சுவர் இருந்தால்தான் சித்திரம்; உடல் நலத்தைப் பேணுங்கள்; திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

By செய்திப்பிரிவு

திமுகவினர் அனைவரும் உடல்நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 25), காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி மற்றும் எஸ்.காத்தவராயன் ஆகியோரது திருவுருவப் படங்களைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.

அப்போது காணொலி வாயிலாக, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"மறைந்த முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி.சாமி, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காத்தவராயன் ஆகிய இருவரது திருவுருவப் படங்களைத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.

சில வாரங்களுக்கு முன்பு ஜெ.அன்பழகனுக்கும் பலராமனுக்கும் படம் திறந்து புகழஞ்சலி செலுத்தினோம். பொதுவான நேரமாக இருந்தால் அண்ணா அறிவாலயத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட திமுக அலுவலகங்களிலோ இந்த படத்திறப்பும் புகழஞ்சலியும் நடந்திருக்கும். கரோனா காலம் என்பதால் காணொலி மூலமாக படத்திறப்பு நிகழ்ச்சியும், புகழஞ்சலிக் கூட்டமும் நடைபெறுகிறது.

கரோனா காலம் என்று காரணம் சொல்லி விட்டு, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் நாம் தவிர்த்து விடவில்லை.

எந்தச் சூழலிலும் இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல், வெற்றி தோல்வி பாராமல், இவர்கள் எப்படி உழைத்தார்களோ, அத்தகைய தியாகிகளுக்கு நாமும் கரோனா காலம் என்பதை எல்லாம் பாராமல் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

படத்திறப்பு நடத்துவதும், புகழஞ்சலி நடத்துவதும் ஏதோ அவர்களைப் புகழ்வதற்காக மட்டுமல்ல, மறைந்தவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடனின் அடையாளம்தான் இத்தகைய நிகழ்ச்சிகள்.

இன்றைக்குப் படங்களாகக் காட்சியளிக்கிற கே.பி.பி.சாமியாக இருந்தாலும் காத்தவராயனாக இருந்தாலும், அவர்கள் அவர்களது குடும்பத்துக்கு மட்டும் உழைத்தவர்கள் அல்ல; திமுகவுக்கு மட்டும் உழைத்தவர்கள் அல்ல; தங்களது தொகுதியையும் தாண்டி இந்த மாநிலத்து மக்களுக்காக உழைத்தவர்கள். அதனால்தான் இன்று அவர்கள் படங்களைத் திறக்கிறோம். புகழஞ்சலி செலுத்துகிறோம்.

கே.பி.பி.சாமியைப் பொறுத்தவரை இன்னமும் அவரது கள்ளமில்லாத சிரிப்பு என் மனக்கண்ணில் இருந்து மறையவில்லை!

அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபோது அவரைப் போய்ப் பார்த்தேன். அவரது கையைப் பிடித்துக் கொண்டு கலங்கினேன். அவர் முழு நலத்துடன் உற்சாகத்துடன் மீண்டும் திரும்ப வேண்டும், கட்சிப் பணிகள் ஆற்ற வேண்டும் என்று நான் சொன்னேன்.

அவரது உடல்நலனை நான் விசாரிக்கும் போதெல்லாம், தன்னுடைய தொகுதியைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்பட்டு என்னிடம் பேசினார். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மீனவர் சமுதாயத்தின் நலன் குறித்து அதிகமாகப் பேசுவார்.

சீன எஞ்சின் பொருத்தக்கூடாது என்று சொல்லி மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என்று கொச்சைப்படுத்தினார். அவருக்கு எதிராக கோபம் கொண்டு அறிக்கை வெளியிட்டவர் கே.பி.பி.சாமி. தனது உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் கொந்தளித்தார். எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய மனிதராகத்தான் அவரை ஆரம்பக் காலத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

திருவொற்றியூர் காசி விஸ்வநாதர் கோயில் குப்பத்தில் பிறந்து வளர்ந்த கே.பி.பி.சாமி, பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். மீனவச் சமுதாயத்தை சேர்ந்த கே.பி.பி.சாமி, தனது பகுதியான கே.வி.கே.குப்பத்தில் எப்போதும் திமுக கொடிகள் அதிகமாக பறக்கும் வகையில் செயல்பட்டார். அதனால் மீனவர் குப்பங்கள் தாண்டி எல்லாப் பகுதியிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது.

ஆரம்பக் காலத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளராக அவர் இருக்கும் போதே எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினராக ஆனார். மாநில மீனவரணிச் செயலாளர் பொறுப்பை தலைவர் கருணாநிதி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக அவரை மீன்வளத்துறை அமைச்சராகவே அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆக்கினார்!

மீனவர்கள் நலனுக்காகவே அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் மீன்வளத்துறைக்கு நிதி ஒதுக்கீடாக இருந்தாலும் நலத்திட்ட உதவிகளாக இருந்தாலும் புதிய யோசனைகளாக இருந்தாலும் கருணாநிதியிடம் வாதாடிப் பெறுவார்.

அவர் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது நான் துணை முதல்வராக இருந்தேன். அதனால் என்னிடமும் வந்து பல்வேறு கோரிக்கைகளை வைப்பார். அவர் வருகிறார் என்றால் மீனவர் நலன் குறித்த ஏதோ ஒரு கோரிக்கையோடு வருகிறார் என்று பொருள்.

அந்தளவுக்கு மீனவச் சமுதாயத்தின் மீது பாசமும் அன்பும் வைத்திருந்தார். மீனவ நண்பனாகவே வாழ்ந்தவர் கே.பி.பி.சாமி. அத்தகைய மீனவ நண்பரை கே.வி.கே.குப்பம் இழந்திருக்கிறது. சென்னை மாவட்ட திமுக இழந்துள்ளது; மீனவர் நலம் நாடும் மனிதரை இம்மாநிலம் இழந்துள்ளது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல் எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காத்தவராயன். முதன்முதலில் திமுகவுக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பேற்றவர் காத்தவராயன். அதன் பிறகு மாவட்டப் பிரதிநிதியாக ஆனார். மாவட்டத் துணைச் செயலாளராக இருந்து பணியாற்றினார்.

பேரணாம்பட்டு நகர் மன்றத் தலைவராக இருந்தபோது பல்வேறு சமுதாயப் பணிகளையாற்றி, திமுகவுக்கு அந்தப் பகுதியில் நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்தவர்.

சமீபத்தில் நடைபெற்ற குடியாத்தம் இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குத் தரப்பட்டது. ஆளும்கட்சியின் பல்வேறு அத்துமீறல்களையும் மீறி காத்தவராயன் வென்று காட்டினார்.

குடியாத்தம் வட்டாரத்தில் அனைத்துத் தரப்பினரும் விரும்பும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். சட்டப்பேரவையிலும் தனது தொகுதிப் பிரச்சினைக்காக வாதங்களை அழகாக எடுத்து வைப்பார். இதனைப் பார்த்த நான் அவரை அருகில் அழைத்துப் பாராட்டினேன். மக்களின் கோரிக்கைகளை மிகச்சரியாக அழகாக வாதங்களாக மாற்றி சபையில் வைத்தீர்கள் என்று சொன்னேன்.

சிலர், கட்சிப் பணியோடு நின்று விடுவார்கள். மக்கள் பணியில் கொஞ்சம் தொய்வு இருக்கும். மக்கள் பணியில் சுறுசுறுப்பாக சிலர் இருப்பார்கள். ஆனால், கட்சிப் பணியில் தொய்வு இருக்கும். கே.பி.பி.சாமியாக இருந்தாலும், காத்தவராயனாக இருந்தாலும் மக்கள் பணியையும் கட்சிப் பணியையும் ஒருசேர இரண்டு கண்களாக நினைத்துச் செயல்பட்டார்கள். இப்படித்தான் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

கட்சிப் பணியும் முக்கியம்; மக்கள் சேவையும் முக்கியம் என நினைத்து இரண்டிலும் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். அப்படிப் பணியாற்றிய கே.பி.பி.சாமியும், காத்தவராயனும் அடுத்தடுத்த நாள் மறைந்தது, எனது உள்ளத்தில் கனத்த வேதனையை ஏற்படுத்தியது.

கே.பி.பி.சாமியின் உடல் தாங்கிய ஊர்வலத்தில் நடந்து போன நான், அங்கிருந்து குடியாத்தம் சென்று காத்தவராயன் உடல் தாங்கிய ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். அந்த வேதனை இன்னும் என்னை விட்டு மறையவில்லை. இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்கள்.

கே.பி.பி.சாமிக்கு 58 வயது தான். இன்னும் பல ஆண்டுகள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டியவரை இழந்துள்ளோம்.

எனவே அனைவருக்கும் நான் சொல்வது உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள். அதுதான் மிகமிக முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கட்சிப் பணியும் ஆற்ற முடியும்; மக்கள் சேவையும் ஆற்ற முடியும்.

அதைவிட முக்கியமாக, உங்கள் குடும்பக் கடமைகள் இருக்கின்றன. இந்த மூன்றுக்காகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே, அனைவரும் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். கவனமாக இருங்கள்.

அதுவும் இது கரோனா காலம். கரோனாவுக்கு ஜெ.அன்பழகனை இழந்துள்ளோம். மேலும், சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள், சிலர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

எனவே, மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு உடல்நலக் கோளாறு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

'கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' ஆகிய மூன்றையும் வலியுறுத்தினார் அண்ணா. அதேபோல், 'உடல்நலம் - கட்சிப் பணி - மக்கள் சேவை' ஆகிய மூன்றையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று இந்த புகழஞ்சலிக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்