வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஓசூர் சந்தையில் மலர்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு உயர்வு: மலர் விவசாயிகள் மகிழ்ச்சி

By ஜோதி ரவிசுகுமார்

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஓசூர் மலர் சந்தையில் மல்லி, சாமந்தி, பட்டன்ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கரோனா காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக மலர்களுக்கு உரிய விலையின்றி பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.

ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், மத்திகிரி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெப்ப நிலை மற்றும் மண்வளம் காரணமாக ரோஜா, பட்டன்ரோஜா, மல்லி, சாமந்தி, கனகாம்பரம், செண்டு, சம்பங்கி மற்றும் அலங்காரப் பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு விளையும் வாசமிக்க, தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் பசுமைக்குடில் அமைத்தும் திறந்த வெளியிலும் சொட்டுநீர்ப் பாசன முறையில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் சாகுபடியில் 2000 சிறிய விவசாயிகளும் 1000-க்கும் மேற்பட்ட பெரிய விவசாயிகளும் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி கரோனா ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு ஓசூர் சந்தையில் மலர் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடந்த பொங்கல் திருநாளுக்குப் பிறகு கரோனா காரணமாக நான்கு மாதங்களாக மலர்களின் விற்பனை பாதிக்கப்பட்டு விலை சரிவடைந்திருந்தது. தற்போது ஜூலை 31-ம் தேதி வரும் வரலட்சுமி விரதம் காரணமாக மலர்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் ஓசூர் மலர்கள் பெங்களூரு சந்தைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதும், கர்நாடகாவில் வரலட்சுமி விரதம் வெகுசிறப்பாக நடைபெறும் என்பதால் மலர்களின் தேவை அதிகரித்துள்ளதும், மலர்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதனால் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் மலர்ச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

''தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வரலட்சுமி விரத நேரத்தில்தான் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மலர்களைத் தமிழக நகரப் பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் விவசாயிகளும், மலர் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டனர். இதில் குறிப்பாகக் கோயில் விழாக்களும், திருமணம் உள்ளிட்ட விழாக்களும் இல்லாமல் போனது மலர் விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலர் சந்தையில் மலர்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன்ரோஜாவின் விலை ரூ.100 முதல் ரூ.130 வரை உயர்ந்துள்ளது. அதேபோல ரூ.200-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ.400 முதல் ரூ.500 வரையும், முல்லை - ரூ.250-லிருந்து ரூ.500-க்கும், சம்பங்கி - ரூ.10-லிருந்து ரூ.30-க்கும், சாமந்தி- ரூ.80-லிருந்து ரூ.160 வரையும், செண்டுமல்லி - ரூ.5-லிருந்து ரூ.40-க்கும் என அனைத்து மலர்களின் விலையும் இரண்டு, மூன்று மடங்கு விலை கூடியுள்ளது. வரலட்சுமி விரத தினத்தன்று விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது''.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தளி துணைத் தோட்டக்கலை அலுவலர் பி.சுப்பிரமணியன் கூறும்போது, ''இப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக் கலைத்துறை மூலமாகத் திறந்த வெளியில் பட்டன்ரோஜா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல பட்டன்ரோஜா சாகுபடிக்கு மட்டும் ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளுக்கு இலவசமாகச் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. தோட்டப்பயிர் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துத் தொழில் நுட்ப உதவிகளையும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்