பேர் குணமடைந்துள்ளனர். 47 பேர் இறந்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 29) கூறுகையில், "புதுச்சேரில் நேற்று 837 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 154 பேர், காரைக்காலில் 12 பேர் என மொத்தம் 166 (19.8 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 106 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 45 பேர் ஜிப்மரிலும், 3 பேர் 'கோவிட் கேர் சென்ட'ரிலும், 12 பேர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,171 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 454 பேர், ஜிப்மரில் 333 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 240 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 47 பேர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,112 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், புதுச்சேரியில் 132 பேர், ஏனாமில் 11 பேர் என 143 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 31 பேர், ஜிப்மரில் 31 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 17 பேர், காரைக்காலில் 7 பேர், மாஹேயில் ஒருவர் என மொத்தம் 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,869 ஆக அதிகரித்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 51 பேர் 'கோவிட் கேர் சென்ட'ருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை 37 ஆயிரத்து 162 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், 33 ஆயிரத்து 369 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 421 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.