கருத்துச் சுதந்திரம் காக்க குழு, காவல்துறை ஒருதலைப்பட்ச செயல்பாடு, ஊடகங்களுக்கு எச்சரிக்கை: திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

பாஜக - அதிமுகவின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகியவற்றிற்குப் பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், நடுநிலையையும்; ஊடகங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னுக்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொண்டால் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்துச் சுதந்திரம், காவல்துறை செயல்பாடு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல்துறை அவலம்

சமூக வலைதளங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் பண்பாடற்ற - அநாகரிகமான- வெறுப்புணர்வைத் தூண்டி பொது அமைதியைக் கெடுக்கும் தனிமனிதத் தாக்குதல்கள்; மாநிலத்தில் சமூக, மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சதிச் செயலாகவே அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

அதுபோன்ற அருவருக்கத்தக்க, தரம்தாழ்ந்த அவதூறுகள் - விமர்சனங்கள் குறித்துப் புகாரளித்தால் அதிமுக அரசு அவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது - பாஜகவின் ஜனநாயக விரோத- சமூக விரோதச் செயலுக்கு அதிமுக அரசும் கூட்டு சேர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சமூக நீதியின் சுடர் விளக்காக தமிழக மக்கள் மனதில் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு “காவி பூசுவது”; சாதாரண சாமானிய உழைக்கும் மக்களுக்காக சித்தாந்த ரீதியாகப் போராடி வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையே அசிங்கப்படுத்துவது; அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அதிமுக அரசின் அனுசரனையோடு அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து பொது கவனத்தை திசை திருப்பும் நோக்கில், மதவெறியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்களிலும், காரியங்களிலும் இறங்குகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விவகாரத்திற்குக் காரணமான கயவர்கள் மீது புகார் அளித்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு - “குள்ளநரி” எண்ணம் கொண்ட அந்தக் கூட்டத்தைக் காப்பாற்றும் போக்கில் அதிமுக அரசு செயல்படுவதற்கும்; இதுபோன்ற தரம் தாழ்ந்த - ஆரோக்கியமற்ற – தனி நபர் விமர்சனங்களைத் திரைமறைவிலிருந்து இயக்கி, நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் பாஜகவிற்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாஜகவினரும், அதிமுகவினரும் அளிக்கும் புகார்களின் மீது பாய்ந்து ஓடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, எதிர்க்கட்சிகள்- ஊடகத்தினர் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும் ஒருதலைப்பட்சமாகவும், நடுநிலையாளர்களாக உள்ள ஊடகவியலாளர்கள் ஆணோ/பெண்ணோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது என்று புகார் அளித்தால் அந்தப் புகாரை அலட்சியப்படுத்துவது போன்று செயல்படுவது- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய தமிழகக் காவல்துறை தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விலகிச் செல்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது.

இந்தப் போக்கை காவல்துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளால் சித்தாந்த ரீதியாகவும், செயல்பாட்டு முறைகளாலும், யாரும் உட்புக இயலாத வண்ணம், நன்கு பண்படுத்தப்பட்டிருக்கும் தமிழகம், பாஜகவின் கண்ணை உறுத்துகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, முன்னதாகவே ஊடக வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கிறார்கள்.

அதற்கு வசதியாக, நமது பாரம்பரிய பன்முகத்தன்மைக்கு முற்றிலும் எதிரான, ‘ஒரே சித்தாந்தம்’ என்பதில் ஈடுபாடு கொண்டுள்ள குறிப்பிட்ட ஒரு சிலரை அதிகாரப்படுத்தி அமர வைத்திட ஆங்காங்கே ஆசனம் தேடும் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்கள். அப்படி இடம்பிடித்துக் கொடுத்து விட்டால், ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் பாஜகவை உயர்த்திக் கோஷம் போடுவார்கள், அந்த பொய் முழக்கத்தில் எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமையைத் தொடர்ந்து நசுக்கி வரும் மத்திய ஆளுங்கட்சியினரான பாஜகவினர், தமிழக ஊடகச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கி இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்களில் விவாதத் தலைப்புகள் தொடங்கி, நெறியாளர் - பங்கேற்பாளர்களைத் தீர்மானிப்பது வரை, தங்களின் அதிகாரக் கட்டளைக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அதற்கு இங்குள்ள அதிமுக அரசும் துணை போகிறது. தேர்தல் கணக்கினால் ஏற்பட்டுள்ள அந்த எதேச்சதிகார ஆசை ஏற்பட்ட வேகத்திலேயே நிராசையாகிவிடும் என்பதை அவர்கள், சரித்திரத்தைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து உணர வேண்டும்.

பாஜக-அதிமுகவின் கட்டளைகளுக்குப் பணிந்து, நடுநிலையைக் காவுகொடுக்கும் ஊடகங்கள், காலப் போக்கில் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்துவிடும். அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’, கருத்துத் தணிக்கை காலகட்டத்திற்கு தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க நினைப்பது, எள்ளளவும் பலிக்காது.

அப்படியே பாஜக - அதிமுகவின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகியவற்றிற்குப் பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், நடுநிலையையும்; ஊடகங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னிடத்திற்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகேசன் குரல்! மகத்தான அந்தக் குரலை, அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அனைத்துக் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விவரம் :

தி.மு.க. - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

காங்கிரஸ் - கோபண்ணா

ம.தி.மு.க. - மல்லை சத்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கனகராஜ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - சி.மகேந்திரன்

விடுதலை சிறுத்தைகள் - ரவிக்குமார், எம்.பி.,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - அப்துல் ரஹ்மான்

மனிதநேய மக்கள் கட்சி - அப்துல் சமர்

கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி - சூர்யமூர்த்தி

இந்திய ஜனநாயக கட்சி - ஜெயசீலன்

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்