எட்டு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்பதா?- மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

By செய்திப்பிரிவு

எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தாக்கல் வரைவு, சட்டம் ஆகும் முன்பே, மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

277.3 கி.மீ. தொலைவிலான எட்டு வழிச்சாலையை இரண்டே கால் மணி நேரத்தில் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்துக்காக ஏராளமான மரங்களை அழிப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தங்கள் நிலம் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் இருந்தது.

இந்தத் திட்டத்துக்கான அறிக்கையை கிடப்பில் போட விரும்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் திட்டம் செயல்படுத்தும்போது வன நிலங்கள், நீர் நிலைகள், தாவரம் மற்றும் விலங்கினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிதாக திட்ட ஆய்வறிக்கையைத் தயார் செய்ய வேண்டும் என்று விரும்பியது.

இந்தச் சூழ்நிலையில், எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்தான் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு, சட்டம் ஆகும் முன்பே, மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் மாறும். தனியார் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் தனியார் நிலத்தை அபகரிக்க மட்டுமே உதவும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. இந்த வரைவு, உண்மையிலேயே தமிழகத்தை தாக்கத்தான் வருகிறது என்பது உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்த பதிலில் தெளிவாகியுள்ளது. 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...” என்ற பழமொழியைத்தான், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பதில் நினைவுபடுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு, மக்களிடம் எந்தக் கலந்துரையாடலும் நடத்தாமல் சட்டத்தை நிறைவேற்ற முனைவது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்தியாவினுடைய இயற்கை வளங்களுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகளை எக்காலத்திலும் மீட்கவே முடியாது. தற்போதுள்ள சூழலியல் மதிப்பீட்டுச் சட்டம் - 2006 பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு மக்களைப் பாதுகாக்கிற வகையில் இருந்ததை தற்காலிக லாபத்திற்காக மாற்றியமைக்கக் கூடாது.

தற்போது சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூழலியல் மதிப்பீட்டு வரைவு அறிக்கை - 2020 இன் மூலம் அடிப்படையில் கடுமையான மாற்றங்களைச் செய்திருக்கிறார். திட்டங்களுக்கான அனுமதி பெறுவதில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள வரைவு அறிக்கை, 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையைச் செயலற்றதாக ஆக்குகிறது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரைவு அறிக்கை மக்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரிக்கிறது. இந்த வரைவு அறிக்கையின் பிரிவு 26-ன்படி சில திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நிலக்கரிச் சுரங்கங்கள், எண்ணெய் வளங்களைக் கண்டறிய ஆய்வு செய்தல், மீத்தேன் மற்றும் ஷெல் கேஸ் போன்ற திட்டங்களுக்கு விலக்கு அளித்திருப்பது ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட திட்டமாகவே கருத வேண்டியிருக்கிறது.

மேலும் பிரிவு 14, மக்களுடன் கலந்துரையாடலோ, மக்கள் பங்களிப்போ இல்லாமல் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உரிமை அளித்திருக்கிறது. இந்த வரைவு அறிக்கை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சுடுகாடாக ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கடுமையாக அனைத்து கட்சிகளும் எதிர்த்தாலும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு இருக்கிறது. இதனை முதல்வர் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டும்.

இதுவரை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இருந்த சூழலியல் தாக்க மதிப்பீடு, மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் சட்டமாக மாறப் போகிறது என்பதற்கு, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு அளித்த பதிலே சாட்சி. மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டுகின்றேன்”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்