சமூகநீதியின் சின்னம் பாமக: உயர்சாதி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓபிசி நலன் பற்றி பேச என்ன தகுதி உள்ளது? - கே.பாலு விமர்சனம்

By செய்திப்பிரிவு

உயர்சாதி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓபிசி நலன் பற்றி பேச என்ன தகுதி உள்ளது என, பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலு இன்று (ஜூலை 26) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட ,மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தொடர்பான சர்ச்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அபத்தக்களஞ்சியமான அறிக்கைக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தெளிவான விளக்கங்களுடன் கடந்த 22 ஆம் தேதி பதிலளித்திருந்தார்.

அந்த அறிக்கையை ஒரு வழிப்போக்கன் படித்திருந்தால் கூட அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு சர்ச்சை குறித்து ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பான். ஆனால், அந்த அறிக்கையை 3 நாட்களாக படித்தும் கூட அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், மீண்டும் அபத்தமான வினாக்களை எழுப்பியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.

திருக்குறளின் புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 848 ஆவது குறள்...

'ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்' என்பதாகும்.

அதாவது, 'ஒன்று சொல்புத்தி இருக்க வேண்டும் அல்லது சொந்த புத்தி இருக்க வேண்டும்' என்பது தான் அந்தக் குறளின் பொருள் ஆகும். ஆனால், பாலகிருஷ்ணன் இந்தக் குறளுக்கு சிறந்த உதாரணமாக இருப்பது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். அவர் முன்வைத்துள்ள வாதங்கள் அனைத்தும் அபத்தமானவை என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறேன்.

சலோனிகுமாரி வழக்குக்கும், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது முதலாளி கட்சிகள் தொடர்ந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று தோழர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இப்போதைக்கு இட ஒதுக்கீடு இல்லை; இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் கூட அது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி தான் அமையும் என்ற அடிப்படையையே அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான் அவரது அபவாதங்கள் காட்டுகின்றன.

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

உச்ச நீதிமன்றத்தில் சலோனி குமாரி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தனியாக விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்து விட்டதாலேயே இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்றாகி விடாது.

சலோனிகுமாரி வழக்கு அகில இந்திய தொகுப்பில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டு விதிகளின்படி 27% இட ஒதுக்கீடு கோரும் வழக்கு. பாமக தவிர்த்த மற்ற தமிழக கட்சிகள் தொடர்ந்த வழக்கு என்பது, அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி 50% இட ஒதுக்கீடு கோரும் வழக்கு.

சட்டத்திற்கு பொருந்தாத, சற்றும் சாத்தியமில்லாத ஒன்றை பாலகிருஷ்ணனின் முதலாளிகள் தரப்பு வலியுறுத்தியதால் தான், நீதிபதிகள் ஆத்திரமடைந்து 'இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல' என்று முதலில் கூறி விட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர்.

அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசு சட்டத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதால், சலோனி குமாரி வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு தான் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்த உண்மையை அரசியலமைப்பு சட்டம் தெரிந்தவர்களிடம் பாலகிருஷ்ணன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

அடுத்ததாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களை நிரப்பும் வேலையை மட்டும் தான் மத்திய அரசு செய்கிறது; அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது மாநில அரசுகள் தான் என்பதால் அவை மாநில அரசுகளுக்கே சொந்தம் என்றும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார், மத்திய, மாநில அரசுகள் உறவு குறித்து அ, ஆ கூட தெரியாதவர்கள் தான் இப்படி உளற முடியும்.

மாநில அரசால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஒரு இடம் கூட அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படக் கூடாது; நிகழ்காலத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத அகில இந்திய தொகுப்பு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு.

ஆனால், அகில இந்திய தொகுப்பு என்பது உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசு செய்வதால் அந்த இடங்கள் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள் தான். ஆகவே, உச்ச நீதிமன்றமே நினைத்தாலும் கூட மத்திய அரசு விதிகளின்படி தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டம் அப்படித் தான் கூறுகிறது; அதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது.

அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அன்புமணி ராமதாஸ் தான் வழங்கினார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத பாலகிருஷ்ணன், 'மத்திய நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டத்தை 2006 ஆம் ஆண்டே மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த அடிப்படையில்தான் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென அபய்நாத் வழக்கு தொடுத்தார். அதனால் வேறு வழியின்றி தான் அன்புமணி இட ஒதுக்கீடு அளிக்க நேர்ந்தது; வாதத்திற்காக அன்புமணி தான் இட ஒதுக்கீடு வழங்கினார் என்றால், அதே இடஒதுக்கீட்டை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்காதது ஏன்?' கேள்வியெழுப்பியுள்ளார். வள்ளுவர் சுட்டிக்காட்டிய சொல் புத்தியும் இல்லாத, சொந்த புத்தியும் இல்லாத நோயுள்ள மனிதனுக்கு உதாரணம் இவர் தான்.

