புதிய திட்டங்கள், தொழிற்சாலை விரிவாக்கத்தில் உள்ள விதிமீறல்கள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, பாதிக்கப்படும் பொதுமக்களோ புகார் தெரிவிக்க வாய்ப்புஇல்லாத வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதிய தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தவும், ஏற்கெனவே இயங்கிவரும் தொழிற்சாலைகளை நவீனமயம், விரிவாக்கம் செய்யவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை - 2006 விதிகளின்படி அறிக்கை அளிப்பது கட்டாயம். இதற்கிடையே, இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு - 2020 வரைவு அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது சுற்றுச்சூழலை அழிக்க வகை செய்யும் விதத்தில் இருப்பதாக கூறி, நாடு முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதை திரும்பப் பெறவும் வலியுறுத்தி வருகின்றனர். திமுக சார்பில் நேற்றுநடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ட்விட்டரில் ஹேஷ்டேக்
சென்னையில் உள்ள ‘பூவுலகின்நண்பர்கள்’ அமைப்பு, இந்த அறிவிக்கைக்கு எதிராகவும், இதை திரும்பப் பெற வலியுறுத்தியும் ட்விட்டரில் #ScrapEIA2020 என்றஹேஷ்டேக் மூலமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்தையும் நேற்று தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையமுன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனக ராஜன் கூறியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்கடந்த 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. காற்று, நீர், நிலம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை சாராம்சம். இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் - 1994 உருவாக்கப்பட்டது. அந்த விதிகளைதளர்த்தி 2006-ல் திருத்தப்பட்டு புதிய அறிவிக்கைகள் வெளியிப்பட்டன. தற்போது புதிய அறிவிக்கையை வெளியிட மத்திய அரசு முற்படுகிறது. அதில், எஞ்சியுள்ள பாதுகாப்பு விதிகளையும் நீர்த்துப்போகச் செய்யும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது.
இந்த அறிவிக்கையில் தேசியமுக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், சாலை, பாலம் ஆகிய திட்டங்கள், பெரியகட்டிடங்கள், பகுதி சார்ந்த வளர்ச்சிதிட்டங்கள், 50 சதவீதத்துக்கு மிகாதவிரிவாக்க திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்தே கேட்க தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம், பாதுகாப்பு சார்ந்தவற்றின் கீழ் வரும் திட்டங்கள் குறித்து தகவல் உரிமை சட்டத்தில்கூட தகவல் பெற முடியாது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருப்பதாக அரசியல் சாசன விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், திட்டங்களில் விதிமீறல்கள் இருந்தால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, திட்டம் செயல்படும் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களோ புகார் தெரிவிக்க முடியாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழு அல்லது அரசுத் துறைகள் மட்டுமே புகார் தெரிவிக்கவோ, வழக்கு தொடரவோ முடியும் என்பன உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் இது சுற்றுச்சூழலை அழிக்க அரசே உரிமம் வழங்கியது போல இருக்கிறது.
இந்த வரைவு அறிவிக்கைக்கு வட மாநிலங்களில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை. தென் மாநிலங்களில் நல்ல விழிப்புணர்வு உள்ளதால், எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே, மக்களின் உணர்வை தமிழக அரசு புரிந்துகொண்டு, அந்தவரைவு அறிவிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி அழுத்தம் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், கரோனாவால் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்கவும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க சில தளர்வுகளையும் வழங்கவேண்டி உள்ளது. திட்டங்களையும் விரைவாக தொடங்க வேண்டி உள்ளது. அதனாலேயே பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பெற அனுமதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. இதனால் ஆறுகள், நீர்நிலைகள், வனப் பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது மற்றொரு தரப்பினரின் வாதமாக உள்ளது.
இந்த வரைவு அறிவிக்கை தொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகள் குறித்து eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் வழியாக ஆகஸ்ட் 11-க்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago