புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 141 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனா பாதிப்பு 3,000-ஐக் கடந்துள்ளது. மேலும், புதுச்சேரியில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 28) கூறியிருப்பதாவது:
"புதுச்சேரில் நேற்று 874 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 130 பேர், ஏனாமில் 11 பேர் என மொத்தம் 141 (16.1 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 86 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 40 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 11 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரியில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கோரிமேடு இந்திரா நகர் விரிவாக்கம், விவேகானந்தன் தெருவைச் சேர்ந்த 78 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 21 ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கதிர்காமம் சுப்ரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்த 54 வயது ஆண் நபருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 26 ஆம் தேதி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அன்சாரி துரைசாமி நகரைச் சேர்ந்த 68 வயது நபருக்கு (என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன்) தொற்று இருப்பது உறுதியான நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதேபோல் ஏனாமைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,011 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 1,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 பேர், ஜிப்மரில் 33 பேர், கோவிட் கேர் சென்டரில் 10 பேர் என 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,782 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 36 ஆயிரத்து 288 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 32 ஆயிரத்து 837 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 240 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
முதல்வர், சபாநாயகர், அமைச்சர்களுக்குத் தொற்று இல்லை
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றார். இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. இதன்பிறகு வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மரத்தடியில் நடைபெற்றது. மேலும், பேரவைக் காவலர்கள் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 126 பேருக்கு உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில், சட்டப்பேரவைக் காவலர் இருவர், எம்எல்ஏ உதவியாளர் ஒருவர் உட்பட 6 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்குத் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தை மூட சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து, வரும் 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை மூடப்பட்டிருக்கும் எனவும், அலுவலகப் பணிகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் சட்டப்பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago