காத்திருக்கும் 11 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்கள்; உடனடியாக பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

இரண்டாம் நிலை காவலர் பணி நியமனத்துக்கான தேர்வில் வெற்றி பெற்ற 11 ஆயிரம் பேருக்கு பணியில் சேர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2019-ல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணி நியமனத்துக்கான தேர்வில் 21 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட பின், காலியாக இருந்த 8,500 பணியிடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன.

இதில், உடல் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 11 ஆயிரம் பேருக்கு, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தச் சூழலில் தான் சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் காவலர்களுக்கான தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட காவலர் பற்றாக்குறை காரணமாக, நடப்பு ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மேலும் 10 ஆயிரம் பேரை நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

தற்போதுள்ள கரோனா பேரிடர் சூழலில் நேர்முகத் தேர்வு நடத்துவது இயலாத சூழல் இருப்பதாலும் மேலும், இது அரசுக்கு நிதிச்சுமையை கூடுதலாக்கும் என்பதாலும் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள நபர்களை பணியமர்த்துவது குறித்து அரசு ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?

கரோனா காலத்தில் காவலர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கும் சூழலில் இந்த நியமனத்தை அரசு செய்யத் தயங்குவது ஏன்? இதனால் பணிச்சுமை குறைவதுடன், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகள் இன்னும் திறம்பட நடக்கும்.

இந்த ஆண்டுக்கான காவலர் தேர்வு நடைபெறாத சூழலில், இந்த 11 ஆயிரம் பேரில் பலர் வயது வரம்பு காரணமாக அடுத்து வரும் தேர்வில் பங்கேற்க இயலாது என்பதையும் அரசு கருத்தில் கொண்டு, தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி வாய்ப்பை இழந்த இளைஞர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது?

ஊரடங்கு காலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், வாகன தணிக்கையில் ஈடுபடவும் அதிக காவலர்கள் இருந்தால் அது மக்களுக்கும் பயன்படும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

அதே நேரம் மாநிலம் முழுவதும் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பலர் ஆறு மாதப் பயிற்சிக் காலத்தில் வருமானம் இல்லாமல் பணியாற்ற தயார் என்று அறிவித்திருப்பது, வேலையின்மை அவர்களை எந்த அளவுக்குத் துரத்துகிறது என்பதை உணர முடிகிறது.

இந்த கரோனா பேரிடர் சூழலில் ஏற்பட்டுள்ள காவலர் பற்றாக்குறையை போக்கிடவும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு காவலர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் என்பதையும் கருத்தில் கொண்டும், விரைவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை முடிப்பதுடன், காத்திருக்கும் இந்த தகுதி வாய்ந்த 11 ஆயிரம் இளைஞர்கள் உடனடியாக பணியில் சேர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்