நாடாளுமன்றத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டு சட்டம். அபய்நாத் வழக்கு பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு கோரும் வழக்கு. பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் எவ்வாறு இட ஒதுக்கீடு கோர முடியும் என்பதை பாலகிருஷ்ணன் விளக்குவாரா?

அதுமட்டுமின்றி, அபய்நாத் வழக்கு 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடரப்பட்டது. ஆனால், மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் 2006 டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டு, 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.

நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. 2008 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டத்தைக் காட்டி 2006 ஆம் ஆண்டில் அபய்நாத் எவ்வாறு வழக்குத் தொடர முடியும்? முதலாளிகள் எழுதிக் கொடுத்ததை வைத்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டால் இப்படித்தான் அபத்தங்களின் தொகுப்பாக இருக்கும்; பொதுவெளியில் அசிங்கப்பட நேரிடும்.

அதுமட்டுமல்ல, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, 2008-09 ஆம் ஆண்டில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் 9% வீதம் மூன்று தவணைகளாக 2010-11 ஆம் ஆண்டில் தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. 27% இட ஒதுக்கீடு பொது இடங்களுக்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தான், அதை அகில இந்திய தொகுப்பு இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.

அவ்வாறு இருக்கும் போது 2010-11 ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்த இட ஒதுக்கீட்டை 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே பதவிக்காலம் முடிந்த அன்புமணி ராமதாஸால் எப்படி அகில இந்திய தொகுப்பில் நடைமுறைப்படுத்த முடியும்? இந்த உண்மை அரைவேக்காடுகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், பாலகிருஷ்ணனுக்கு தெரியாமல் இருக்கலாமா?

2010-11 ஆம் ஆண்டில் பதவியில் இல்லாத அன்புமணி ராமதாஸ் ஏன் அகில இந்திய தொகுப்புக்கு ஓபிசி இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கேட்கும் பாலகிருஷ்ணன், 2009-13 காலத்தில் சுகாதார இணை அமைச்சராக இருந்த முதலாளிக் கட்சியைச் சேர்ந்தவர் ஏன் அதே ஓபிசி இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று கேட்க மறுக்கிறார்? எஜமான விசுவாசம் தடுக்கிறதா?

1998 முதல் 2009 வரை மத்திய அமைச்சரவையில் பங்கேற்றிருந்த பாமக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது? என்று பாலகிருஷ்ணன் உளறியிருக்கிறார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி சாதனையை படைத்தது பாமக தான்.

அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதும் பாமக தான். இந்த உண்மை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத் தெரியும். ஆனால், பாலகிருஷ்ணன் நெருப்புக் கோழி பூமிக்குள் தலையை புதைத்துக் கொள்வது போல தலையை புதைத்துக் கொண்டும், பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு விட்டது என்று புலம்புவதைப் போலவும் புலம்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பரிதாபங்களைத் தான் என்னால் பரிசளிக்க முடியும்.

இட ஒதுக்கீட்டை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மறுத்திருந்தால் கூட, அதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறியிருகிறார். நகைப்பு தான் வருகிறது. இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களைப் பற்றி பாமகவுக்கு பாலகிருஷ்ணனா பாடமெடுப்பது? பாலகிருஷ்ணனும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அனுபவித்து வரும் இட ஒதுக்கீடே ராமதாஸ் முன்னெடுத்த ரத்தம் சிந்திய போராட்டங்களால் விளைந்த பயிர் என்பதை பாலகிருஷ்ணன் நினைவில் கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூகநீதிக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனைப் போராட்டங்களை நடத்தியது என்பதை பாலகிருஷ்ணன் விளக்குவாரா?

1. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு இடங்கள் 1986-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 35 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த அநீதியை எதிர்த்து மார்க்சிஸ்ட் நடத்திய போராட்டங்கள் எத்தனை?

2. அகில இந்திய தொகுப்பு இடங்கள் உருவாக்கப்பட்ட போது, அதில் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை. 1989 ஆம் ஆண்டில் இடதுசாரிக் கட்சிகளின் 49 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் வி.பி.சிங்கின் ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளி கட்சியும் அங்கம் வகித்தது. அவர்கள் நினைத்திருந்தால் வி.பி.சிங்கிடம் பேசி அப்போதே வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, கல்வியிலும், அகில இந்திய தொகுப்பிலும் அனைத்துத் தரப்புக்கும் இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்ய மார்க்சிஸ்டுகளும், அவர்களின் முதலாளிகளும் தவறியது ஏன்?

3. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கூட 2000 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாலகிருஷ்ணனின் முதலாளிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அப்போது அவரால் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்க முடியாது. குறைந்தபட்சம் அவர் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்காவது இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அதைக் கூட செய்யவில்லையே. அதை எதிர்த்து கேள்வி எழுப்பாமல், இப்போதும் இட ஒதுக்கீட்டு வழக்கில் குழப்பம் ஏற்படுத்தும் முதலாளிகளுக்கு பல்லக்குத் தூக்குவது ஏன்? அதற்காக கிடைத்த பரிசு என்ன?

4. 11 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த பாமக சமூகநீதியில் பல சாதனைகளை செய்துள்ளது. ஆனால், 18 ஆண்டுகள் மத்திய அரசின் அங்கம் வகித்த பாலகிருஷ்ணனின் முதலாளி கட்சி சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சாதித்துக் கிழித்தது என்ன? என்பதை பாலகிருஷ்ணன் கேட்டுச் சொல்வாரா?

5. பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை இருப்பதைப் போல நடிக்கும் பால கிருஷ்ணனின் கட்சி தான், உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்ததுடன், தாங்கள் ஆளும் மாநிலத்திலும் செயல்படுத்தியுள்ளது. பொதுப்போட்டிப் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த 10 விழுக்காட்டில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரும் பயனடைந்து வந்தனர். அவர்களுக்கு கிடைத்து வந்த இட ஒதுக்கீட்டை பறிப்பதற்கு துணை போன கட்சி தான் மார்க்சிஸ்ட். அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

6.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த கட்சியின் அதிகாரம் பெற்ற அமைப்பு 'பொலிட் பீரோ' எனப்படும் அரசியல் தலைமைக் குழு ஆகும். அந்த அமைப்பில் கடந்த 50 ஆண்டுகளாக தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. அரசியல் தலைமை குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு தகுதியான ஒரு தலித் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லையா? அல்லது தலித்துகளுக்கு அந்த அமைப்பில் பிரிதிநிதித்துவம் அளிக்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு விருப்பம் இல்லையா? கட்சி அமைப்பில் தலித்துகளுக்கு பிரிதிநிதித்துவம் அளிப்பதற்கு கூட மனம் வராத மார்க்சிஸ்டுகள் இட ஒதுக்கீடு பற்றியும், சமூக நீதி பற்றியும் பேசுவது முரண்பாடுகளின் உச்சம் அல்லவா?

உண்மையில் இப்படி ஓர் அறிக்கை வெளியிட நேர்ந்ததற்காக மிகவும் வருத்தமடைகிறேன். சமூக நீதியின் அடிப்படை தெரிந்தவரிடம் விவாதிப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். ஆனால், பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை என்பது அபத்தங்களின் உச்சம்.

கான மயில்கள் தோகை விரித்து ஆடுவது அவற்றின் இயல்பு. அதை வான்கோழிகள் வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம். மாறாக, தன்னையும் மயிலாக நினைத்துக் கொண்டு தோகை விரித்து ஆட முயலக் கூடாது.

அதேபோல், சமூக நீதியின் அடையாளம் பாமக, சமூக நீதியின் சின்னம் பாமக, சமூக நீதியின் மாற்றுச் சொல் பாமக. சமூகநீதிக்காக தியாகங்களை செய்தது பாமக ஆகும். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு சமூகநீதி என்பது புரியாத பாடம்... பாலகிருஷ்ணனோ அறியாத மாணவர். சமூகநீதி பற்றி பேச அவருக்குத் தகுதியில்லை.

பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் பல இடஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தது பாமக ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தரும். அதற்காகத் தான் கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணனும் அவரது கட்சியும் விருந்தினராக நுழைந்தவர்கள். இந்த உண்மை தெரியாமல் தங்கள் முதலாளி கட்சிக்கு 'கோவிந்தசாமி வேலை' செய்ய முயலக்கூடாது. சமூகநீதி குறித்து அடுத்த முறை பேசுவதற்கு முன் ராமதாஸ் முகநூலில் எழுதி வரும் 'சுக்கா... மிளகா.... சமூகநீதி?' தொடரை ஒன்றுக்குப் பல முறை படிக்க வேண்டும். அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால் சமூகநீதி பற்றி பேச முயற்சி செய்யலாம்"

இவ்வாறு கே.பாலு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்