கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை; தமிழகத்தில் அழிந்து வரும் கழுதை இனம்; பாதுகாக்க தீவிரம் காட்டும் தமிழக அரசு

By கல்யாணசுந்தரம்

தமிழகத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழே குறைந்து விட்டதால், அவற்றை பாதுகாக்க கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் தமிழக அரசு திட்டங்களை அறிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்கள் அதிகம் இல்லாத காலத்தில் பொதி சுமக்கும் உயிருள்ள வாகனங்களாக செயல்பட்டவை கழுதைகள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சரக்கு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக கழுதைகள் தேவைப்படாமல் போயின. இதன் காரணமாக, பொதி சுமக்க கழுதைகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த சலவைத் தொழிலாளர்களும் கழுதைகள் வளர்ப்பதை நிறுத்தி விட்டனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழே வந்து விட்டது என்கிறது, கால்நடை மருத்துவத்துறை.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித குலத்துக்கு பல்வேறு வசதிகளை தந்தாலும், அவை சுற்றுச்சூழலுக்கும், நம்மை சுற்றியுள்ள பிற உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்து வருவதை விலங்கின மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை (BIO DIVERSITY CONSERVATION FOUNDATION) விஞ்ஞானி ஏ.குமரகுரு இந்து தமிழ் நாளிதழிடம் கூறும்போது, "கழுதைகள் பொதி சுமப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் அவை மாறிவிட்டன. சமூகத்தில் மற்ற விலங்கினங்களுக்கு உள்ள மரியாதை, மதிப்பு கழுதைக்கு கிடையாது. இந்த சமூகப் பார்வையே கழுதை இனத்தின் அழிவுக்கு ஒரு காரணம். சமகாலத்திலேயே அழிவுக்குள்ளான உயிரனங்கள் பட்டியலில் தற்போது கழுதையும் சேர்ந்து விட்டது.

ஏ.குமரகுரு

கழுதைகள் தொடர்பாக ஆராய்ச்சியோ, தொடர் கணக்கெடுப்போ முறையாக இல்லாததே இந்த விலங்கினம் அழிவை நோக்கிச் சென்றதற்கு முக்கிய காரணமாகும். பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரனத்துக்கும் ஒரு பங்கு உண்டு. எனவே, இவற்றைப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து திருச்சியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன் கூறும்போது, "கழுதை இனத்தைப் பாதுகாக்கவும், அந்த இனத்தை மேலும் பெருக்கவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்கள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கழுதை வளர்ப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது மேலாண்மை மற்றும் நோய் பராமரிப்பு குறித்து செயல்திறன் பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்ட பயனாளிகளுக்கு குடற்புழு மருந்து, தடுப்பூசிகள், தாது உப்புக் கலவை, கட்டும் கயிறுகள், குளம்பு வெட்டும் கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை வழங்கப்படும்.

கழுதை வளர்ப்பவர்கள், திருச்சியில் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 0431 2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்